நகரங்கள் சரியாகத் திட்டமிடப்படுகின்றனவா? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-17 | Poor water management and other Problems in city planning - Stories of water mafia Episode-17

வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (09/10/2018)

கடைசி தொடர்பு:12:02 (09/10/2018)

நகரங்கள் சரியாகத் திட்டமிடப்படுகின்றனவா? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-17

சென்னை மட்டுமல்லாது இந்தியப் பெருநகரங்கள் அனைத்திலுமே கவனத்தில் கொள்ளப்படுவது தண்ணீர் தேவை, விநியோகம் மற்றும் பற்றாக்குறை மட்டுமே. ஆனால், கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது.

நகரங்கள் சரியாகத் திட்டமிடப்படுகின்றனவா? - தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-17

ண்ணீர், சமூகத்தின் மிக முக்கியமான அத்தியாவசியமான மூலப்பொருள். ஆனால், எப்போதுமே குறைமதிப்பீட்டில் சிக்கிக்கொள்கிறது. அதன் தேவை நகரங்கள் முன்பு கொண்டிருந்த பல நீர்நிலைகளை அழித்துவிட்டது. நாம் கண்முன் பார்த்துக்கொண்டிருக்கும் அப்படியொரு நகரம்தான் சென்னை. சென்னையின் ஆறுகள் அனைத்துமே பயன்படுத்தத் தகாத வகையில் மாசடைந்திருக்கிறது. இருந்தும் எப்படி அதன் தண்ணீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது?

சென்னையில் 2003/04-ம் ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. சென்னையின் 400 வருட வரலாற்றில் இதுவரை அதுபோன்றதொரு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. அதன் முக்கியமான 4 நீர்நிலைகளும் முற்றிலுமாக வற்றியது. அந்த இரண்டு ஆண்டுகளில் பருவமழையும் பொய்த்துவிட்டது. நிலத்தடி நீர் மிக ஆழத்துக்குச் சென்றது. குழாய்வழி நீர்விநியோகம் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. நான்கரை லட்சம் மக்கள் தொகை கொண்டிருந்த சென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 600 மில்லியன் லிட்டர்கள். ஆனால், மெட்ரோ நிர்வாகம் வெறும் 175 மில்லியன் லிட்டர்களே விநியோகித்தது. அதுவும் ஒருநாள் விட்டு ஒருநாள்தான். அதிலும் 100 மில்லியன் லிட்டர்கள் நகரத்துக்கு 150 கி.மீ அப்பாலிருந்து லாரிகளிலோ ரயில்களிலோ கொண்டுவரப்பட்டது. நகரவாசிகள் தண்ணீருக்காகத் தனியார் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது ஒரு மாதத்துக்குக் குடியிருப்புகளுக்குச் செய்த தண்ணீர் விற்பனையின் மதிப்பு மட்டுமே 50 கோடி ரூபாய்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருங்காலத்தில் இதுபோன்ற பேரபாயங்கள் ஏற்படாமலிருக்கத் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். மாநில அரசு வீராணம் ஏரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது நகரத்திலிருந்து 225 கி.மீ தள்ளியிருக்கும் தென்மேற்குப் பருவமழையை நம்பியிருக்கும் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் எடுத்துக் கொள்வதற்கான திட்டம். அதுபோக தெலுங்கு கங்கா திட்டம் மூலமாகக் கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. மீதித் தேவைக்கு மழை நீரை நம்பியே இருக்க வேண்டியிருந்தது.

மீஞ்சூர்

அரசாங்கம் சிக்கலற்ற நீர் விநியோகத்துக்கு வழிசெய்ய நினைத்தது. சென்னையின் ஒருபுறமிருந்த மிகப்பெரிய கடலோரம் அதன் கண்களை உறுத்தியது. கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைத்தார்கள். அந்தத் தண்ணீரின் விலை அதிகமாக இருந்தது. அதற்கான செலவும் அதிகம். பல தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டன. அதனால் பூட் ( BOOT- Build, Own, Operate and Transfer) என்ற கட்டுமானத்தை நிர்மாணித்து, அதற்குச் சொந்தம் கொண்டாடவும், இயக்கவும், விநியோகிக்கவும் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கத் திட்டமிட்டார்கள். அரசாங்கம் ஐ.வி.ஆர்.சி.எல் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது. அந்த நிறுவனம் ஸ்பெயினைச் சேர்ந்த பெஃபெஸா அகுவா (Befesa agua) என்ற நிறுவனத்தோடு பங்குதாரராக இணைந்து மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைத்தது. அவர்களிடம் குடிநீரை நகர நிர்வாகம் லிட்டருக்கு 4.8 பைசா என்ற விலைக்கு வாங்கி மக்களுக்கு விநியோகிக்கும். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தம் அடுத்த 25 வருடங்களுக்குப் போடப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 0.2 பைசா உயர்த்தப்பட்டு 5 பைசாவுக்கு விற்கப்படுகிறது.

அதற்குப் பிறகு கட்டுமானங்களும், இயக்கங்களும் தனியார் கையிலிருக்கும். ஆனால், ஆலை அரசுக்குச் சொந்தமானதாக இருக்கும். இயக்கத்துக்கான தொகையும் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் என்ற திட்டத்தில் நெம்மேலி நிலையம் அமைக்கப்பட்டது. இரண்டிலிருந்தும் லிட்டருக்கு 5 பைசா என்ற விலையில் மொத்தமாக நாளொன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் நகருக்கு விநியோகிக்கப்படுகின்றது. வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர்கள், கிருஷ்ணா நதியிலிருந்து 500 மில்லியன் லிட்டர்கள், நெம்மேலி மற்றும் மீஞ்சூரிலிருந்து தலா 100 மில்லியன் லிட்டர்கள் என்று மொத்தமாக 880 மில்லியன் லிட்டர்கள் சென்னைக்குக் கிடைக்கின்றன. அதுபோக பூண்டி, சோழவரம் போன்ற ஏரிகள் மற்றும் நகரத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் உட்பட மொத்தமாக ஒரு நாளைக்கு 1535 மி.லி கிடைக்கின்றன. சென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை 2248 மி.லி. சுமார் 700 மி.லி தண்ணீர் பற்றாக்குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.

அதை நிலத்தடி நீர் மூலமாகவும் சென்னையைச் சுற்றியிருக்கும் கிராமங்களின் விவசாய நிலத்திலிருந்து உறிஞ்சியெடுத்துவரும் லாரிகள் மூலமாகவும் சமன்செய்து தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளையும் அழித்துவிட்ட பிறகும் சென்னைக்கான தண்ணீர் கிடைத்துக் கொண்டேயிருப்பதற்கு இவ்வளவு வழிவகைகளைச் செய்துவைத்துள்ளோம். இவையனைத்தும் சரியானதுதானா. நகரம் என்பதால் அதற்குக் கிடைக்கவேண்டிய தண்ணீருக்கு முக்கியத்துவம் தரும் நிர்வாகம் ஏன் அதைச் சுற்றியிருக்கும் ஊர்களில் தண்ணீர் எடுக்கும்போது அவர்களுக்குத் தண்ணீர் இருக்கிறதா என்பதைச் சிந்திக்கத் தவறியது. காரணம், அங்கு தொழிற்சாலைகள் இல்லை. சென்னைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் வருகிறதா. இந்திய நகரங்களின் கட்டுமானத் திட்டங்களும் அதன் மேலாண்மைத் திட்டங்களும் மிகவும் சிக்கலானது.

சென்னை மட்டுமல்லாது இந்தியப் பெருநகரங்கள் அனைத்திலுமே கவனத்தில் கொள்ளப்படுவது தண்ணீர் தேவை, விநியோகம் மற்றும் பற்றாக்குறை மட்டுமே. ஆனால், கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறது. அது எவ்வளவு தண்ணீர் தேவை, எவ்வளவு விநியோகிக்கப்படுகிறது, அதுவும் யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்படுகிறது என்பவைதாம். அதை இந்தியப் பெருநகரங்கள் மட்டுமல்லாது எங்குமே கண்டுகொள்ளப்படுவதில்லை. விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு முறையான கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. நகரங்கள் தண்ணீர் மேலாண்மை குறித்துப் பேசும்போது தவிர்க்கமுடியாமல் பேசவேண்டிய இன்னொன்று கழிவு மேலாண்மை. நவீனகால இந்திய நகரங்களில் நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மிகவும் எளிமையானது. வாங்குங்கள், பயன்படுத்துங்கள், கழிவாக வெளியேற்றிவிட்டு மறந்துவிடுங்கள். நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அதுபாட்டுக்குச் சென்று நீர்நிலைகளில் கலந்து கடலுக்குச் சென்றுவிடும்.

இதனால் நமது நகரங்கள் இரண்டு முக்கியப் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் முறையான கழிவுநீர் மேலாண்மை இல்லாததால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளும் நீர்நிலைகள் அழிந்து அதன்மூலம் மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறை. இது இப்படியே போனால், நமது நீர்நிலைகள் கழிவுநீர்ச் சாக்கடைகளாகி நம் கழிவுகளிலேயே நாம் மூழ்கிவிடுவோம். ஒருபுறம் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. மறுபுறம் அனைத்து நீர்நிலைகளும் தொடர்ச்சியாக மாசடைந்து கொண்டேயிருக்கிறது. அது சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் பல்வேறு உடற்கோளாறுகளுக்கும் வழிவகுக்கிறது. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்புகளுக்கு டையரியா போன்ற நீர்சார்ந்த நோய்களே இன்றும் காரணமாக இருந்துவருகின்றன.

நகரங்கள்

இந்தியா மிகவேகமாக நகரமயமாகிக்கொண்டிருக்கிறது. நகரங்களின் விளிம்புகள் விரிந்து கொண்டேயிருக்கின்றன. தற்போது நாட்டின் மக்கள்தொகையில் 34 கோடி மக்கள் நகரவாசிகளாக இருக்கிறார்கள். அதுவே அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரலாம். அதே நேரத்தில் தொழிற்சாலைகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பெருத்துக்கொண்டிருக்கும் நகரத்தில் பணக்கார சொகுசு வில்லாக்களின் ஆதிக்கத்தால் வாழ இடமின்றி மூலையில் தூக்கி வீசப்பட்டு நகர்ப்புறக் குடிசைகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையும் இதனால் அதிகமாகும். இவற்றின் விளைவுகள் தண்ணீர் விநியோகம் மற்றும் பயன்படுத்திய நீரைக் கழிவாக வெளியேற்றுவது என்ற இரண்டையும் வெகுவாகப் பாதிக்கின்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் நகரவாசிகளின் எண்ணிக்கை அதிகமானாலும் கிராமவாசிகளின் எண்ணிக்கை இப்போதிருக்கும் அதே 60% சதவிகிதமாகத்தானிருக்கும். அவர்கள் அப்போதும் விவசாயத்தை நம்பியே இருப்பார்கள். இப்போதே விவசாய நிலங்களில் துளையிட்டுச் சுரண்டிவரும் தண்ணீரால் நகர்ப்புறங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க வருங்காலத்தில் ஏற்படும் நகரத்தின் அபரிமித வளர்ச்சியையும், கிராமங்களின் தண்ணீர் தேவையையும் எப்படி ஒருசேர சரிசெய்வது. மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் பல அமைத்து அதைத் தனியார் கையில் கொடுப்பதா அல்லது பல தண்ணீர் லாரிகளைக் குத்தகைக்கு எடுத்து இப்போது போலவே கிராமங்களின் நீரைக் கொள்ளையடிப்பதா, இல்லை முறையான நகர்ப்புற நீர் மற்றும் கழிவு மேலாண்மையை நிறுவுவதா?

நிர்வாகங்களால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது தனியார் முதலீடுகளையும் தனியாரின் பங்களிப்பையும் நகர நீர் மேலாண்மையில் அதிகப்படுத்துவது. உண்மையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புதான் இந்திய நகரங்களின் நீர் மற்றும் கழிவு மேலாண்மையைச் சரிசெய்வதற்கான தீர்வா?

முந்தைய அத்தியாயம் படிக்க: அத்தியாயம் 16

-தொடரும்.


டிரெண்டிங் @ விகடன்