வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (16/10/2018)

கடைசி தொடர்பு:20:20 (16/10/2018)

`லாக்கப்பைத் தொடர்ந்து வெக்கை’ - வெற்றிமாறனின் அடுத்த படைப்பு!

பொல்லாதவன் , ஆடுகளம், விசாரணை போன்ற தனது படங்களின் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் எழுதி, இயக்கியுள்ள 'வடசென்னை' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த திரைப்படத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன்

வடசென்னையின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என முன்பே தெரிவித்திருந்த வெற்றி மாறன், தற்போது பூமணியின் 'வெக்கை' நாவலைத் திரைப்படமாக எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சந்திரக்குமார் எழுதிய 'லாக்-அப்' நாவலைத் தழுவி  'விசாரணை' திரைப்படத்தை வெற்றிமாறன் எடுத்திருந்தார். அந்தப் படத்துக்கு தேசிய விருதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ள 'வெக்கை' நாவல் எழுத்தாளர் பூமணி எழுதியது. 1982-ம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் வாசிப்பனுவம் உள்ளவர்கள் மத்தியில் பிரபலமான நாவல்.

பலராலும் முக்கியமானதொரு கலைப்படைப்பாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாவல் கரிசல் பகுதியிலிருந்து வந்த மிகமுக்கியமான அரசியல் படைப்பு.  சாதிய ஒடுக்குமுறைகள், அன்றைய அரசியல் கட்சிகளின் ,அமைப்புகளின் செயல்பாடு முதலியவற்றைப் பற்றிப் பேசும் நாவல். மதுரை, சென்னையைக் களமாகக் கொண்டு படங்களை இயக்கியுள்ள வெற்றிமாறன். தற்போது கரிசல் பகுதியை நோக்கிக் களமிறங்கியுள்ளார்.

வெக்கை

இது குறித்து 'வெக்கை' நாவலை எழுதிய எழுத்தாளர் பூமணியிடம் பேசினோம், "வெற்றி மாறனின் ஆடுகளம், விசாரணை உள்ளிட்ட  படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஆறு மாதத்துக்கு முன்பு என்னிடம் பேசினார். 'வெக்கை' நாவல் அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதைத் திரைப்படமாக்கலாம் எனவும் கூறினார். 'வடசென்னை' படம் வெளியானதும் என்னைச் சந்திக்க வருவதாகக் கூறினார். சிறுவன் ஒருவனை இந்தச் சமூகத்தில் நிகழும் சம்பவம் எதை நோக்கி அவனைத் தள்ளுகிறது என்ற புள்ளியிலிருந்து இந்த நாவல் விரியும். இந்த நாவல் எவ்வாறு படமாகும் என்பதை இனிமேல்தான் இருவரும் பேச வேண்டும். கரிசல் மண்ணின் ரத்தமும் சதையுமாக இந்தத் திரைப்படம் அமையும் என நம்புகிறேன்"  என்றார்.