Published:Updated:

பணம் பழகலாம்! - 1

பணம் பழகலாம்! - 1
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் பழகலாம்! - 1

புதிய பகுதிசொக்கலிங்கம் பழனியப்பன்

``மல்லிகைப்பூ கிலோ 6,000 ரூபாய்...

னி இந்த பேங்க்காரன் பூ வாங்க லோன் தரேன்னு போன் பண்ணுவானே அத நினைச்சாதான்...’’ சமீபத்தில் வலைபாயுதே பகுதியில் வெளிவந்த ட்வீட் இது. ஆமாம், இப்போதெல்லாம் புடவை வாங்க, புகைப்படம் எடுக்க எல்லாம் லோன் கொடுப்பதுதான் ஃபேஷன். 

கடன் வாங்குவதுதான் இனி ட்ரெண்டா என்றால், ஆம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இன்றைய தலைமுறையில் பெரும்பாலானோரின் எண்ணம்: முதலில் அனுபவி, பிறகு சம்பாதித்துக்கொள் என்பதே.

இந்தியாவின் பொருளாதாரத்தை 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது நிதி சார்ந்த நிறுவனங்கள்தாம். இவற்றின் தொழில் என்ன? பணத்தைச் சேமித்து வைப்பது மற்றும் கடன் கொடுப்பது. இதிலிருந்தே, கடன் வாங்குவதோ அல்லது கொடுப்பதோ நம் பொருளாதாரத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நாட்டின் பொருளாதாரம் எல்லாம் ஓகே, தனி நபராக நான் கடன்வாங்குவது சரியா என்று கேட்டால், கடன் வாங்காமல் இருப்பதே நல்லது. அதனால் கடன் வாங்குபவரெல்லாம் தவறு செய்கிறார்களா என்றால், இல்லை.

பணம் பழகலாம்! - 1

இன்று நமது இந்தியப் பொருளாதாரம், விவசாயப் பொருளாதாரத்திலிருந்து உற்பத்திப் பொருளாதாரத்தைப் பார்க்காமலேயே, சேவைப் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டது. நம்மில் பலர் லேண்ட்லைன் போனைப் பார்க்காமலேயே செல்போன் உபயோகிப்பது போலத்தான் இது.

நம் பெற்றோர் 50 வயதில் வீடு கட்டினார்கள். ஆனால், நாம் இன்று 25 வயதில் வீடு வாங்க ஆசைப்படுகிறோம். வேலைக்குச் சேர்ந்தவுடனேயே பைக், இரண்டு மூன்று வருடம் கழித்து கார், ஆடம்பரமாகத் திருமணம், வெளிநாட்டு டூர் என, கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ, கடன் வாங்கி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். மொத்தத்தில், சேர்த்து வைத்துப் பிறகு செலவழிப்பதைவிட, கடன் வாங்கி மாதாமாதம் இ.எம்.ஐ கட்டிக்கொள்ளலாம் என்பதே இன்று பலரின் முடிவு.

ஆனால், இது சரியல்ல. கல்வி, மருத்துவம், வீடு ஆகியவற்றைத் தவிர மற்ற எதற்கும் கடன் வாங்காமல் சேமிப்பிலிருந்து செலவு செய்வதுதான் சரியான வாழ்க்கைமுறை.

 கல்விக்கெனக் கடன் வாங்குவது நல்லது. ஏனென்றால், இன்றைய உலகில் அறிவுக்கு இருக்கும் மதிப்பு வேறெதெற்கும் கிடையாது. அறிவை நாம் மதிப்பிட முடியாது. ஆனால், கல்விக்காக வாங்கிய கடனை நாம் வேலைக்குச் சென்றவுடன் கட்டி முடிக்க வேண்டியது அவசியம். கடனைத் திருப்பி அடைப்பதே நமது முதல் செலவாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் ஆடம்பரக் கல்விக்காகக் கடன் வாங்கிச் செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.  நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு இன்று பலவிதமான ஸ்காலர்ஷிப்புகள் கிடைக்கின்றன.

இன்றைக்கு வங்கிகள் வழங்கும் கடன்களிலேயே குறைந்த அளவு வட்டி வசூலிக்கப்படுவது வீட்டுக்கடனுக்குத்தான். அதனால், முடிந்தளவு அதிக முன்பணம் செலுத்தி, குறைந்த இ.எம்.ஐ-யில் வீட்டுக் கடன் வாங்குவதில் தவறில்லை. இது வரிச் சலுகைகளையும் வழங்கும். ஆனால், இரண்டாவது, மூன்றாவது வீடெல்லாம் கடன் வாங்கி வாங்கக்கூடாது.

மருத்துவச் செலவு என்பது எதிர்பாராமல் வருவது. அதனால் மருத்துவச் செலவுகளை இன்சூரன்ஸ் இருந்தும் சமாளிக்க முடியவில்லை என்றால் கடன் வாங்கி மருத்துவச் செலவுகளைச் செய்யலாம். ஆனால், இவறைத்தவிர மற்ற விஷயங்களுக்குக் கடன் வாங்காதீர்கள்.

திருமணத்துக்கு இன்று பல இளைஞர்கள் கடன் வாங்குகிறார்கள். இது சில தருணங்களைத் தவிர்த்து முற்றிலுமாகத் தவிர்க்கக்கூடியது. திருமணம் என்பது 25-30 வயதுக்குள் செய்துவிட வேண்டும் என்கிற திட்டம் எல்லோருக்குமே இருக்கும். அதனால் திருமணத்துக்கான பணத்தை வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்தே சேமித்துவைக்க வேண்டும். முடிந்தளவில் திருமணத்தை மிக சிம்பிளாக நிகழ்த்தி, கடன் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதே நல்லது.

அதேபோல் ஆன்லைனில் கிரெடிட் கார்டில் பொருள் வாங்கிவிட்டு மாதாமாதம் இ.எம்.ஐ கட்டும் பழக்கும் இன்று பலருக்கும் இருக்கிறது. ஒரு பொருள் வாங்கிவிட்டு அதற்கான கடனை அடைத்து விட்டு அடுத்த பொருள் வாங்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் வீட்டுக்கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு இ.எம்.ஐ எனப் பலவிஷயங்களில் போய்ச்சிக்கினால்  நம்முடைய இயல்பு வாழ்க்கை முற்றிலுமே சிதைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம்.

- வரவு வைப்போம்...