வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:34 (13/10/2018)

வெள்ளை நிற பவுடர் ஏன் போடக் கூடாது தெரியுமா? - அழகுக்கலை நிபுணர் விளக்கம்!

வெள்ளை நிற பவுடர் ஏன் போடக் கூடாது தெரியுமா? - அழகுக்கலை நிபுணர் விளக்கம்!

திருமணத்துக்கு முன்பு வரை முகத்தைப் 'பளிச்' என வைத்திருக்கும் பெண்கள், குடும்பப் பொறுப்பு, ஆபீஸ் எனத் தொடர்ந்து வேலைகளில் மூழ்கிய பிறகு, 'குளித்தோமா', 'பவுடரை அப்பிக்கொண்டு கிளம்பினோமா' என இருந்துவிடுகிறார்கள். காலை நேரத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் 30 வயதுப் பெண்களில் முக்கால்வாசிப் பேரின் முகம் மற்றும் கழுத்தில் திட்டுத்திட்டாக அப்பிக் கிடக்கும்  வெள்ளை நிற பவுடர்தான் இதற்குச் சாட்சி. இதற்கு என்னதான் செய்வது? வேலைக்குச் செல்லும் பெண்கள், குறைந்த நேரத்தில் பெஸ்ட்டாக மேக்கப் செய்துகொள்ள டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

அழகு - பவுடர்

* முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமென்றால், சருமம் சொரசொரப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு, வீட்டிலேயே கொரகொரப்பாக அரைத்த கடலைமாவை வாரத்துக்கு இரண்டு முறை முகத்தில் தேய்த்தோ, நேரம் கிடைத்தால் அரை மணி நேரம் முகத்தில் பேக்காக போட்டோ முகத்தை வாஷ் செய்யுங்கள். 

 அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

* ஃபவுண்டேஷன் போட விருப்பப்பட்டால் போட்டுக் கொள்ளுங்கள். அதை அப்ளை செய்ய நேரமில்லையா  அல்லது போட்டு பழக்கமில்லையா? நோ பிராப்ளம். வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் அல்லது கோல்டு க்ரீமை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பிளென்டர் ஸ்பான்சால் ஒரே சீராக தடவுங்கள்.  கழுத்து, காதுகளிலும் மறக்காமல் தடவுங்கள்.

* இதன் மேலே, இளம் மஞ்சள் அல்லது சந்தன நிறத்தில் இருக்கும் லூஸ் பவுடர் அல்லது காம்பேக்ட் பவுடரை ஸ்பான்சால் தொட்டு ஒற்றுங்கள். வெள்ளை நிற பவுடரைப் பயன்படுத்தாதீர்கள். முகத்தில் சுண்ணாம்பு அடித்தது போலத் தெரியும். பவுடரை கைகளில் கொட்டியும் முகத்தில் தடவாதீர்கள். திட்டுத் திட்டாக நிற்கும்.

* பழக்கம் இருப்பவர்கள் ஜெல் அல்லது சாலிட் ஐ-லைனரால் நிதானமாகக் கண்களின் மேலே வரைந்து கொள்ளலாம். இல்லையென்றால், ஐ-லைனர் போடாமல் விட்டுவிடுங்கள்.

* மை வைத்தால் உடனே கலைந்து வழிந்துவிடும். அதற்குப் பதில், காஜல் பென்சிலைப் பயன்படுத்தினால், மாலை வரை மை கலையாது. முகமும் லைட் போட்டதுபோல பளிச் என இருக்கும்.

* குடும்பத் தலைவிகள் காலையில் சீக்கிரம் எழுந்து சமைப்பதால், கண்களில் ஒரு சோர்வு தெரியும். இதற்கு மஸ்காரா நல்ல தீர்வு. மஸ்காராவை கண் இமைகளின் மேல் இரண்டு கோட் போட்டால், இமைகள் மேல் நோக்கி வளைந்து நிற்கும்.  சிறியக் கண்களும் பெரிதாக பளிச் எனத் தெரியும். முகத்துக்கு ஒரு ஃபிரெஷ் லுக்கும் கிடைத்துவிடும்.

* முகத்துக்கு க்ரீம், பவுடர் எது போட்டாலும் அது புருவங்களின் மேல் படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் புருவங்கள் பளிச் என இருக்கும். உங்கள் புருவங்கள் அடர்த்தியாக இருக்கிறதா? புருவம் திருத்தும் பிரஷ் மூலம் வாரிவிடுங்கள். புருவங்கள் மெல்லியதாக இருந்தால், பிரவுன் கலர் ஐப்ரோ பென்சிலால், புருவங்களை லேசாக டச் பண்ணுங்கள். ஐப்ரோ பென்சிலின் முனை மழுங்கலாக இருந்தால்தான், புருவங்களின் மேல் கோடு போட்டது போலின்றி, இயற்கையாகத் தெரியும்.

* லிப்ஸ்டிக் போடுவது பிடிக்கும் என்றால்,  லைட் பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள், கலர்லெஸ் லிப் பாம் அல்லது பளபளப்புக்கு லிப் கிளாஸ் மட்டும் போட்டுக்கொள்ளலாம்.