ஒரே நாளில் 7 பிரிமியம் பைக்ஸ் அறிமுகம்... அசத்திய மோட்டோ ராயல்! | Moto Royale Launches 7 Premium Bikes on a Single Day!

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:23 (12/10/2018)

ஒரே நாளில் 7 பிரிமியம் பைக்ஸ் அறிமுகம்... அசத்திய மோட்டோ ராயல்!

கைனடிக் குழுமத்துக்குச் சொந்தமாக, அஹமத் நகரில் ஒரு பைக் தொழிற்சாலை இருக்கிறது. இங்குதான் நார்டன் தவிர்த்து மற்ற நிறுவனத் தயாரிப்புகள் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

கைனடிக் குழுமம்... பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா. ஆம், 2 ஸ்ட்ரோக் கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் - ப்ளேஸ் மேக்ஸி ஸ்கூட்டர் - Comet 250 பைக்குகளை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்த அதே நிறுவனம்தான். இவர்கள் டூ-வீலர் தயாரிப்பதை நிறுத்திவிட்டு (அதை மஹிந்திரா நிறுவனம் வாங்கிவிட்டது), கடந்த சில ஆண்டுகளாக மோட்டோ ராயல் என்ற டீலர்ஷிப்பில், பிரிமியம் டூ-வீலர்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார்கள். தற்போது இந்தியாவில் அந்தவகை பைக்குகளின் மீதான வரவேற்பு அதிகரித்துவரும் சூழலில், தடாலடியாகப் புதிய திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது மோட்டோ ராயல். அதாவது, ஹயோசங் - FB Mondial - SWM - நார்டன் (Norton) - எம்வி அகுஸ்டா (MV Agusta) ஆகிய பிராண்ட்களை, ஒரே டீலர்ஷிப்பில் விற்பனை செய்வதுதான் அந்த மாஸ்டர் ப்ளான்!

எந்தெந்த பைக்குகள் இந்தியாவுக்கு வந்துள்ளன?

மோட்டோ ராயல்

கடந்த சில மாதங்களாகக் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், FB Mondial மற்றும் SWM நிறுவனங்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மோட்டோ ராயல். இவர்களின் HPS 300 மற்றும் சூப்பர் டூயல் T பைக்குகளுடன், ஹயோசங் தனது செகண்ட் இன்னிங்ஸை இந்தியாவில் ஆரம்பித்திருக்கிறது. அதற்கான சான்றாக, Aquila Pro 650 மற்றும் GT250R ஆகிய பைக்குகள், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் டயர் பதித்திருக்கின்றன. இதனுடன் எம்வி அகுஸ்டா நிறுவனம், தனது Brutale 800 RR பைக்கை 18.99 லட்ச ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தவிர, பழம்பெரும் இத்தாலிய பைக் நிறுவனங்களுள் ஒன்றான நார்டன், 3 பைக்குகளை CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. அவை கமாண்டோ ஸ்போர்ட் MK II (20.99 லட்ச ரூபாய்), கமாண்டோ 961 கஃபே ரேஸர் (23 லட்ச ரூபாய்), டோமினேட்டர் (23.70 லட்ச ரூபாய்) ஆகியவைதாம்.

நார்டன் பைக்கின் விலைகள் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறதே?

மோட்டோ ராயல்

கைனடிக் குழுமத்துக்குச் சொந்தமாக, அஹமத் நகரில் ஒரு பைக் தொழிற்சாலை இருக்கிறது. இங்குதான் நார்டன் தவிர்த்து மற்ற நிறுவனத் தயாரிப்புகள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. எனவே, அந்த நிறுவனத் தயாரிப்புகளையும் CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, இங்கே அசெம்பிள் செய்யும் முடிவில் இருக்கிறது மோட்டோ ராயல். ஏப்ரல் 2019 முதலாக இவை விற்பனைக்கு வெளிவரும் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. Made to Order அடிப்படையில்தான் நார்டன் பைக்குகளை இந்தியாவில் வாங்கமுடியும். இந்த ஆண்டில் முதற்கட்டமாக டெல்லி, தானே, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய 6 இடங்களில் டீலர்களை நிர்ணயிக்க இருக்கிறது மோட்டோ ராயல். அடுத்த ஆண்டில் 12 புதிய டீலர்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்திருக்கும் பைக்குகளுக்கு (FB Mondial, SWM)முன்பாக, கம்பேக் நாயகனை (ஹயோசங்) முதலில் பார்ப்போம். 

ஹயோசங் GT250R

 

Moto Royale

3.39 லட்ச ரூபாய்க்கு (எக்‌ஸ்-ஷோரூம் விலை) வந்திருக்கும் GT250R, இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையில் இருந்ததுதான்; ஆனால், DSK உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியதால், இதன் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது மறுஅறிமுகமாகியிருக்கும் இந்த பைக்கில் ஏபிஎஸ் தவிர்த்து, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. எனவே, இதில் இருக்கும் 249சிசி, 8 வால்வ், DOHC, ஆயில் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட V-ட்வின் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 28bhp@10,000rpm பவர் மற்றும் 2.2kgm@7,000rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தில் 43மிமீ USD ஃபோர்க் - 300மிமீ இரட்டை ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்ஸ் -  110/70-17 இன்ச் டயர்கள் இருந்தால், பின்பக்கத்தில் Preload அட்ஜஸ்டபிள் மோனோஷாக் - 230 மிமீ ஒற்றை ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் -  150/60-17 இன்ச் டயர் இடம்பெற்றுள்ளன. அதேபோல 188 கிலோ எடை - 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஹயோசங் GT250R பைக், மறுஅறிமுகமாகி இருக்கும் ஹோண்டா CBR250R மற்றும் கவாஸாகி நின்ஜா 300 ஆகிய பைக்குகளுடன் போட்டிபோடுகிறது.

ஹயோசங் Aquila Pro 650

 

Moto Royale

முன்னே சொன்ன பைக்கைப் போலவே, இதுவும் இந்தியாவில் மறுஅறிமுகமாகியுள்ள மாடல்தான்; 5.55 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ்-ஷோரூம் விலை) வெளிவந்திருக்கும் Aquila Pro 650, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின்ஸ் பைக்குகளுடன் போட்டிபோடுகிறது. இதிலும் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. இதில் இருக்கும் 647சிசி, வாட்டர் கூல்டு, 8 வால்வ், DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட 90 டிகிரி V-ட்வின் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, 75bhp@9,000rpm பவர் மற்றும் 6.2kgm@7,5000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. முன்பக்கத்தில் 43மிமீ USD ஃபோர்க் - 300மிமீ இரட்டை ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 120/70-17 இன்ச் டயர்கள் இருந்தால், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் - 270மிமீ ஒற்றை ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 180/55-17 இன்ச் டயர்கள் உள்ளன. மற்றபடி 16 லிட்டர் பெட்ரோல் டேங்க் - 240கிலோ எடை - 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை.

FB Mondial HPS 300 

 

Moto Royale

கடந்தாண்டு நடைபெற்ற EICMA மிலன் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக், HPS 125 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 3.37 லட்ச ரூபாய்க்குக் (எக்ஸ்-ஷோரூம் விலை) கிடைக்கும் HPS 300 பைக்கில் இருப்பது பியாஜியோவின் இன்ஜின். ஆம், இதில் பொருத்தப்பட்டிருக்கும் 249சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வ், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 25bhp பவர் மற்றும் 2.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 135 கிலோ எடையுள்ள (Dry Weight) HPS 300 பைக்கின் சீட் உயரம் 785மிமீ மட்டுமே; இதன் முன்பக்கத்தில் 110/90 R18 டயர் - 4 பிஸ்டன் ரேடியல் கேலிப்பர் - 280மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 41மிமீ USD ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் 130/70 R17 டயர் - சிங்கிள் பிஸ்டன் கேலிப்பர் - 220மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - டூயல் ஷாக் அப்சார்பர்கள் இருக்கின்றன. ஸ்போக் வீல்களைக் கொண்டிருக்கும் HPS 300, இந்தியாவுக்கே புதுமையான தயாரிப்புதான். என்றாலும் விலைதான் அதிர்ச்சியைத் தரும்விதத்தில் அமைந்திருக்கிறது. CKD முறையில் பாகங்களாக இறக்குமதியாகி, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் இந்த பைக், தனித்துத் தெரிய விரும்புபவர்களுக்கான கருவிகளுள் ஒன்றாக இருக்கும்.

SWM சூப்பர் டூயல் T

 

Moto Royale

இத்தாலிய நிறுவனமான SWM, 2 வேரியன்ட்களில் சூப்பர் டூயல் T பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப மாடல் 6.80 லட்ச ரூபாய்க்கும், பிரிமியம் மாடல் 7.30 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கும் (விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி வெர்சிஸ் 650 மற்றும் சுஸூகி V-ஸ்டார்ம் 650XT ஆகிய பைக்குகளுடன் இது போட்டிபோடுகிறது. சூப்பர் டூயல் T பைக்கில் இருப்பது, 57bhp பவர் மற்றும் 5.35kgm டார்க்கை வெளிப்படுத்தும் 600சிசி - 4 வால்வ் - DOHC - லிக்விட் கூல்டு - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான சிங்கிள் சிலிண்டர் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி; முன்பக்கத்தில் Rebound அட்ஜஸ்டபிள் 45மிமீ USD ஃபோர்க் - 210மிமீ சஸ்பென்ஷன் டிராவல் - 19 இன்ச் வீல் - 300மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் உள்ளன. பின்பக்கத்தில் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் - 270மிமீ சஸ்பென்ஷன் டிராவல் - 17 இன்ச் வீல் - 220மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் இருக்கின்றன. அட்வென்சர் டூரர் என்பதைப் பறைசாற்றும் விதமாக, பெரிய 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் அதிகமான 898மிமீ சீட் உயரம் அமைந்திருக்கிறது. இதனுடன் குறைவான 169 கிலோ (Dry Weight) எடை சேரும்போது, சூப்பர் டூயல் T பைக் ஓட்டுவதற்கு ஃபன்னாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close