வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (10/10/2018)

டிசைன், வசதிகள், பாதுகாப்பு, விலை... வந்துவிட்டது அப்டேடட் டட்ஸன் கோ!

டட்ஸனின் ரெடிகோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 3.29 லட்சம் ரூபாய்க்கும், 3.83 லட்சம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளன...

டட்ஸன் நிறுவனம் தனது ரெடி கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 சீட் ஹேட்ச்பேக் காரான கோ 3.29 லட்சம் ரூபாய் மற்றும் 7 சீட் எம்பிவி கோ ப்ளஸ் 3.83 லட்சம் ரூபாய் எனும் எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. டட்ஸன் மாடல்கள் நான்கு ஆண்டுகள் கழித்து அப்டேட் ஆவதால் பல முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன. வெளிப்புற-உள்புற மாறுதல்கள் மட்டுமில்லை, வசதிகளும், பாதுகாப்பும் கூட அப்டேட்டாகியுள்ளன. 

டட்ஸன் கோ

இரண்டு கார்களிலும் ஹெட்லைட் வடிவம் மாறிவிட்டது. பம்பர் ஸ்டைல் மாற்றப்பட்டு DRL பம்பரிலேயே பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில் டிசைனும் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. உள்பக்கத்தில் காரின் டேஷ்போர்டு டிசைன் முற்றிலும் மாறிவிட்டது. புது டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வருகிறது அதற்கு ஏற்றவாறு சென்ட்ரல் ஏசி வென்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் டிசைனும் புதிது. அனலாக் டாகோமீட்டர் புது இணைப்பு. பழைய டேஷ்போர்டில் இருக்கும் கிளவ் பாக்ஸ் மூட முடியாது. புது டேஷ்போர்டில் கிளவ் பாக்ஸுக்கு மூடியைப் பொருத்திவிட்டார்கள். மேனுவல் வேரியன்டில் ஒன்றாக இருந்த முன்பக்க சீட்டுகள் இப்போது தனித்தனி சீட்டுகளாக மாறிவிட்டன. 

கோ ப்ளஸ்

வசதிகளைப் பொறுத்தவரை, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ உடனான 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட், ரியர் பவர் விண்டோ போன்றவை புது வரவுகள். டாப் வேரியன்ட் மாடலில் 14 இன்ச் அலாய் வீல், ரியர் வைப்பர் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் கூடுதலாக வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை டிரைவர் ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ் ஸ்டான்டர்டாக வருகிறது. பாசஞ்ஜர் ஏர்பேக் டாப் வேரியன்டில் மட்டும்.

இன்டீரியர்

இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு கார்களிலுமே 68 bhp பவர் தரக்கூடிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி வருகிறது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தற்போது இல்லை. புது கார்களின் முன்பதிவுகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இந்தக் கார்களின் டாடாவின் புதிய அப்டேட் செய்யப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட், மாருதி சுஸூகி செலிரியோ மற்றும் வரவிருக்கும் புதிய சான்ட்ரோ உடன் போட்டிக்கு வந்துள்ளது.