வெளியிடப்பட்ட நேரம்: 07:36 (15/10/2018)

கடைசி தொடர்பு:14:47 (15/10/2018)

சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிக்க 10 வழிகள்!

ஷாப்பிங் செல்வதற்கான பட்ஜெட்டைத் தயாரித்தவுடன், அதற்கேற்ற பணத்தை மட்டுமே ஏடிஎம்-மிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்.

ஷாப்பிங் செய்வது விளையாட்டான காரியம் அல்ல. பலரும் பணத்தைச் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறை, அதை முறையாகச் செலவு செய்து சேமிப்பதில் இருப்பதில்லை. கொஞ்சம் மெனக்கிட்டு, நாம் செய்யும் செலவுகளைத் திட்டமிட்டு முறைப்படுத்தினால் நமது சேமிப்பு அதிகரித்து, அதன் மூலம் நமது முதலீடுகளும் பெருக வாய்ப்பு உள்ளது. 

ஷாப்பிங்

அந்த வகையில், நமது வருவாயில் அதிக சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வாங்குவதில் சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பணத்தைச் சேமிக்கலாம். இதற்காகத் தரமற்ற பொருள்களை வாங்க வேண்டும் என்றோ அல்லது பட்டினி கிடக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. 

தேவை, சற்று மெனக்கிடலும் திட்டமிடலும்தான். அப்படியான 10 விஷயங்கள் இங்கே...

1) ஷாப்பிங் செல்வதற்கு முன் திட்டமிடுங்கள்

உணவுப் பொருள்களில் சேமிப்பு தொடங்குவதே, கடைக்குள் அடியெடுத்து வைக்கும் முன்னர் வாங்க வேண்டிய பொருள்களுக்கான ஆர்டர் லிஸ்ட்டைத் தயாரித்துக்கொள்வதிலிருந்துதான். இது, மிக எளிதான மற்றும் பின்பற்றக் கூடிய செயல்தான். 

சமையலறையில் எப்போதுமே ஒரு நோட்புக்கும் பேனாவும் இருக்கட்டும் அல்லது உங்கள் போனையேகூட ஷாப்பிங் லிஸ்ட்டைத் தயாரிக்க, கையில் வைத்துக்கொள்ளுங்கள். வார நாள்களில், எப்போதெல்லாம் பொருள்களின் தேவை குறித்து நினைவுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும், தேவைப்படும் பொருள்களின் விலை என்ன என்பதை ஆன்லைனில் செக் செய்துகொண்டால், அவற்றுக்கு உத்தேசமாக எவ்வளவு செலவாகும் என்பதைக் கணித்துக்கொள்ள முடியும். 

அதே சமயம் இவ்வாறு வாரம் முழுவதுமோ அல்லது மாதம் முழுவதுமோ தயாரித்த பட்டியலை, ஷாப்பிங் செல்லும்போது உங்களுடன் எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். மேலும், என்ன பொருள்கள் தேவையோ அவற்றை மட்டும் வாங்குங்கள். அப்படிச் செய்தால், அது உங்களது பட்ஜெட்டுக்குள் அடங்கிவிடும். பார்க்க அழகாக இருக்கிறது, சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிறது என்பதற்காகவெல்லாம், ஷாப்பிங் பட்டியலில் இல்லாதவற்றை ஒருபோதும் வாங்காதீர்கள். 

2) உங்கள் உணவுகளைத் திட்டமிடுங்கள்

மாதத்தின் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கான உணவுப் பட்டியலை முன்கூட்டியே தயாரித்துக்கொண்டால், அவற்றுக்கேற்ற பொருள்களை மட்டும் உங்கள் ஷாப்பிங் லிஸ்ட்டில் எழுதிக்கொள்ளலாம். கூடுமானவரை உங்கள் உணவுப் பட்டியல், சமையலறையில் ஏற்கெனவே இருக்கும் பொருள்களின் அடிப்படையாகக் கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொண்டால், எவையெவை இல்லையோ அந்தப் பொருள்களை மட்டும் வாங்கினால் போதுமானதாக இருக்கும். வார உணவுப் பட்டியலைத் தயாரிக்க முடியாதவர்கள், அதை இணையதளங்களில் பார்த்துக் கூடத் தயாரிக்கலாம். மேலும், முடிந்தால் மாதத்தின் ஏதாவது ஒரு வாரத்தை, எதுவுமே வாங்காத ஷாப்பிங் அற்ற வாரமாகக் கூட கடைப்பிடிக்கலாம். 

3) செலவுகளைக் கண்காணியுங்கள்

மளிகை உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை எழுதி வாருங்கள். மாதம் ஒன்றுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை ஒருமுறை தெரிந்துகொண்டால், உங்கள் மளிகை லிஸ்ட்டில் எந்தெந்தப் பொருள்களைக் குறைத்து வாங்கலாம் என்பதைக் கண்டறிந்து, சரியான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியும். 

4) குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லுங்கள்

ஷாப்பிங் செல்லும்போது கூடுமான வரை உங்கள் குழந்தைகளை, வீட்டில் பெற்றோர் இருந்தால் அவர்களிடமோ,  இல்லாவிட்டால் நண்பர்களிடமோ (அவர்களுக்குப் பார்த்துக்கொள்வதில் பிரச்னை இல்லை என்றால் மட்டுமே) விட்டுவிட்டு, ஷாப்பிங் செல்லுங்கள். அப்படிச் செல்வதினால், குழந்தைகளினால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, கவனமுடன் ஷாப்பிங் செய்ய முடியும். மேலும், குழந்தைகள் தேவையற்ற பொருள்களைக் கேட்டு அடம் பிடித்து, அதனால் அவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலைமையையும் தவிர்க்கலாம். அதே சமயம், பணத்தைப் பற்றியும் பொருள்களை வாங்கும் முறை குறித்தும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள ஏதுவாக அவர்களை, இரு மாதங்களுக்கு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்களுடன் ஷாப்பிங் அழைத்துச் செல்லுங்கள். 

ரொக்கப் பணம்

5) ரொக்கப் பணத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்

ஷாப்பிங் செல்வதற்கான பட்ஜெட்டைத் தயாரித்தவுடன், அதற்கேற்ற பணத்தை மட்டுமே ஏடிஎம்-மிலிருந்து எடுத்துச் செல்லுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பட்ஜெட்டைத் தாண்டிய பணத்தையோ அல்லது வங்கி கார்டுகளையோ உங்களுடன் எடுத்துச் செல்லாதீர்கள். இதனால், கடையில் தேவையற்ற பொருள்களை வாங்கும் உணர்வு ஏற்படுவது குறையும். 

6) செடிகளை வளருங்கள்

உங்கள் வீட்டில் காலி இடம் இருந்தால், அதில் உங்கள் உணவுக்குத் தேவையான கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, தக்காளி மற்றும் காய்கறிச் செடிகளை வளருங்கள். முடிந்தால் பழ மரங்களைக் கூட வளருங்கள். இதனால், நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவழிக்க முடிவதோடு, மளிகை லிஸ்ட்டிலும் செலவைக் குறைத்து, அதைச் சேமிக்க முடியும். 

7) பசியோடு ஷாப்பிங் செல்லாதீர்கள்

சூப்பர் மார்க்கெட்டுக்கு ஷாப்பிங் செல்லும்போது பசியோடு செல்லாதீர்கள். போவதற்கு முன்னர் சாப்பாடோ அல்லது ஏதாவது ஸ்நாக்ஸோ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். ஷாப்பிங் செய்யும்போது பசியில்லாமல் இருந்தால்தான், குறைந்த உணவுப் பொருள்களை வாங்கத் தோன்றும். 

8) மொத்தமாக வாங்குங்கள்

 பொருள்களை மொத்தமாக வாங்கும்போது, விலை மலிவாக இருக்கும். உதாரணம் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள், சோப்பு உள்ளிட்ட  பொருள்கள். 


மொத்தமாக வாங்குங்கள்

9) ஷாப்பிங் செல்வதைக் குறையுங்கள்

நீங்கள் வழக்கமாக வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்பவராக இருந்தால், அதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எனக் குறைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வது, நீங்கள் பொருள்களை வாங்குவதற்கு முன்னர், சமையலறையில் இருக்கும் பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்த உதவும். இதனால், பொருள்கள் வீணாகாது அல்லது கூடுதலான பொருள்கள் வாங்கப்படுவது தவிர்க்கப்படும். 

10) எப்போதும் வாங்குவதையே வாங்குங்கள்

உணவுப் பொருள்களை வாங்கும்போது, நீங்கள் வழக்கமாக வாங்கும் பிராண்ட் பொருள்களையே வாங்குங்கள். மாறாக, புதிதாக ஒன்றை வாங்கி, அதன் சுவை உங்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டால், மீண்டும் பழைய பிராண்ட் பொருளையே வாங்க நேர்ந்து, கூடுதல் செலவு ஏற்படும். கூடவே பொருள்களின் காலாவதி (expiry) தேதியையும் கவனமாகப் பார்த்து வாங்குங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க