Published:Updated:

''வயித்துப் பொழப்பு இதைச் செய்றோம்!'' - கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பெண்கள்

''வயித்துப் பொழப்பு இதைச் செய்றோம்!'' - கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பெண்கள்
''வயித்துப் பொழப்பு இதைச் செய்றோம்!'' - கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பெண்கள்

காலை 9 மணி... அலுவலகப் பரபரப்பில் போய்ட்டிருந்தேன். வழியில் சாலையின் வலதுபுறத்தில் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சிலர் சுத்தம் செஞ்சுட்டிருந்தாங்க. கொஞ்சம் தள்ளி தரையில் உட்கார்ந்து ஒரு அம்மா அவங்க குழந்தைக்குப் பால் கொடுத்துட்டிருந்தாங்க. அதைப் பார்த்த நொடியில் மனசு உறுத்த ஆரம்பிச்சிருச்சு. வண்டியிலிருந்து இறங்கி அவங்க பக்கத்துல போனேன். அந்த இடத்தை நெருங்கறப்பவே, கழிவுநீர்த் தொட்டியின் நாற்றம். அந்த நாற்றத்துக்கு நடுவுலதான் குழந்தைக்குப் பால் கொடுத்துட்டிருக்காங்க. குழந்தை பால் குடிச்சு முடிச்சதும், குழந்தையை ஓரமாக் கிடத்திட்டு, வெளியே எடுத்துப் போட்டிருந்த கழிவுகளை அள்ளப் போயிட்டாங்க. 

அவங்கக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ, ``என்கிட்ட எதுவும் கேட்காதீங்கம்மா''னு முகத்தைக்கூடப் பார்க்காமல் வேலையிலே கவனமா இருந்தாங்க. இன்னும் சிலரும் பேசறதுக்கு முன்வரல. கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுட்டிருந்தேன். ``ஏங் கண்ணு... நாங்க இந்த நாற்றத்துக்காக முகமூடி போட்டிருக்கோம். உனக்கு எதுக்குத் தாயி இது. பேசாம போ''னு ஒரு அம்மாச்சி கனிவோடு பேச, ``நீங்களாச்சும் என்கிட்ட பேசுவீங்களா?''னு கேட்டேன். கொஞ்சம் அமைதியா இருந்துட்டு, ``சரி... சரி... சட்டுபுட்டுன்னு பேசிட்டு போயிடு'' என்றார்.

``விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் எங்க ஊரு. விழுப்புரத்தைச் சுற்றி நிறைய கிராமங்களிலிருந்து மத்தவங்க வந்திருக்காங்க. 19 ஜோடிகள் இங்கே வந்திருக்கோம். மொத்தமா 38 பேரு. குடும்பம் குட்டிகளும் கிடக்குங்க. புருசனும் பொஞ்சாதியும் சேர்ந்து  வேலை செஞ்சாதானே குடும்பத்தை நடத்தமுடியும். பொழப்புக்காக வரும்போது புள்ளைகளை யார்கிட்ட விடமுடியும் சொல்லு. அதனாலதான் கூட்டிட்டு வந்துருவோம். நாங்க சுத்தம் செய்யும்போது எங்க கண் பார்வையிலேயே புள்ளைக கிடக்குறது ஒரு வகையில பாதுகாப்புதானேம்மா.

இங்கே மழைக்காலத்துல தண்ணீர் தேங்காமல் இருக்கிறதுக்காகக் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யறதுக்கு கான்ட்ராக்ட்ல வந்திருக்கோம். வந்து ஒரு மாசம் ஆச்சு. கால்வாயில் தண்ணீர் அதிகமா இருந்தா எங்களை அள்ள விடமாட்டாங்க. காய்ஞ்சு வறண்ட மண்ணு மாதிரி இருக்கும்போதுதான் துப்புரவு வேலையை ஆரம்பிக்கணும். உடம்புக்கு வியாதி வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு தற்காப்புக்காக மாத்திரை கொடுக்கறாங்க. மூஞ்சுக்கும் கைக்கும் கிளவுஸ் கொடுத்திருக்காங்க.

இது கூலி வேலைதான். வாரச் சம்பளம் போடுவாங்க. சாப்பாடு செலவுகளை நாங்களே பார்த்துக்கணும். தங்கற இடம் மட்டும் ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காங்க. இதுவரை 15 இடங்களில் சுத்தம் பண்ணிட்டோம். கீழே குனிஞ்சு அள்ளிக் கொட்டுறதுனால கை ரொம்ப வலிக்கும். மேல்வலி இருந்தாலும் அதைப் பொறுத்துட்டுதான் வேலை செய்யணும். வேற என்னத்தச் சொல்றது? இந்த நாற்றம் குடலைப் புரட்டும்தான். வயித்துப் பொழப்புக்காகப் பொறுத்துதானே ஆகணும்.

இப்படிக் கழிவுகளைச் சுத்தம் செய்யற நாங்க ஒரு இடத்துக்கு வந்ததும் முதல்ல தேடறது நாங்க பாத்ரூம் போறதுக்குத்தான். சில இடங்களில் ரொம்ப தூரத்துல இருக்கும். வீட்டுக்குத் தூரமானா மாத்துறதுக்காச்சும் பாத்ரூமுக்குப் போகணும்ல. கழிவுகளை அள்ளும்போது ரொம்ப கை வலிச்சதுன்னா, கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு நிதானமா வேலையைப் பார்ப்போம். அந்தச் சுதந்திரம் எங்களுக்கு இருக்கு கண்ணு'' என வெள்ளந்தியா சிரிக்கிறார் அந்த அம்மாச்சி.

மலக்குழியில் மூச்சை அடைக்கும்

நான் யார்..?

என்கிற `பரியேறும் பெருமாள்' படத்தின் பாடல் வரிகள் நினைவில் ஓடி மனதைப் பிசைந்தது.