மட்டன் தொக்கு, உப்புக் கறி... சன்டே சமையல்! | Tasty mutton thokku, salt mutton... Sunday recipes

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (07/10/2018)

கடைசி தொடர்பு:11:37 (07/10/2018)

மட்டன் தொக்கு, உப்புக் கறி... சன்டே சமையல்!

அசைவ உணவுகளில் மட்டன் ரெசிப்பிகள் கூடுதல் ருசிதான். இந்த ஞாயிறை இந்த மட்டன் தொக்கு மற்றும் கிராமத்து ஸ்டைல் உப்புக் கறியுடன் கொண்டாடுங்கள். உப்புக் கறியை மண் அடுப்புக்குப் பதில் கேஸ் ஸ்டவ்வில்கூட செய்யலாம்.

மட்டன் தொக்கு! 

மட்டன் தொக்கு

தேவையானவை: 

மட்டன் - 250 கிராம்

பெரிய வெங்காயம்  - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3 

எலுமிச்சைப் பழம் - ஒன்று 

(சாறு பிழியவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பட்டை - 2

கிராம்பு - ஒன்று

சோம்பு - அரை டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை, 

பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் 

தேவையான அளவு

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.  ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும். 

கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும். கலவையில் தண்ணீர் வற்றி கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

உப்புக்கறி

உப்புக்கறி

தேவையானவை: 

வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ 

எண்ணெய் - 200 மில்லிகிராம் 

சோம்பு - ஒரு டீஸ்பூன் 

சின்ன வெங்காயம் - 200 கிராம் 

காய்ந்த மிளகாய் - 150 கிராம் 

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் 

தண்ணீர் - 150 மில்லி 

சீரகம் - ஒரு டீஸ்பூன் 

கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப 

உப்பு - தேவையான அளவு       

செய்முறை: 

மண் அடுப்பில் தீயைப் பற்றவைத்து, மண்சட்டியை வைக்கவும். மண்சட்டி சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சோம்பு போட்டு பொரியவிடவும். பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், தயாராக இருக்கும் ஆட்டுக்கறியை மண்சட்டியில் போடவும். சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும். தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும். அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.  


டிரெண்டிங் @ விகடன்