தண்ணீர் மூலம் இயங்கும் 'ஹைட்ரோ பைக்'... 'இளம் விஞ்ஞானி' முருகன் கண்டுபிடிப்பு! | Madurai based emerging scientist invents a hydro bike

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (08/10/2018)

தண்ணீர் மூலம் இயங்கும் 'ஹைட்ரோ பைக்'... 'இளம் விஞ்ஞானி' முருகன் கண்டுபிடிப்பு!

"என்னிடம் இதுபோல பல செயல்முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும்" என்கிறார் முருகன். வில்லேஜ் விஞ்ஞானிக்கு உதவி கிடைக்குமா?

தண்ணீர் மூலம் இயங்கும் 'ஹைட்ரோ பைக்'... 'இளம் விஞ்ஞானி' முருகன் கண்டுபிடிப்பு!

ரு லிட்டர் தண்ணீர், சிறிது உப்பு, சோலார் பேனல் உதவியுடன் 40 கிலோமீட்டர் தூரம் வரை பைக்கில் செல்லக்கூடிய வகையில் பைக்கை கண்டுபிடித்துள்ளார் மதுரை மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன். பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாமல் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துவருகிறார். அவரிடம் பேசினோம்.

இளம் விஞ்ஞானி

``நான் மதுரை அரசு ஐ.டி.ஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். எனக்குச் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். பொருளாதார வசதி கிடைக்காததால் என் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தவித்துவருகிறேன்.

4-ம் வகுப்பு படித்தபோது ஆசிரியர் அருள் என்பவர்தான் எனக்குள் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அறிவியல் விந்தைகளைப் பற்றி நிறைய கூறினார். இதனால் அடுத்தடுத்த வகுப்புகளில் அறிவியலைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

பிரேம் ரோஸ் என்கிற ஆசிரியர் எனக்கு குட்டிக்குட்டிக் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். 6-ம் வகுப்பு படிக்கும்போது ஜே.சி.பி விளையாட்டுப் பொருள் ஒன்றைக் கண்டறிந்து பாராட்டுகளைப் பெற்றேன். அதுதான் என்னுடைய முதல் கண்டுபிடிப்பு.

7-ம் வகுப்பு படிக்கும்போது காதுகேளாதவர்கள், பற்களில் கடித்து பாடங்கள் படிக்கும்படியான  கருவியைக் கண்டறிந்தேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது தரையிலும், தண்ணீரிலும் இயங்கும் சைக்கிள் ஒன்றைக் கண்டறிந்தேன் அதற்காக அப்துல் கலாம் அவர்களின் கரங்களால் 2014-15க்கான இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றேன். அதே ஆண்டு மணிக்குக் 65 கிலோமீட்டர் வேகம் செல்லும் அளவுக்குச்  சைக்கிள் ஒன்றை உருவாக்கி, பரிசுகள் பெற்றேன்.

2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ஸ்பேஸ் கிட்ஸ் சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதைச் சென்னையில் பெற்றேன். அதைத் தொடர்ந்து வீடர் கார் ஒன்றைத் தயார் செய்தேன். அதை விவசாயத்துக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சாதாரணமாகப் பயன்படுத்துவதற்கும் என முப்பரிமாணப் பயன்களில் உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை.

ஹைட்ரோ பைக்

தற்போது `ஹைட்ரோ பைக்' எனச் சொல்லக்கூடிய தண்ணீர் மூலம் இருசக்கர வாகனம் இயங்கும் முறையைக் கண்டறிந்துள்ளேன். இந்தக் கண்டுபிடிப்பை முடிக்க, நான்கு வருடங்கள் தேவைப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புக்காக கோவையில் நடைபெற்ற 2018 ஹேக்கத்தான் போட்டியில்விஞ்ஞானி வெற்றிபெற்றுள்ளேன். இந்தப் போட்டியில் பங்கேற்க 4 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி மேலூரிலிருந்து கோவைக்குச் சென்றேன். பலரும் என்னைப் பாராட்டினார்கள். பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத இந்த ஹைட்ரோ பைக், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஹைட்ரோ பைக்கை இயக்க, 1 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் உப்பு சேர்க்க வேண்டும். வண்டியில் ஃபிட் செய்து டேங்கில் அடைக்க வேண்டும். அதன் மேலே சோலார் பவரை வைத்து ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரிக்க வேண்டும். ஆக்ஸிஜன் பிரிந்து வெளியேறிவிடும். ஹைட்ரஜன் இன்ஜின் செயல்பட எரியூட்டியாக இருக்கும். இந்தத் தத்துவத்தில்தான் இந்த ஹைட்ரோ பைக் செயல்படுகிறது. பைக்கை ஸ்டார்ட்செய்ய மட்டும் சிறிது அளவு பெட்ரோல் தேவைப்படும். இந்த முறையை நாம் கையாண்டால் அதிக பணத்தையும் பெட்ரோல் தேவையையும் குறைக்கலாம்.

என்னிடம் இதுபோல பல செயல்முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். என் கண்டுபிடிப்புகள் என்னோடு நின்றுவிடாமல் பள்ளி மாணவர்களையும் சென்றடைகின்றன. பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிவருகிறேன்'' என்றார்.

முருகன் தனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கிடைத்த சான்றிதழ்களை நம்மிடம் எடுத்துக் காண்பித்தார். முருகனின் தந்தை, கல் உடைக்கும் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இந்த வில்லேஜ் விஞ்ஞானிக்கு உதவிக் கிடைக்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்