வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:17:29 (11/10/2018)

இப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா!

புது ஜாவாவில் வரப்போகிறது 27bhp பவர் மற்றும் 28Nm டார்க் உருவாக்கக்கூடிய 293சிசி லிக்விட் கூல்டு இன்ஜின்.

இந்தியாவில் மஹிந்திரா மோஜோவின் இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட புதிய பைக்கை இந்த ஆண்டே கொண்டுவந்துவிடுவோம் என்று ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்ததைத் தொடர்ந்து வெகு நாள்களாக ஆவலோடு காத்திருந்த ஜாவா மேட்டரில் ஒரு புது அப்டேட். வரவிருக்கும் புதிய ஜாவா பைக்கின் இன்ஜின் தகவல்களை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம்.

ஜாவா

புது ஜாவாவில் வரவிருப்பது 293சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின். எதிர்காலத்தை மனதில் வைத்து BS-VI விதிகளுக்கு உட்பட்டு வரும் இந்த இன்ஜினில் போர் மற்றும் ஸ்டிரோக் மட்டுமே மோஜோவை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளார்கள். புது இன்ஜினில் டூயல் ஓவர்ஹெட் கேம் ஷாஃப்ட் செட்டப் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 27bhp பவர் மற்றும் 28Nm டார்க் உருவாக்கக்கூடியது. மிட் ரேஞ்சில் அதிக பவரும், எல்லா இன்ஜின் வேகத்திலும் அதிக அளவு டார்க்கை உருவாக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். புது ஜாவா பழைய ஜாவா பைக்குகளின் ரெட்ரோ ஃபீல் தர வேண்டும் அதே சமயம் ஸ்போர்ட்டியான ரைடையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் புனேவில் உள்ள மஹிந்திரா டிசைனர்களும் இத்தாலியை சேர்ந்த மஹிந்திரா ரேஸிங் இன்ஜினியர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்கள். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணையப்போகிறது.

புது இன்ஜின்

மேலும், வின்டேஜ் ஜாவா பைக்குகளின் `படபட' எக்ஸாஸ்ட் சத்தம் புது இன்ஜினில் அப்படியே கொண்டுவந்துள்ளார்களாம். மோஜோவை அடிப்படையாகக் கொண்ட இன்ஜின் என்றாலும் அதன் டிசைனை பழைய இன்ஜினைப் போலவே உருவாக்குவது பெரும் சவால். அந்தச் சாவாலை சமாளித்துவிட்டார்கள். புது இன்ஜின் ஜாவாவின் பழைய ரெட்ரோ ஸ்டைலைப் பிரதிபலிக்கிறது. புது ஜாவா பைக்குகளை அடுத்த மாதம் கொண்டுவரவிருப்பதாகக் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிஷ் ஜோஷி கூறியுள்ளார். வரவிருக்கும் புது ஜாவா பைக்குகள் மூன்று வேரியன்டுகளாக வரப்போகிறதாம். இதுமட்டுமல்லாமல் புகழ்பெற்ற பிஎஸ்ஏ பைக்குகளின் பெயரைப் பயன்படுத்தும் உரிமையும் இந்நிறுவனத்திடம் இருப்பதால் 300 முதல் 600சிசி பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை பிஎஸ்ஏ பைக்குகளாக வெளியிடும் திட்டமும் வைத்துள்ளார்கள்.