வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (16/10/2018)

கடைசி தொடர்பு:10:31 (16/10/2018)

பசிக்காக மட்டுமல்ல, குழந்தை அழுவதற்கு இந்த 10 காரணங்களில் ஒன்றும் இருக்கலாம்! #GoodParenting

​​​``குழந்தைகள் பசித்தால் அழுவது போலவே, இன்னும் சில காரணங்களாகவும் அழும்" என்கிறார் சென்னை, மூத்த குழந்தைகள் நல மருத்துவர், பேராசிரியர் இரா.சோமசேகர்.

பசிக்காக மட்டுமல்ல, குழந்தை அழுவதற்கு இந்த 10 காரணங்களில் ஒன்றும் இருக்கலாம்! #GoodParenting

வீட்டில் ஒரு குழந்தை இருந்தால், எல்லோரின் கவனமும் அதன்மீதே இருக்கும். அது தூங்கும்போது இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டும் என்று வீட்டினரின் மையமாக அந்தக் குழந்தை மாறிவிடும். குழந்தையின் சிரிப்பு எல்லோருக்கும் பரவும். அதே நேரம் அது அழ ஆரம்பித்தால், பதற்றமும் பயமும் என்ன செய்வது என்ற குழப்பமும் குடும்பத்தினைத் தொற்றிக்கொள்ளும். ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்புவார்கள். குழந்தைகள் எதற்காகவெல்லாம் அழும் என்று தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக, பெற்றோர்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம். 

குழந்தைகள் டாக்டர் ``குழந்தை பசித்தால் அழும் என்பது எல்லோருக்கும் தெரியும் அதோடு சேர்த்தும் இன்னும் சில காரணங்களாகவும் அழும்" என்கிறார் சென்னை, மூத்த குழந்தைகள் நல மருத்துவர், பேராசிரியர் இரா.சோமசேகர். அவர் கூறியதிலிருந்து...

1. ஒரு குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் தேவை என்று அதன் தாய்க்கு நன்கு தெரியும். குழந்தையின் முகக்குறிப்பை வைத்தே அதைக் கண்டுபிடித்துவிடுவார். சிலநேரங்களில் அது தவறும்போது, குழந்தை விரலைச் சூப்பும். அப்போதும் பால் கொடுக்காவிட்டால்தான் அழும். உடனே பால் குடிக்க வைத்தால் குடிக்காது. தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்து, பாட்டுப்பாடி, அந்தக் குழந்தை சமாதானம் ஆனபின்பே பால் கொடுத்தால்தான் அது குடிக்கும். 

2. பால் கொடுக்கும்போது, குழந்தையைச் சரியான பொசிஷனில் வைத்துக்கொள்ள வேண்டும். சரியாக வாய்பொருந்தாவிட்டால், பால் குடிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், தாய்ப்பாலில் மேல் பால், நடுப்பால், கடைசிப் பால் என்று மூன்று உள்ளன. இதில் கடைசிப்பால் கிடைக்காமலும் குழந்தை அழக்கூடும். 

3. மூக்கடைப்பு என்பது குழந்தைகளுக்கு அடிக்கடி நடக்கக்கூடியது. பெரியவர்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால், வாயால் சுவாசித்துக்கொள்வர். ஆனால், பச்சிளம் குழந்தைகளால் அவ்வாறு இயலாது. அதன் பாதிப்பில், குழந்தைகளின் காதின் செவிப்பறைகளும் உட்புறமாக இழுக்கப்பட்டிருக்கலாம். காற்றோட்டமான இடத்துக்குத் தூக்கிச் சென்று சிறிதுநேரம் வைத்திருந்தால் அழுகை குறையும். 

4. குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவர் நல்லா சொகுசாக வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கும். அதனால்தான் ஒருவர் வைத்திருக்கும்போது மட்டும் அழாமல் இருக்கும். காரணம் அவர் அவ்வளவு லகுவாக வைத்திருப்பார். அந்த சொகுசு இல்லையென்றால் அழக்கூடும். 

குழந்தைகள்

5. குழந்தைகளுக்கு அணிவித்திருக்கும் இறுக்கான ஆடைகளாலும் அழலாம். நன்கு உலர்ந்த காட்டன் உடைகளே குழந்தைகளுக்கான சிறந்த ஆடைகளாகும். 

6. இறுக்கமான உடை போலவே, உடைக்குள் மிகச் சின்ன எறும்புகள் அல்லது சிறு பூச்சிகள் இருந்து கடித்தாலும் குழந்தை அழும். உடைகளை கழற்றிவிட்டுப் பார்த்தால், அதன் மடிப்புகளில் அவை ஒளிந்துவிடலாம். அதனால், நன்கு கவனித்து, கூர்ந்து பார்க்க வேண்டும்.

7. பெரியவர்களைப் போலவே, குழந்தைக்கும் தான் இருக்கும் வீட்டின் அல்லது அறையின் தட்பவெட்ப நிலை சீராக இருக்க வேண்டும். ஏ.சி அறையில் வைத்திருக்கிறேன் என அதிக குளிராக இருந்தாலோ, மின் விசிறியில் வைத்திருக்கும்போது தூசி சூழ்ந்தாலோ அது குழந்தைக்கு ஒத்து வராமல் அழ வைத்துவிடும். எனவே, தட்பவெட்ப நிலையிலும் கவனம் தேவை. 

8. அம்மா சாப்பிடும் உணவு வகைகளும் குழந்தையின் அழுகைக்கு ஒரு காரணமாக அமையலாம். வாயு அதிகம் ஏற்படுத்தும் உணவுகளை அதிகம், அம்மா சாப்பிடும்பட்சத்தில் அது குழந்தைக்கும் போய் சேர்ந்துவிடும். அதன் பாதிப்பாலும் குழந்தை அழலாம்.

குழந்தை பசி

9. தாய்ப்பால் ஊட்டும் தாய் அமைதியான மனநிலையில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். எப்போதும் பதற்றமாக இருப்பது, பயத்தில் இருப்பது எல்லாமே குழந்தையைப் பாதிக்கும்; அழவும் வைக்கும்.

10. குழந்தைக்கு உடல்நிலையில் தென்படும் மாற்றம். காய்ச்சல், வயிற்றுவலி போன்ற தொந்தரவுகளால் அழுவதைத் தவிர்க்க முடியாது. 

இந்த 10 காரணங்கள் தவிர்த்தும் குழந்தை அழக்கூடும். இவை இயல்பாக நம் வீடுகளில் நடக்கக்கூடியவை என்பதால் கூறியுள்ளேன். உங்களால் குழந்தையின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை என்றால், மருத்துவரிடம் அழைத்துச்செல்வதே நல்லது. குறிப்பாக, 10 வது காரணமான உடல்நலக்குறைப்பாட்டால் அழும் குழந்தையை தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்