வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (14/10/2018)

கடைசி தொடர்பு:10:20 (14/10/2018)

நவராத்திரியை டேஸ்ட்டியாக கொண்டாட ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

நவராத்திரி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குஷியாகிவிடுவார்கள். வீட்டுக்கு நிறைய விருந்தாளிகளை அழைத்து, அவர்களுக்குத் தங்களுடைய கைகளால் செய்த நெய்வேத்தியத்தை அளிப்பது முக்கியமான ஒன்று.  அப்படியான நவராத்திரி சமயத்தில் அம்மனுக்குப் படைத்து, கொலு பார்க்க வந்திருப்பவர்களுக்குக் கொடுத்து, ருசிக்கவைக்க சுவையான நைவேத்திய வகைகள் சில இதோ...

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பி

1. பச்சைப் பட்டாணி சுண்டல்

தேவையானவை: 

உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்

கேரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பட்டாணியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்... கவனம்). வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெந்த பட்டாணியை சேர்த்துப் புரட்டி... கேரட் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.  

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பி

2. ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை: 

ஸ்வீட்கார்ன் முத்துக்கள் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க:

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

மல்லி (தனியா) - 4 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஸ்வீட்கார்னை உப்பு சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்... கவனம்). வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து, வெந்த ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கி, பொடித்து வைத்த பொடியைத் தூவி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.  

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பி

3. வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை: 

உரித்த வேர்க்கடலை - ஒரு கப்

மெல்லியதாக நறுக்கிய தக்காளி

மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - தலா 2 டேபிள்ஸ்பூன்

அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கடுகு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி, குடமிளகாயை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி. இறுதியில் வேர்க்கடலையையும் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். பொரியையும், கொத்தமல்லித்தழையையும் மேலே தூவிவிடவும்.  

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பி

4. எள் உருண்டை

தேவையானவை

வெள்ளை எள் - ஒரு கப்

வெல்லம் - அரை கப்

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் படபடவென்று சத்தம் வரும் வரை எள்ளை வறுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பிறகு வெல்லத்தையும் சீவிப் போட்டு அடிக்கவும். இரண்டும் சேர்ந்து வந்ததும் நல்லெண்ணெய் தொட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும் (பொடியாகவும் நைவேத்தியம் செய்யலாம்). 

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பி

5. ஸ்ரீ சாகம்பரி பாத்

தேவையானவை: 

பச்சரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப்

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வறுத்துப்பொடிக்க:

கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு கப் அரிசியுடன்  2 கப் நீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, கொரகொரப்பாகப் பொடிக்கவும். மீதமுள்ள எண்ணெயை அதே வாணலியில் ஊற்றி... காய்கள் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் விடவும். காய்கள் வெந்ததும் சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பொடித்து வைத்த பொடியைத் தூவவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு:

நவராத்திரியில் அம்மனை காய்கறி, பழங்களால் அலங்கரிப்பர். உலக நன்மைக்காக அன்னை ஸ்ரீசாகம்பரி காய்கள், பழங்கள், தானியங்களுடன் வந்து காட்சியளித்து மக்களுக்கு அவற்றை அளித்ததால், நவராத்திரியில் இந்த ஸ்ரீசாகம்பரி வழிபாடு நடத்தப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க