பிரீமியம் ஸ்டோரி

எனக்கு அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. கோவையில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்துகொள்வேன். ஆனால், முழு அரசியல்வாதியாக மாறுவது எப்படி என எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யலாம்?’’

- சரவணன், கோவை


``மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறேன். ஆகவே அரசியல் ஆர்வம் இருக்கிறது என்றும், மக்கள் நலப் போராட்டங்களில் கலந்துகொள்கிறேன் என்றும் நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எந்தக் கட்சியிலும் சேர்ந்து பணியாற்றுங்கள். ஆனால், தன்னலமில்லாத கொள்கை, பொது வாழ்வில் தூய்மை, பொது நலனுக்காகப் போராடுவதில் போர்க்குணம் போன்றவற்றை உங்களின் அடிப்படை மூலதனமாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுநேர அரசியல்வாதியாக மட்டுமல்ல, மக்களின் அன்பைப் பெற்ற சிறந்த அரசியல்வாதியாகவும் உருவெடுப்பீர்கள்.  `அரசியல் ஆயிரங்காலத்துப் பயிர். அதில் உடனடியாக அறுவடை செய்ய இயலாது’ என்பதை மனதில் நிலைநிறுத்திச் செயல்படுங்கள் என்பதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஆலோசனை.’’

தெர்ல மிஸ்?!

மு.க.ஸ்டாலின், செயல்தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.


எனக்கு வயது 21. இன்ஜினீயரிங் முடித்துவிட்டேன். ஆனால் எங்கும் வேலைக்குப்போகப் பிடிக்கவில்லை. மொபைல் அடிக்‌ஷன் அதிகமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் கேம்ஸ், கொஞ்ச நேரம் சோஷியல் மீடியா எனப் போனிலேயே நேரத்தைச் செலவழிக்கிறேன். இதனால் இரவு தூக்கம் குறைந்துவிட்டது. சாப்பாட்டில்கூட கவனம் இல்லை. நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. தனிமையில் இருப்பதுபோல் உணர்கிறேன். நான் இந்த அடிக்‌ஷனிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?’’

ஆத்விக், சென்னை


``உடல் உழைப்பைத் தருபவர்களைத் தவிர, மற்ற 8 மணி நேர வேலை செய்பவர்களுக்கு வாட்ஸப்பே, மினிமலிச அலுவலகமாகிப்போயிருக்கிறது. 99 நாள்கள் ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவருவது, அந்த 99 நாள்களும் செய்தித்தாள்களைப் படிப்பது என்னும் செயல்திட்டம் பலருக்குக் கைகொடுத்திருக்கிறது. மனநல மருத்துவர்களும், ஃபிட்னஸ் பயிற்சியாளர்களும், மாதத்தில் இரு விடுமுறை நாளை மனிதர்களுடனும், காகிதப் புத்தகங்களுடனும் மட்டும் செலவழிப்பதை வலியுறுத்துகிறார்கள். 8 நாள்கள் வரை இணையத்தை முடக்கும் ஃப்ரீடம் போன்ற செயலிகளைப் பயன்படுத்துவது கல்லூரி மாணவர்களுக்கான தீர்வு. வாசகர் வட்டங்களை உருவாக்குவதும், அவரவருக்கான விருப்பத் துறைகளில் கிளப்ஸை உருவாக்குவதும்தான் பதின்பருவ மாணவர்களுக்கு டெக்னாலஜி அடிக்‌ஷன் மையங்கள் கொடுக்கும் சிகிச்சை. மதுப்பழக்கத்தை விடுவதற்கு, குறிப்பிட்ட அந்தத் தனி நபரின் ஒத்துழைப்பு அவசியம். இது தொழில்நுட்ப போதைக்கும் பொருந்தும். எனினும், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் `டெக்னாலஜி ட்ராப்’பிலிருந்து, மனிதர்களை மீட்கும் உளவியல் ஆலோசகர்கள் எந்த நேரத்திலும் அணுகும் நிலையில் இருப்பது அவசியம். இல்லையென்றால், இந்தக் குனிந்த தலைகளையும் மனங்களையும் நிமிர்த்துவது கடினம்.’’

தெர்ல மிஸ்?!

வர்த்தினி பர்வதா
நிர்வாக இயக்குநர், ​
லிட்டில்ஸ் குழந்தைகள் மையம், மதுரை


எனக்குப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அறவே இல்லை. நண்பர்களில் பலர் வாசிப்புப் பழக்கம் உடையவர்கள். அவர்களோடு பேசும்போது நான் மிகவும் பின்தங்கி இருக்கிறேனோ என உணர்கிறேன். புத்தகம் படிக்கும் பழக்கமில்லாமல் வாழ்வில் ஜெயித்தவர்கள் யாருமே இல்லையா?’’

- ராஜேஷ், மதுரை


``புத்தக வாசிப்பு உங்கள் ஆளுமையை மாற்றிவிடும். உங்கள் குணநலன்களை மேம்படுத்தும். அதை முழுமையாக உணர்ந்தவன் சொல்கிறேன்.  புத்தக வாசிப்பின் வழியே பலரின் அனுபவங்கள் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அறிவையும் ஞானத்தையும் புத்தகங்கள் தருகின்றன. நம்மையும் நாம் வாழும் சமூகத்தையும், அதன் பேதங்களையும் புரிந்துகொள்ளப் புத்தகங்கள் பெரிதும் உதவி செய்கின்றன.
இதுவரை நீங்கள் புத்தகம் படிக்கவில்லை என்றால் இன்றே படிக்கத் தொடங்குங்கள். ஆரம்பத்தில் முப்பது நாற்பது பக்கமுள்ள சிறிய புத்தகங்களை வாசியுங்கள். நிச்சயம் படித்து முடித்துவிடுவீர்கள்.
வாழ்க்கையில் எது உண்மையான வெற்றி எனத் தெரிந்து கொள்வதற்காகவாவது புத்தகங்களை வாசியுங்கள்.’’

தெர்ல மிஸ்?!

எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

“ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் ஏசி போட்டுத்தூங்கினால் உயிரிழப்பு ஏற்படும் என்கிறார்களே, இது உண்மையா?’’

- நவநீதன், நாகர்கோவில்


``உயிரிழப்பு என்பதல்ல, கார் ஐடிலிங்கில் இருக்கும்போது ஏசிபோட்டுவிட்டு காருக்குள் தூங்குவது நல்லதல்ல. காரின் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும்போது புகையிலிருந்து கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். இது ஃபயர் வால் மற்றும் காரின் பிற உள்பாகங்கள் வழியாக காரினுள் பரவும். உறக்கத்தில் இருக்கும் நபர்களுக்கு நச்சு வாயுவை சுவாசிப்பது தெரியாது. இதனால் ரத்தத் திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும். சில சமயம் இது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஒருவேளை தூங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காரின் கண்ணாடியை ஓரளவு திறந்து வைத்துத் தூங்குவது பாதுகாப்பானது. அதுபோல, நிறுத்தப்பட்ட காரில் ஏசி இயக்கத்தில் இருந்தால் அதை ரீசர்க்குலேஷன் மோடில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.’’

தெர்ல மிஸ்?!

- ரவி, தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர்,

குளோபல் சர்வீஸஸ் (கார் ஏசி சர்வீஸ் நிறுவனம்)

தெர்ல மிஸ்?!

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு