பனீர் ஃப்ரைடு ரைஸ், சீரகக் குழம்பு, வாழைக்காய் கறி... விடுமுறை சமையல்! | Paneer Fried rice, Jeera gravy, Plantain curry... Holiday Recipes

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (06/10/2018)

கடைசி தொடர்பு:19:11 (06/10/2018)

பனீர் ஃப்ரைடு ரைஸ், சீரகக் குழம்பு, வாழைக்காய் கறி... விடுமுறை சமையல்!

ஞாயிறு விடுமுறைகளில் அசைவ சமையல் என்றால், திடீரெனக் கிடைக்கும் விடுமுறைகளில் கொஞ்சம் வித்தியாசமாக சைவ சமையல்களை ட்ரை பண்ணலாம். அதற்காக, இதோ சில சைவ ரெசிப்பிக்கள்...

மோர் ரசம்

மோர் ரசம்

தேவையானவை:

புளித்த தயிர் - அரை கப்

தண்ணீர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 டீஸ்பூன்

அரைக்க :

வறுக்காத‌ வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் (உரித்தது) - 2

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய்த்துருவல்  - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள். நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும். சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

சீரகக் குழம்பு

விடுமுறை சமையல் - சீரகக் குழம்பு

தேவையானவை:

சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்

புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 5  அல்லது 6 பல்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்

வெல்லம் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

கடுகு  - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். புளியை ஒரு கப் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். இதில் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.

நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள். ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.

பனீர் ஃப்ரைடு ரைஸ்

பனீர் ஃபிரைடு ரைஸ்

தேவையானவை:

பனீர் - ஒரு கப்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

பொடியாக நறுக்கிய பூண்டு -  2 பல் 

கேரட் - 1

பீன்ஸ் - 5

ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - கால் கப்

ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதி - அரை கப்

உப்பு, மிளகு - தேவையான அளவு

ஆலிவ் எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெந்நீரில் பனீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியைக் கழுவி 2 கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊற வையுங்கள். அதே தண்ணீரோடு அரிசியை குக்கரில் சேர்த்து அடுப்பில் வைத்து மூடி போட்டு 3 விசில் வரும் வரை வேக வையுங்கள். பிரஷர் போனதும் சாதத்தை எடுத்து தனியே ஆற வையுங்கள்.

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். ஸ்பிரிங் ஆனியனின் நறுக்கிய வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள். இத்துடன் நறுக்கிய பனீரைச் சேர்த்து காய்கறிகளோடு பனீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வெந்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும். இறுதியாக உப்பு, மிளகுத்தூள், ஸ்பிரிங் ஆனியன் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.

வாழைக்காய் கறி

வாழைக்காய் கறி

தேவையானவை:

பெரிய வாழைக்காய் - 1

பெரிய வெங்காயம் - 1

மீடியம் சைஸ் தக்காளி - 2

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியா தூள்) - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்