வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:44 (12/10/2018)

40 வருடப் பயணம்... இன்டர்ஸ்டெல்லரை நெருங்கும் நாசாவின் விண்கலம்! #Voyager2

1977-ல் அனுப்பப்பட்ட விண்கலம் இந்த வாயேஜர் 2. தற்போது எங்கிருக்கிறது தெரியுமா?

40 வருடப் பயணம்... இன்டர்ஸ்டெல்லரை நெருங்கும் நாசாவின் விண்கலம்! #Voyager2

40 வருடங்களுக்குப் பிறகு நாசாவின் வாயேஜர்-2 விண்கலம் விண்மீன்களுக்கு இடையேயான, அதாவது இன்டர்ஸ்டெல்லர் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அறிகுறியாக வாயேஜர்-2 ஐச் சுற்றி காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரித்து வருவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 1977-ம் ஆண்டு சூரிய குடும்பத்தின் கோள்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக வாயேஜர்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அன்று தொடங்கிய இதன் பயணம் தற்போது 40 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடியவில்லை. தற்போது இந்த வாயேஜர்-2 எங்கிருக்கிறது தெரியுமா?

பூமியிலிருந்து கிட்டத்தட்ட 17.7 பில்லியன் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நமக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவைப் போல் 118 மடங்கு தொலைவில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

சூரியன் மற்றும் கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பத்தின் பொருள்கள் மற்றும் காந்த சக்தி செறிவுடன் காணப்படும் பகுதியே ஹெலியோஸ்பியர் (Heliosphere) எனப்படுகிறது. வாயேஜர்-2 இந்த ஹெலியோஸ்பியரின் எல்லைப் பகுதியை 2007-ம் ஆண்டு சென்றடைந்திருந்தது. தற்போது விஞ்ஞானிகள் வாயேஜர்-2 ஹெலியோஸ்பியர் எல்லையைக் கடந்து ஹெலியோபாஸ் பகுதியை அடையும் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அப்படி வாயேஜர்-2 ஹெலியோஸ்பியர் பகுதியைத் தாண்டும் பட்சத்தில், வாயேஜர்-1ஐத் தொடர்ந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதியை இரண்டாவதாக அடையும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற பெருமையை வாயேஜர் 2 பெறும்.

நாசாவின் வாயேஜர் 2

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வாயேஜர் 2-வில் இருக்கும் காஸ்மிக் கதிர் வீச்சை அளவிடும் கருவி முன்பைவிட 5 சதவிகிதம் அதிக கதிர்வீச்சு விண்கலனை தாக்குவதாக அளவிட்டு இருக்கிறது. சூரிய குடும்பத்துக்கு வெளியே அதிவேகத்தில் இயங்கும் துகள்களே காஸ்மிக் கதிர்கள் ஆகும். வாயேஜர்-2-ன் மற்றொரு குறைந்த ஆற்றல் உபகரணமும் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரிப்பைக் கண்டறிந்துள்ளது.  ஹெலியோஸ்பியர் பகுதியில் காஸ்மிக் கதிர்வீச்சு குறைவாகவே இருக்கும். ஹெலியோஸ்பியர் பகுதியைக் கடந்து ஹெலியோபாஸ் பகுதியை அடையும் போது இன்னும் அதிகக் கதிர்வீச்சு விண்கலனைத் தாக்கும்.

2012-ம் ஆண்டு மே மாதம் வாயேஜர்-1-ம் ஹெலியோஸ்பியர் பகுதியைக் கடக்கும் போது காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரிப்பை எதிர்கொண்டது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் வாயேஜர்-1 ஹெலியோபாஸ் பகுதியையும் கடந்து, இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்குள் நுழைந்தது. வாயேஜர் திட்ட உறுப்பினர்கள் காஸ்மிக் கதிர்வீச்சு அதிகரிப்பை மட்டும் வைத்து வாயேஜர்-2 விண்கலம் ஹெலியோபாஸ் பகுதியைக் கடப்பதாக உறுதியாகக் கூற இயலாது எனத் தெரிவிக்கிறார்கள். வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 செல்லும் பகுதி பெருமளவில் வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலே இருக்கும் முதல் படத்தைப் பார்த்தால் இந்த வேறுபாடு புரியும்.

வாயேஜர்-1ஐக் காட்டிலும் 6 வருடம் கழித்து வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியில் நுழைவதால் அதிக மாற்றங்களைச் சந்திக்கிறது. இதற்குக் காரணம் சூரியனின் 11 வருடச் சுழற்சியின் காரணமாக ஹெலியோபாஸ் முன்னும் பின்னும் நகர்வதே ஆகும். இந்த 11 வருடச் சுழற்சியின் போது சூரியன் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செயலாக்கத்தை அடைகிறது. ``வாயேஜர்-2ஐச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாகத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். வரும் மாதங்களில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள போகிறோம். ஆனால், இன்னும் வாயேஜர்-2 எப்பொழுது ஹெலியோபாஸ் பகுதியில் நுழையும் என்று கூற இயலாது. ஆனால், நிச்சயம் நுழையும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட் ஸ்டோன்.


டிரெண்டிங் @ விகடன்