வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (13/10/2018)

கடைசி தொடர்பு:14:18 (13/10/2018)

வறட்சி சருமம் கொண்டவர்கள்... இதெல்லாம் செய்யலாம்!

கால்களில் எண்ணெய்ச் சுரப்பி இல்லை என்பதால், குளிர் நேரத்தில் கால்கள் அதிக வறட்சியுடன் காணப்படும். இதனால், பாதங்களில் அதிகப்படியான வெடிப்புகள் ஏற்படும்

வறட்சி சருமம் கொண்டவர்கள்... இதெல்லாம் செய்யலாம்!

ழை மற்றும் குளிர் காலத்தில் சருமம், ஈரத்தன்மையை இழந்து சொரசொரப்புத் தன்மை, வறட்சி போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று. இதனை வீட்டிலிருந்படியே சரிசெய்துகொள்ள எளிமையான ப்யூட்டி டிப்ஸ்களை வழிமுறைகளை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த 'ஆரோமா தெரபிஸ்ட்' கீதா அசோக்.

" குளிர், மழை நேரத்தில் சருமத்தில் வியர்ப்பதில்லை. எனவே, உடலில் சேரும் அழுக்குகள் சரும துவாரத்தின் அடியிலேயே தேங்கிவிடும். இறந்த செல்களும் தங்குவதால், சருமம் தன் பளபளப்பை இழக்கிறது.  இதற்கு, மிருதுவான காட்டன் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து, உடல் முழுவதும் ஒற்றி எடுக்கவும். இந்த ஈரத்தன்மை உடலில் இருக்கும்போதே, மாய்ஸ்சுரைஸர் க்ரீம்மை தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கினால், சருமம் வறட்சியின்றி மிருதுவாக இருக்கும். எண்ணெய்ப் பசை சருமம் உடையவர்கள், ஜெல் வடிவிலான மாய்ஸ்சுரைஸர், நார்மல் ஸ்கின் உடையவர்கள், க்ரீம் வடிவிலான மாய்ஸ்சுரைஸர் தேர்வுசெய்து பயன்படுத்துவது நல்லது.

கால்களில் எண்ணெய்ச் சுரப்பி இல்லை என்பதால், குளிர் நேரத்தில் கால்கள் அதிக வறட்சியுடன் காணப்படும். இதனால், பாதங்களில் அதிகப்படியான வெடிப்புகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க, மிதமான வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர், மிருதுவான துண்டால் ஈரத்தைத் துடைத்து எடுக்கவும். பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசிங் அப்ளை செய்து, பிறகு சாக்ஸ் அணிந்து தூங்கவும். தினமும் தொடர்ந்து செய்துவர, பாதங்கள் பூ போன்று மிருதுவாக இருக்கும்.

சருமம்

தேன் மெழுகு 100 கிராம், பாதாம் எண்ணெய் 100 மில்லி, கிளிசரின் 20 சொட்டு, தேன் 20 சொட்டு கலந்து பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை, மிதமான சூட்டில் டபுள் பாய்லிங் செய்து மெழுகினை ஊருகவிடவும். மெழுகு ஊருகும்போது ரோஸ் ஆயில் 10 சொட்டு, இலாங் இலாங் ஆயில் 5  சொட்டு சேர்த்து ஆறியதும், ஒரு டப்பாவில் எடுத்துக்கொள்ளவும். இதனைத் தினமும் உடல், கை கால்கள், கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்துவந்தால் மேனி பட்டுப்போன்று பளபளப்புடன் இருக்கும்.

தினமும் இரவு பாதாம் எண்ணெய்யை கை கால்களில் அப்ளை செய்துகொள்ளவும். அதற்கு மேலே நாட்டுச்சர்க்கரைப் பயன்படுத்தி, எண்ணெய்யில் கரையும் வரை லேசாக மாசாஜ் செய்யவும். பிறகு, வெதுவெதுப்பான நீரினால், சர்க்கரையைத் தேய்த்த இடங்களைக் கழுவிவிடவும். வறட்சியில் ஏற்பட்ட சரும வெடிப்புகள் காணாமல்போகும்.

சோளமாவு 3 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன், அரிசிமாவு 1 டீஸ்பூன், அவகேடா ஆயில் அல்லது பாதாம் ஆயில் 5 சொட்டு கலந்து, பேஸ்டாகத் தயார்செய்யவும். சரும வறட்சி ஏற்பட்டுள்ள இடங்களில் அப்ளை செய்து, ஒரு டிஸ்யூ பேப்பரால் மூடிவிடவும். அரை மணி நேரம் கழித்து, மிதமான நீரில் சுத்தம் செய்தால், சருமம் பளபளப்பது உறுதி.

ஜவ்வரிசி மாவு 3 டீஸ்பூன், காய்ச்சாத பால் 5 டீஸ்பூன், சிவப்புச் சந்தனம் 3 டீஸ்பூன் கலந்து, முகத்தில் பேக் போட்டுக்கொண்டால், முகம் பொலிவுடன் காணப்படும்.

ஏசியில் பணிபுரிபவர்களுக்குச் சருமம் கூடுதல் வறட்சியாகும். எனவே, ரோஸ் வாட்டர், கிளிசரின், லாவண்டர் ஆயில் மூன்றையும் சம அளவில் எடுத்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்துகொள்ளலாம். அல்லது சுத்தமான பஞ்சில் நனைத்து முகத்தை ஒத்தியெடுத்தால் ஏசியினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கலாம்.

வேலைக்குச் செய்யும் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய நேரம் இல்லையா? இரவு படுப்பதற்கு முன்பு, பாதாம் ஆயிலையும் கிளிசரினையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து படுத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை,  மைல்டான ஃபேஷ் வாஷ் க்ரீம் மூலம் முகத்தைச் சுத்தம் செய்தால், சருமம் வறட்சியின்றி இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்