வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (15/10/2018)

கடைசி தொடர்பு:14:59 (15/10/2018)

`தியாகராஜன் குமாரராஜாவின் உழைப்பு ஆச்சர்யப்படுத்தியது!’ - `சூப்பர் டீலக்ஸ்’ நடிப்பு அனுபவம் பகிரும் மனுஷ்யபுத்திரன்

தியாகராஜன் குமாரராஜ இயக்கத்தில் உருவாகியுள்ள `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

மனுஷ்யபுத்திரன்

கவிஞர்.மனுஷ்யபுத்திரன் இலக்கியத் துறை மட்டுமன்றி, பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். தியாகராஜன் குமாரராஜாவின் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஏற்கெனவே, கழுகு படத்தின் இயக்குநர் சத்ய சிவா இயக்கிய `சிவப்பு' படத்திலும் நீதிபதியாக நடித்துள்ளார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

`சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து அவரிடம் கேட்டோம். ``இதற்கு முன்பே நான் `சிவப்பு' படத்தில் நடித்திருந்தாலும், தற்போது `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிப்பது முற்றிலும் வேறொரு அனுபவமாக இருந்தது. தியாகராஜன் குமாரராஜாவின் `ஆரண்ய காண்டம்' எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். ஒரு நாள் அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, `வாழ்வின் அர்த்தம் குறித்துப் பேசக்கூடிய வகையில் ஒரு கதாபாத்திரத்தை எழுதியுள்ளேன். அதை எழுதும்போதே எனக்கு உங்கள் குரல்கேட்டுக் கொண்டே இருந்தது. நீங்கள், அதில் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்றார். படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை நேர்த்தியாக உருவாக்க அவர் உழைப்பது என்னை ஆச்சர்யப்படுத்தியது. கவிஞராக மட்டுமே அடையாளப்படாமல் பலதரப்பட்ட தளங்களில் பயணிக்கவே நான் விரும்புகிறேன்" என்றார்.