வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/10/2018)

கடைசி தொடர்பு:17:50 (13/10/2018)

`முடியாது’ என சொல்லிப் பழகுதல்... எட்டு மணி நேரத் தூக்கம்... நேர மேலாண்மை டிப்ஸ்!

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக்கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதனை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள்.

`முடியாது’ என சொல்லிப் பழகுதல்... எட்டு மணி நேரத் தூக்கம்... நேர மேலாண்மை டிப்ஸ்!

ரு சிலரைப் பார்த்தால் `இவர்களால் மட்டும் ஒரே நேரத்தில் அலுவலக வேலை, எழுத்து, மேடைப்பேச்சு, பயணம், உடற்பயிற்சி என்று அனைத்தையும் எப்படிச் செய்ய முடிகிறது... நம்மால் மட்டும் ஏன் முடியவில்லை?' என்ற கேள்வி நமக்குள்ளேயே எழும். உண்மைதானே, இயற்கை அவர்களுக்கு மட்டும் கூடுதல் நேரத்தை வழங்குவதில்லையே! எப்படி அவர்களுக்கு மட்டும் நேர மேலாண்மை சாத்தியமாகிறது? பார்க்கலாம்...

நேர மேலாண்மையின் அடிப்படையே திட்டமிடல்தான். மாதச் சம்பளம் வாங்குவோர் அனைவரும் சம்பளம் வந்ததுமே வீட்டுக்கடனுக்கு, டூவீலர் கடனுக்கு, மளிகைக்கடைக்கு, பால், பேப்பர் என ஒவ்வொரு செலவுக்கும் பகிர்ந்துவைத்து பட்ஜெட் போட்டு செலவு செய்வார்கள். ஆனால், அதே மாதச் சம்பளம்போல்தான் நமக்குக் கிடைத்துள்ள 30 நாள்கள் என்பதை உணர மாட்டார்கள். இந்த 30 நாள்களை எப்படிச் செலவு செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். 30 நாள்களுக்குள் ஏதேனுsleeம் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால், அதற்கென தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படிப் பகிர்ந்து செய்தால் அந்தச் செயலை எந்தவிதப் பதற்றமும் இன்றி முடித்துவிடலாம். ஆனால், நாம் பெரும்பாலும் பின்பற்றுவது கிரிக்கெட்டர் தோனி ஸ்டெயிலைத்தான்! கடைசி ஓவர் வரை பரபரப்பாக ஆட்டத்தை இழுத்து, கடைசி பாலில் வின்னிங் ஷாட் அடிப்பது அவர் வழக்கம். ஆனால், அனைவராலும் தோனி ஆகிவிட முடியாது. அனைவருக்கும் வின்னிங் ஷாட் கைகொடுக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இனி, நேர மேலாண்மையில் முக்கியமான அம்சங்களைப் பார்க்கலாம்.

8 மணி நேரத் தூக்கம்: இயற்கையும்கூட ஓய்வெடுப்பதற்காகத்தான் இரவு/பகல் வருகிறது. அனைத்து உயிர்களும் அதை முறையாகப் பின்பற்றும்போது நாம் மட்டும் விதிவிலக்காக இருப்பது எந்த விதத்தில் சரி? இரவுத்தூக்கம் 7 - 8 மணி நேரமாவது அவசியம். 

சமூக வலைதளப் பயன்பாடு: தூக்கம் கெடுவது என்றாலே அதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். தொலைக்காட்சி, இணையம், வாட்ஸ்அப் என அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே ஒதுக்கிச் செயல்படுங்கள். உங்களுக்கான நேரத்தை இவற்றின் கையில் கொடுத்துவிட வேண்டாம். இணைய பயன்பாடு என்பது நமது தேவைக்கானதாக இருக்கட்டும். 

சமூக வலைத்தளப் பயன்பாடு

தேவையானதற்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக் கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள்.

கால நிர்ணயம்: இன்றைய காலம், டெட்லைன் வைத்துச் செயல்படும் காலம். நாம் எந்த வேலையைத் தொடங்கினாலும் அதைச் செய்து முடிப்பதற்கான காலக்கெடுவைத் தீர்மானித்துவிட்டு செயல்படுங்கள். அப்போதுதான் நேர விரையத்தைத் தவிர்க்க முடியும்.

முக்கியமான பணிக்கு முதல் மரியாதை: ஒரு நாளில் நாம் செய்து முடிக்க பல்வேறு வேலைகள் இருக்கலாம். அவற்றில் எந்த வேலை முக்கியமோ, அதை முதலில் முடியுங்கள். அப்போதுதான் நமக்கு மனநிம்மதி கிடைக்கும். அடுத்த பணிகளை துடிப்பாகச் செய்ய மனம் ஒத்துழைக்கும்.

`முடியாது' சொல்லப் பழகுங்கள்: செய்து முடிப்பதற்கான கால அவகாசம் இருக்கிறதா என்பதைக் கணக்கிடாமலேயே பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்வதால், பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். எனவே, செய்ய இயலாத வேலைகளுக்கு `முடியாது' என்று சொல்லிப் பழக வேண்டும். நேர மேலாண்மையில் இதுவும் முக்கியம்.

வேலையில் ஈடுபாடு: ஒரு வேலையில் இறங்கினால் அதை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். நம் சிந்தனையை அதன் மீது ஒருமுகப்படுத்த வேண்டும். அப்படிச் செயல்பட்டால் வேலையைச் சரியாக முடிப்பதோடு, சரியான நேரத்துக்குள் செய்து முடிக்கலாம்.

வார விடுமுறை ஓய்வுக்கானதே: வார விடுமுறையை ஓய்வுக்காகப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் அடுத்த வாரத்தைப் புத்துணர்வுடன் தொடர முடியும். வார நாள்களை நன்முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது, வார விடுமுறையை மனஅழுத்தமில்லாமல் ஓய்வுக்குச் செலவிட முடியும்.

உடற்பயிற்சி: நேர மேலாண்மை நன்முறையில் செயல்படுத்தப்பட்டாலே மன அழுத்தம், பணிச்சுமை குறைந்து உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண முடியும். அதுபோக, விடியற்காலையில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். உடல்நலம்தான் நம் செயல்பாடுகள் அனைத்துக்கும் அச்சாணி என்பதை மனதில்கொண்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

விரும்பி பணிசெய்தல்: நேர மேலாண்மையின் இறுதியான ஆலோசனை, செய்யும் வேலையை முழு விருப்பத்தோடு செய்ய வேண்டும் என்பதே. அப்படி விருப்பத்தோடு செய்யும்போது அந்த வேலை நமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், பொழுதுபோக்குபோலவும் அமையும்.

சொல்லப்பட்ட அனைத்தையும் பழக்கத்துக்குக் கொண்டுவந்தால், நாமும் ஓர் அஷ்டாவதானிதான்!