இந்தியாவின் முதல் `நெட்ஃப்ளிக்ஸ் அடிக்‌ஷன்’ நோயாளி! என்னவெல்லாம் ஆச்சு தெரியுமா? | Jobless suffers from Netflix addiction

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:10 (08/10/2018)

இந்தியாவின் முதல் `நெட்ஃப்ளிக்ஸ் அடிக்‌ஷன்’ நோயாளி! என்னவெல்லாம் ஆச்சு தெரியுமா?

பொழுதுபோக்கு என்பது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக ஆகிவிட்டது. அது இல்லையென்றால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வேலைப் பளு மற்றும் அழுத்தங்களிலிருந்து மனதைச் சீராக வைத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் டிவியே பொழுதுபோக்கு சாதனமாக கடந்த வருடங்களாக இருந்து வந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இன்று நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளும் பிரபலமடையத் தொடங்கியுள்ளன.

டிவி போல் அல்லாமல் எப்போது, எங்கு வேண்டுமானாலும் இதில் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களைக் காண முடியும் என்பதால் ஒரு சீரிஸ் பார்த்துக்கொண்டு இருப்பவர் டிவியைப்போல அடுத்த எபிசொடுக்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதில்லை. இதனால் தொடர்ந்து பல மணிநேரத்தை ஒரே சீரிஸுக்காக செலவிடுவது இன்று வழக்கமாகிவிட்டது. இப்படித் தொடர்ந்து பார்ப்பதை 'Binge Watching' என்று ஆங்கிலத்தில் அழைப்பர். 

நெட்ஃப்ளிக்ஸ்

பெங்களூரு National Institute of Mental Health and Neurosciences (Nimhans)வில் இருக்கும் Service for Healthy Use of Technology (SHUT) கிளினிக்கில் முதல் 'நெட்ஃப்ளிக்ஸ் அடிக்‌ஷன்' நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். 26 வயதான அவர் வேலையில்லாமல் இருந்தமையால் வெளியுலகத்தில் இருக்கும் பிரச்னைகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள நெட்ஃப்ளிக்ஸை நாடியுள்ளார். இது ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ``பாதிக்கப்பட்டுள்ள அவர் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 7 மணிநேரங்களையாவது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கழித்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அவரை எதாவது வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்குமாறு அழுத்தம் தரும்போதும், நண்பர்கள் நல்ல நிலையில் இருப்பதைக் காணும்போதும் நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்து வெளிவாழ்க்கையிலிருந்து தப்பித்துள்ளார். இதன்மூலம் பிரச்னைகள் மறந்து ஆனந்தமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார் அவர்" என்றனர்.

ஆனால், இது பல நாள்களாகத் தொடர்ந்ததால், காலை எழுந்ததும் தானாக நெட்ஃப்ளிக்ஸ் ஓப்பன் செய்துவிடுவார். ஆரம்பத்தில் ஆனந்தமாக இருந்ததாலும் ஒரு கட்டத்துக்கு மேல் தன் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருப்பதை உணர்ந்துள்ளார் அவர். மேலும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் பார்ப்பதால் கண் வலி, தூக்கமின்மை, மீளா சோர்வு என மன மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்க ஆரம்பித்தார். எனவே, மருத்துவ உதவியை நாடியுள்ளார். 

இதை ரிலாக்ஸ் செய்யும் தெரபிகள், பயிற்சிகள், மற்றும் தொழில் சார்ந்த கவுன்சலிங் மூலம் குணப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இது தீவிர நிலைதான் என்றும் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பர் என்றும் கூறப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க