சினிமா
தொடர்கள்
Published:Updated:

யாருடைய தவறு?

யாருடைய தவறு?
பிரீமியம் ஸ்டோரி
News
யாருடைய தவறு?

யாருடைய தவறு?

வைரத்தொழில் செய்துவரும் நீரவ் மோடி குழுமம், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு செய்த 11,300 கோடி ரூபாய் மோசடியும், பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட ஏழு வங்கிகளில் ரோட்டோமாக் பேனா நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி செய்த 3,695 கோடி ரூபாய் மோசடியும், துப்பாக்கிமுனையில் நிகழ்த்தப்படும் வங்கிக்கொள்ளைகளைவிடப் படுமோசமானவை.

யாருடைய தவறு?

வங்கிநடைமுறைகளில் மோசடிகளைத் தடுப்பதற்கென்றே, அடுக்கடுக்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை தொடங்கி, ரிசர்வ் வங்கி வரை அடுக்கடுக்கான தணிக்கைமுறைகள் ஏற்கெனவே அமலில் இருக்கின்றன. போதாக்குறைக்கு இன்றைக்கு அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விரல் நுனியில் விவரங்கள் தெறிக்கின்றன. இத்தனைக்குப் பிறகும், பல்லாயிரம் கோடி மோசடிகள் தொடர்கின்றன என்றால், அது யாருடைய குற்றம்?

உடனே, ‘வங்கிகளை தனியார்மயமாக்குவதுதான் ஒரே வழி’ என்று திட்டமிட்டதுபோல குரல் எழுப்பப்படுகின்றது. குற்றம் நடந்தால், அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்று, பிரச்னைகளை தீர்க்கவேண்டுமே தவிர, ஒரேயடியாக கத்தியைத் தூக்குவது அழகல்ல. ‘‘ சம்பந்தப்பட்ட வங்கிகளை பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகம், ரிசர்வ் வங்கி, அரசாங்கம் என மூன்று தரப்பும் நிர்வாகம் செய்யும்போது, கட்டுப்பாடு என்பது சிக்கலானதாக மாறிவிடுகிறது. வங்கிகளில் தனியார் முதலீடு அதிகளவில் இருந்தால், கண்காணிப்பு என்பது இன்னும் தீவிரமாக இருக்கும். ஆனால், தனியார் முதலீடு அதிகம் வந்துவிட்டாலே எந்தத் தவறும் நடக்காது என்றும் சொல்லிவிட முடியாது’’ என்கிறார் இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன். பொருளாதார ஆலோசகர் சொல்வதை நாம் நிச்சயம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். வங்கி விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள் தலையீடு செய்வது அறவே நிறுத்தப்பட வேண்டும். பிரச்னைக்கான தீர்வின் முதல் புள்ளி இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

நடப்பது, தேர்தல் பிரசாரம் அல்ல, திரும்பத் திரும்ப காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்தது என்று கூறிக்கொண்டே இருப்பதற்கு. சகல அதிகாரங்களும் கொண்ட அரசாட்சி நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நெருங்கிவிட்டன நரேந்திர மோடி பதவியேற்று. ‘காங்கிரஸ் காலத்தில் கொள்ளையோ கொள்ளை’ என்று பிஜேபி செய்த பிரசாரத்தை நம்பித்தான் ஆட்சிக்கட்டிலைப் பரிசாகக் கொடுத்தார்கள்; நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் கொடுத்தார்கள். ஆனால், இன்னமும்கூட கொள்ளயர்களின் மீது ஆட்சியாளர்களின் சாட்டை சுழலவில்லை; தானாகத்தான் வெடித்து வெளிவந்துகொண்டிருக்கின்றன... கொள்ளைகள்.

இப்போதாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்யலாம். அதைவிட்டுவிட்டு, ‘எல்லாம் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தால், ‘இதைச் சொல்ல நீங்கள் எதற்கு மிஸ்டர் மோடி’ என்று மக்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்... ஜாக்கிரதை!