இல்லாத மால்குடிக்கு வெல்கம்..! ஆர்.கே.நாராயண் பிறந்ததினப் பகிர்வு | RK Narayan birthday special article

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (10/10/2018)

இல்லாத மால்குடிக்கு வெல்கம்..! ஆர்.கே.நாராயண் பிறந்ததினப் பகிர்வு

இல்லாத மால்குடிக்கு வெல்கம்..! ஆர்.கே.நாராயண் பிறந்ததினப் பகிர்வு

"நீங்கள் கவனக்குறைவான ஓர் எழுத்தாளர். சில சமயங்களில், நீங்கள் சரியான வார்த்தையைக்கூட எழுத முயல்வதில்லை. ஒரு வரியை குழப்பமில்லாமல் எழுதி முடிக்க, நீங்கள் முயல்வதில்லை” என்று பிரபல எழுத்தாளர் கிரஹாம் கிரீனே இவரிடம் கூறினாராம். `இவருடைய கதைகள், வாசகர்களுக்கு ஏமாற்றம் தருபவையாகவே இருக்கின்றன. ரொமான்டிக் சென்ஸ், அழுத்தமான முடிவு எனக் கதைகளில் எதுவும் இல்லை. இவருடைய கதைகள் எங்கு செல்கின்றன. அப்படி, இவருடைய கதைகளில் என்னதான் இருக்கிறது' என்று விமர்சனங்களால் குறைத்து மதிப்பிடப்பட்டவர். ஆனால், இதே எழுத்தாளருக்குத்தான், பின்னாளில் இந்தியாவின் பிரதமர் உட்பட உலகம் முழுவதும் பல லட்சம் வாசகர்கள் இருந்தனர். அவர்தான், ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி. எல்லோரும் அறியும்படி ஆர்.கே.நாராயண்.

ஆர்.கே.நாராயணன்

கறுப்பு ஃப்ரேம் மூக்குக்கண்ணாடி, கழுத்து வரையிலான டையுடன் டைட்டாக அணிந்திருக்கும் கோட்டு, முகத்தில் எப்போதும் சிரிப்பு என, ஒரு நீதிபதியைப் போன்ற தோற்றமுடையவர் ஆர்.கே.நாராயண். தமிழ்நாட்டிலிருந்து எழுதும் ஓர் எழுத்தாளர் என்பதற்கான எந்த அடையாளமும் அவரிடம் இருந்ததில்லை.

ஆர்.கே.நாராயண், சென்னையில் 1906-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்தார். ஆங்கில மொழியிலேயே தன்னுடைய புத்தகங்களை எழுதிய ஆர்.கே.நாராயண், தன்னுடைய கல்லூரி நுழைவுத்தேர்வில் ஆங்கிலத்திலேயே தோல்வியடைந்தார் என்பது வேடிக்கையானது. படித்து முடித்தவுடன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த 5 நாள்களிலேயே வேலையை விட்டுவிட்டு எழுதத் தொடங்கினார்.

சிறுவயது முதலே படிப்பதில் மிகவும் ஆர்வம்கொண்டவர். ஒரு நாளைக்குக் கிட்டத்த 2,000 சொற்கள் வரை எழுதக்கூடியவர். அப்படி எழுதியதைத் திரும்பத் திரும்பப் படித்துத் திருத்துவாராம். எழுதுவதில் எந்தவிதச் சிரமும் இவருக்கு இருந்ததில்லை என இவரே சொல்வார். ஆனால், இவருடைய படைப்புகள் வெளியாவதற்கு மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துள்ளன எனலாம். 1930 முதல் முழுநேர எழுத்தாளராக இருந்த இவரின் முதல் நாவல் `சுவாமி ஆண்ட் ஃப்ரெண்ட்ஸ்’. பல சிரமங்களால் வெளியிட முடியாமல் இருந்த இந்த நாவல், அவரின் நண்பர் மூலம் பிரபல எழுத்தாளர் கிரஹாம் கிரீனேவுக்குச் சென்றதாம். இவர்தான் இந்த நூலை ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றின் வழியாக வெளியிட்டார். இந்த நாவல் வெளிவந்த சில மாதங்களிலேயே பல்லாயிரம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. உலகம் முழுதும் பல வாசகர்களையும் இவருக்குப் பெற்றுத்தந்தன.

ஆர்.கே.நாராயணன்

சுவாமி ஆண்ட் ஃப்ரெண்ட்ஸ்... சுவாமி என்னும் சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை மையமாகக்கொண்டது இந்த நாவல். சுவாமி, பள்ளிக்கூடத்தையும் வீட்டுப்பாடத்தையும் வெறுக்கும் நம்மைப் போன்ற சாதாரண ஒரு சிறுவன்தான். அவனுடைய வாழ்க்கை, சுற்றியிருக்கும் நட்பு, அன்பு, பிரிவு போன்றவற்றோடு விடுதலை போராட்டத்துக்கான காலகட்டத்தில் கதை நகர்வதால் சமகால அரசியலையும் அந்தச் சிறுவனின் மனநிலையிலிருந்து வெளிப்படுத்துவதில்தான் ஆர்.கே வெற்றிபெறுகிறார். இந்த நாவலில் வரும் மால்குடியைத் தேடி அலையாத மனங்கள் இருக்காது. எங்கு இருக்கிறது இந்த மால்குடி, எந்த மாநிலம், எந்த மாவட்டம் என்று படிப்பவர்களை `ஒருமுறையேனும் அந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும்’ என்று எண்ணவைத்திருந்தார்.. மால்குடி என்ற ஊர் உண்மையில் கிடையாது என்பதெல்லாம் அவரின் வாசகர்களுக்குப் பெரிய ஏமாற்றம்தான்.

மால்குடி எப்படி உருவானது என்று, ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் நேர்காணலில் அவரிடம் கேட்கும்போது ``ஒரு சின்ன ரயில்நிலையம் இருக்க வேண்டும். அதில் சில மரங்கள் இருக்க வேண்டும். அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்துக்கு சுவாமியும் அவனது நண்பர்களும் அடிக்கடி சென்று வருவார்கள். இந்த ரயில்நிலையம் உண்மையில் இல்லாத ஊரின் பெயராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியையும், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மாங்குடியையும் சேர்த்து மால்குடி என்று உருவாக்கினேன்” என்று கூறுவார். தனது பெரும்பாலான கதைகளில் இந்த மால்குடியைப் பயன்படுத்தியதால் இவரின் வாசகர்களுக்கு மால்குடி உண்மையான ஊராகவே ஆனது. அந்த மால்குடிக்கு இன்று வரை நாயகன் இவர்தான்.

ஆர்.கே.நாராயணன்

`சுவாமி ஆண்ட் ஃப்ரெண்ட்ஸ்’ புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்பாகி `சுவாமியும் சிநேகிதர்களும்’ என்ற பெயரில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

`The Bachelor of arts’, `The Dark Room’, `The English Teacher’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய `The Guide’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றையும் புதிய உருவாக்கமாக எழுதியுள்ளார். `My days’ என்று தனது நினைவுகளையும் ஒரு நூலாக எழுதியுள்ளார். `Under the banyan tree’ உட்பட பல சிறுகதைகள், பயண நூல்கள் என்று பல நூல்களை வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தார். சிறுகதை, கட்டுரை எனப் பல வடிவங்களில் எழுதினாலும் சிறந்த நாவலாசிரியராகவே அறியப்பட்டார்.

ஆர்.கே.நாராயணன்

`Waiting for the Mahatma?’ என்ற நூலை எழுதுவதற்காகக் காந்தியின் அனைத்து நூல்களையும் படித்தவர். காந்தியின் சில கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். மேலும், இந்திரா காந்தி இவருடைய வாசகர். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு நண்பர்களாகவே இருந்தனர். `பலமுறை நாங்கள் சந்தித்துக்கொண்டாலும் அரசியல் பற்றிப் பேசியதே இல்லை’ என்பார். எனினும், இந்திரா காந்தி நாராயணை கௌரவிக்கும் வகையில் ராஜ்யசபா உறுப்பினராக்கினார். அப்போது நாடாளுமன்றத்தில் `குழந்தைகள் ஐந்து கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள மூட்டைகளை, முதுகில் சுமந்துசெல்கின்றனர்” என்று குழந்தைகளுக்காகப் பேசினார். இதுகுறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

எழுத்தாளர் சா.கந்தசாமி இவரைப் பற்றிக் கூறும்போது ``எழுத்தாளர் என்று அறியப்படுகிறவர்களில் பலர் படிப்பாளிகளாகவே இருந்துவருகிறார்கள். அதில் ஒருவராக ஆர்.கே.நாராயண் இருந்தார்” என்பார். `நீங்கள் எழுதுவதன் மூலம்தான் எழுத்தாளராக ஆக முடியும்’ என்ற தனது கூற்றுக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே வாழ்ந்தவர். அவரின் கதைகளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் நம் முன் ஒரு சாதாரண கதைசொல்லியாக வந்து நிற்பார். 


டிரெண்டிங் @ விகடன்