வெளியிடப்பட்ட நேரம்: 08:22 (13/10/2018)

கடைசி தொடர்பு:08:22 (13/10/2018)

`நோ காஸ்ட் இ.எம்.ஐ.' நமக்கு லாபமா..? நிதி நிறுவனங்களுக்கு என்ன லாபம்?! #NoCostEMI

ஒருவர் சில்லறை விற்பனைக்கடையோ, ஷோரூமோ வைத்திருந்தால், அந்த இடத்திற்கான வாடகை, பணியாளர்களுக்கான சம்பளம் என அந்த விற்பனைக்காக பல்வேறு கூடுதல் செலவுகள் இருக்கும். ஆனால் ஆன்லைன் விற்பனையில் அந்த செலவுகள் இருப்பதில்லை. ஆக, ஆன்லைன் விற்பனை இணையதளங்களுக்கு இவையனைத்தும் லாபமாகிறது. இந்த லாபத்தை நிதி நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். 

`நோ காஸ்ட் இ.எம்.ஐ.' நமக்கு லாபமா..? நிதி நிறுவனங்களுக்கு என்ன லாபம்?! #NoCostEMI

ண்டிகைக்கால விற்பனை தொடங்கிவிட்டது. ஷோரூம்களில் நடைபெறுவதற்கு ஈடாக ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் இந்த விற்பனை சூடுபிடித்துள்ளது. பண்டிகைக்கால விற்பனை என்றாலே, வாடிக்கையாளர்கள் மத்தியில் தள்ளுபடி விற்பனை, தவணைமுறை விற்பனை போன்ற பல்வேறு சலுகைகளை எதிர்பார்ப்பது வழக்கம். தவணைமுறை விற்பனை என்றாலே வட்டிவிகிதம்தான் அனைவர் கண்களையும் உறுத்தும். ஆனால், இப்போது அந்த உறுத்தலே இல்லாமல் `நோ காஸ்ட் இ.எம்.ஐ (No Cost EMI)' என்ற பெயரில் ஆன்லைன் விற்பனை விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. 

அதென்ன நோ காஸ்ட் இ.எம்.ஐ?

இந்தத் தவணைமுறையில் ப்ராசஸிங் ஃபீஸ், மாதத் தவணைக்கான வட்டி ஆகிய இரண்டையுமே வசூலிக்க மாட்டார்கள். ஒரு பொருளை 12,000 ரூபாய்க்கு ஆறு மாதத் தவணையில் வாங்கினால், மாதத்துக்கு 2,000 ரூபாய் மட்டுமே செலுத்தவேண்டியிருக்கும். ஷாப்பிங் செய்பவர்களுக்கு, குறைந்த செலவில் நிறையப் பொருள்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் விற்பனை களைக்கட்டுகிறது.

எப்படி வட்டியில்லாமல் தவணைமுறையில் தர முடிகிறது?  ஒருவேளை விலையை ஏற்றிவைத்து விற்பார்களோ? பொருள் தரமற்றதாக இருக்குமோ? நிதி நிறுவனங்கள் நிதி இழப்பை எப்படிச் சரிக்கட்டுகிறார்கள்... என்றெல்லாம் சந்தேகம் வருகிறதல்லவா? 

EMI

இந்தச் சந்தேகங்களை, பேமென்ட்ஸ் டொமைன் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் என்.சபாபதி முன் வைத்தோம்.

``வட்டியில்லாத தவணை (No Cost EMI) என விற்பனை செய்வதில், ஆன்லைன் விற்பனை இணையதளங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அவர்களோடு இணைந்து செயல்படும் நிதி நிறுவனங்களுக்குத்தான் நிதி இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுகட்டும் வேலையை, ஆன்லைன் விற்பனை இணையதளங்கள் செய்கின்றன. ஏனெனில், இந்த மாதிரியான சலுகைகள் கொடுக்கும்போது, விற்பனையோடு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகும். 

ஒருவர் சில்லறை விற்பனைக் கடையோ, ஷோரூமோ வைத்திருந்தால், அந்த இடத்துக்கான வாடகை, பணியாளர்களுக்கான சம்பளம் எனப் பல்வேறு கூடுதல் செலவுகள் இருக்கும். ஆன்லைன் விற்பனையில் அந்தச் செலவுகள் இல்லை. ஆக, ஆன்லைன் விற்பனை இணையதளங்களுக்கு இவை அனைத்தும் லாபமாகிறது. இந்த லாபத்தை, நிதி நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். 

இந்த `ஜீரோ காஸ்ட் இ.எம்.ஐ' சலுகைக்கு, வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டைக் காட்டினாலே போதும். பொருளுக்கான தொகையை இ.எம்.ஐ ஆக மாற்றி, வாடிக்கையாளரிடம் செக் வாங்கிக்கொண்டு பொருளைக் கொடுத்துவிடுவார்கள்.

என்.சபாபதிஅடுத்ததாக விற்பனையாளர்கள், `பேக் எண்ட் ரிபேட்' (back-end rebate) என்ற பெயரில், தங்களது பிராண்ட் பொருள்களை விற்கும் எண்ணிக்கைக்கேற்ப விலையில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி தருவார்கள். ஏற்கெனவே பன்மடங்கு விற்பனை இருப்பதால், இந்த கமிஷன் தொகையும் அதிகமாகவே இருக்கும். இதையும் நிதி நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்வார்கள்.

இதுவரை விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபங்களைப் பார்த்தோம். அடுத்ததாக, இந்த அதிரடி தள்ளுபடி விற்பனை மூலம் அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இந்த விற்பனையில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள், இந்த வாடிக்கையாளர்களுக்கு பெர்சனல் லோன் தருவார்கள். அதேபோல அந்த நிறுவனங்களுக்கான இ.எம்.ஐ கார்டை விற்பனை செய்வதன்மூலம் அந்த வாடிக்கையாளர்களை தங்களது நிரந்தர உறுப்பினர்களாக்குவார்கள். அந்த கார்டின் மூலம் மேலும் பல பொருள்களை வாங்குவார்கள். அவற்றுக்கும் தவணைமுறையில் விற்பனை நடக்கும். இந்த வாடிக்கையாளர்களின் தொடர்பு, குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது தொடரும். எனவே, இவர்களின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக்கடன், கல்விக்கடன் தருவதாகக் கூறி தொடர்ச்சியாகப் பலன் அடைவார்கள்.

இவை எல்லாவற்றிலும் வட்டியை சரியாக வசூலித்துவிடுவார்கள். இப்படியாக ஜீரோ காஸ்ட் இ.எம்.ஐ மூலம் தொடர்ச்சியான பல நன்மைகளை இந்த நிதி நிறுவனங்கள் பெற இயலும். விற்பனை அதிகரிப்பதால் ஆன்லைன் விற்பனைத் தளங்களுக்கும் லாபம் கிடைக்கிறது. இன்னொருபுறம் வட்டியில்லாத தவணை என்பதால், இது வாடிக்கையாளர்களுக்கும் லாபம் தரக்கூடியதே. அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விற்பனை முறைதான் இது. இதில் `விலையை அதிகப்படுத்தி விற்பார்களோ!' என்றோ, `போலியான பொருளாக இருக்குமோ!' என்றோ அச்சப்படவேண்டியதில்லை. விற்பனையும், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பும்தான் இதன் சூட்சுமமே" என்றார்.

நோ காஸ்ட் இ.எம்.ஐ முறையில் நடைபெறும் விற்பனையில், எப்படி நிதி நிர்வாகம் நடக்கிறது எனப் பார்த்தோம். இந்தத் தவணைமுறை, நிறுவனத்துக்கு நிறுவனம் மாறக்கூடும். ஒவ்வொருவரும் ஏதேனும் சில நிபந்தனைகள் வைத்திருக்கக்கூடும். `நோ காஸ்ட் இ.எம்.ஐ' சலுகைக்கான தகுதி, காலக்கெடு குறித்து ஏதேனும் விதிமுறைகள் இருக்கக்கூடும். எனவே, நிபந்தனைகள் என்ன என்பதையும் பொருள்களை வாங்கும் முன் வாடிக்கையாளர்கள் கவனத்தோடு கேட்டும் வாசித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்