வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:32 (08/10/2018)

முதன்முதலில் மனிதன் கண்டறிந்த எக்ஸோமூன்... `பண்டோரா'வுக்கான புதிய சாவியா?

இந்த எக்ஸோமூன்கள் குறித்த கருத்தாக்கம் ஏற்கெனவே இருந்தாலும், அதை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதன் இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கிறது இந்த நிலவு. 

முதன்முதலில் மனிதன் கண்டறிந்த எக்ஸோமூன்... `பண்டோரா'வுக்கான புதிய சாவியா?

``நாம் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டோம்" என எப்போதுமே மனிதன் கர்வம் கொள்ளமுடியாத ஓரிடம் விண்வெளி. இதுவரைக்கும் நாம் கண்டறிந்துள்ள கோள்கள், சிறுகோள்கள், விண்மீன்கள் அனைத்துமே நம் கண்ணுக்கெட்டிய, நம் தொலைநோக்கிகளின் லென்ஸூக்கெட்டிய தூரத்தில் இருந்தவை மட்டும்தான். ஆனால், அதைத் தாண்டியும் விசாலமானது விண்வெளி. ஒவ்வொருமுறை நம்முடைய தொழில்நுட்பங்கள் முன்னேறும்போதும், நம்முடைய தொலைநோக்கிகளின் திறன் அதிகரிக்கும்போதும் தொடர்ந்து புதுப்புது மர்மங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் அவிழ்ந்துகொண்டே இருக்கும். அப்படித் தற்போது மீண்டும் ஒரு மர்மமுடிச்சு அவிழ்ந்திருக்கிறது. அதன் பெயர் எக்ஸோமூன் (Exomoon).

சூரியக்குடும்பத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள முதல் நிலவு இதுதான். இந்த நிலவு அதிகளவு வாயுக்களால் நிரம்பி, உருவத்தில் நெப்டியூன் கோள் அளவுக்கு இருப்பதாகவும் உறுதிசெய்துள்ளனர். நிலவு என்றாலே ஏதேனும் ஒரு கோளைச் சுற்றிவர வேண்டுமல்லவா. எக்ஸோமூனும் வியாழன் அளவு கொண்ட ஒரு கோளை சுற்றி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதுவரைக்கும் 3,500-க்கும் மேற்பட்ட எக்ஸோபிளானட்களைக் கண்டறிந்துள்ளனர். இவை சூரியக்குடும்பத்தைத் தாண்டி வெளியே இருக்கும் பிறகோள்கள். எக்ஸோமூனோடு ஒப்பிடுகையில் இந்த எக்ஸோபிளானட்களைக் கண்டறிவது சுலபம். ஆனால், எக்ஸோமூன்களைக் கண்டறிய தொடர்ச்சியான தீவிரக் கண்காணிப்பு தேவை. அப்போதுதான் அவற்றை உணரமுடியும். பிறகோள்களைக் கண்டறிவதுபோல எக்ஸோமூன்கள் தெளிவாகத் தெரியாது. மங்கலான உருவம் மட்டுமே நமக்குக் கிடைக்கும். அதைவைத்து எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்காக விஞ்ஞானிகள் வேறோர் உத்தியைப் பயன்படுத்துவார்கள். 

உதாரணமாக ஒரு எக்ஸோபிளானட் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது நம் பூமி சூரியனைச் சுற்றிவருவது போல, ஏதேனும் ஒரு கோளை மையமாக வைத்துச் சுற்றிவரும். அது இன்னொரு சூரியன் என வைத்துக்கொள்வோம். அப்படித் தொடர்ந்து சுற்றிவருகையில் அந்தச் சூரியனின் ஒளியானது, எக்ஸோபிளானட்டின் மீது தொடர்ந்து பிரதிபலிக்கும். எப்படிச் சூரியனின் ஒளி பூமிக்கு வருகிறதோ அப்படி. இந்த ஒளி தொடர்ந்து ஒரே அளவில் இருந்தால், அந்த எக்ஸோபிளானட்டிற்கு நிலவு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த ஒளியில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால், புதிய நிலவு இருப்பதற்கான வாய்ப்புண்டு. அதாவது, அந்தச் சூரியனுக்கும், எக்ஸோபிளானட்டிற்கும் இடையே ஏதோ ஒரு நிலவு குறுக்கிடுவதன் மூலம், அந்த எக்ஸோபிளானட்டிற்கு வரும் ஒளி பாதிக்கப்படும். நம்முடைய நிலா, பூமி, சூரியன் விளையாட்டு போலத்தான் இதுவும். இந்த நிகழ்வை வைத்துத்தான் எக்ஸோமூன்கள் இருப்பது உறுதிசெய்யப்படும். பின்னர் தொலைநோக்கி மூலம் எக்ஸோபிளானட்கள் மூலம் கண்காணிப்பட்டு அதன் சுழற்சி பதிவு செய்யப்படும். அப்படித்தான் கெப்ளர் ஹப்பிள்  தொலைநோக்கிகள் மூலமாக, தற்போது முதல்முறையாக ஒரு எக்ஸோபிளானட் பதிவாகியிருக்கிறது. 

எக்ஸோமூன்

இந்த எக்ஸோமூன்கள் குறித்த கருத்தாக்கம் ஏற்கெனவே இருந்தாலும், அதை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதன் இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 8,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கிறது இந்த நிலவு. 

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வானியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டேவிட் கிப்பிங் ``சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு துணைக்கோளை கண்டறிவது இதுவே முதல்முறை. கெப்ளர் தொலைநோக்கி வழியே 40 மணி நேரத்துக்கு மேலாக ஆராய்ச்சி செய்து துல்லியமான முடிவுகளை எடுத்தோம். பெரிய அளவிலான நட்சத்திரம் ஒன்றை வியாழன் அளவில் ஒரு கோள் சுற்றி வருவதை ஹப்பிள் தொலைநோக்கி ஏற்கெனவே உறுதி செய்திருந்தது. அந்தக் கோளோடு சேர்த்து இன்னொரு பொருளால் நட்சத்திரத்தின் ஒளி ஒரு சிறிய பகுதியில் குறைவதையும் அது வளைந்து செல்வதையும் கண்டறிந்தோம். பல மணி நேர ஆராய்ச்சி மற்றும் தரவுகள் சரிபார்ப்புக்குப் பின்னர் எக்ஸோமூன் என்ற ஒன்று இருப்பதை உறுதி செய்தோம்” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் ``ஹப்பிள் தொலைநோக்கியின் முடிவுகள் முழுவதும் உறுதி செய்யப்படும் பொழுது கோள்களின் நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் துணைக்கோள்கள் எவ்வாறு உருவாயின என்கிற கொள்கை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும் இது உதவப் போகிறது. மேலும் மனிதக் குலம் விடைதேடும் கேள்வியான வேற்றுக்கிரக வாசிகள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்கு இது நிச்சயம் வழிவகுக்கும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் டேவிட் கிப்பிங். 

இதுவரைக்கும் மனிதன் வசிப்பதற்கான சிறந்தகோள் என்று எதுவுமே கண்டறியப்படவில்லை. சாத்தியக்கூறுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஏலியன்கள் பிறகோள்களில் வசிக்கும் வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கும் விடையில்லை. ஆனால், தற்போது சூரியக்குடும்பத்துக்கு வெளியே பூமி - நிலவு போன்ற ஒரு கூட்டணி கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. இதேபோல கூடிய விரைவில் பூமியைப் போலவே ஒரு கிரகம் கண்டறியப்பட்டுவிட்டால் இதுவரைக்கும் அவதாரில் மட்டுமே நாம் பார்த்துவந்த பண்டோரா, நிஜத்திலும் சாத்தியமாகலாம்!