வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (08/10/2018)

``வாடகைக்கு விடப்படும் காகம், அலைமோதும் கூட்டம்" - வைரல் வீடியோ

வட இந்தியாவில் காகத்தை வாடகைக்கு விடும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.  காலையில் நாம் எழுந்தது தொடங்கி மாலை வரை நம் கண்களில் அதிகமாகத் தென்படும் பறவை காகம். காகம் கரையும் சப்தத்தைக் கேட்காமல் நம் பொழுதுகள் விடிவதில்லை. பறவைகளில் காகம் தான் அதிக சடங்குகளுக்குள் சிக்கித் தவிக்கும் உயிரினம். காலையில் எழுந்ததும் இரண்டு காகங்களை ஜோடியாகப் பார்த்தால் நல்லது. வீட்டின் வாசலில் காகம் கரைந்துகொண்டே இருந்தால் உறவினர் வருவார் என நம்பும் மக்கள் இருக்கிறார்கள். காகத்தை தங்களின் இறந்துபோன மூதாதையர்களாக நம்பும் வழக்கம் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதன் காரணமாக தினமும் மூதாதையர்களுக்குப் படைப்பதாக நினைத்து காகங்களுக்கு உணவைப் படைப்பவர்கள் உண்டு.  

காகம்

இறந்தவருக்குச் சடங்கு நடத்தும்போது காக்கைக்கு உணவு வைப்பது , இறந்தவருக்குச் செய்யும் மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. நீர் ஆதாரங்கள் குறைந்துபோனதன் காரணமாக காகங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. பெருமளவில் காகங்களை தற்போது பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் `வட இந்தியாவில் ஒருவர் காகத்துடன் வந்து ஒரு பெரிய திட்டில் தனது காகத்துடன் அமர்ந்துகொள்கிறார். தனது முன்னோருக்குப் படையல் வைக்க விரும்புவோர் அவரிடம் வரிசையாக தாங்கள் கொண்டு வந்த உணவை நீட்டுகிறார்கள். அந்த உணவை காகத்தைச் சாப்பிட வைக்கிறார் அவர்.’ அந்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை. ஆனால், விரைவில் நமது ஊர்களுக்கும் இந்த வாடகைக் காகம் வர வாய்ப்புள்ளது!