வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (18/10/2018)

கடைசி தொடர்பு:18:43 (18/10/2018)

பண்டிகை காலத்தை சுவையாக்க ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

விடுமுறை நாட்களை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஸ்பெஷலான ரெசிப்பிகளை எளிமையாக செய்வதற்குக் கற்றுக் கொடுக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் சசிமதன்.

1. வெல்லப் புட்டு

தேவையானவை:
 புழுங்கல் அரிசி - ஒரு கப்
 வெல்லம் - முக்கால் கப்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 ஏலக்காய்த்தூள் - சிறிது
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)  

ரெசிப்பி

செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக்கொள்ளவும். இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தயிர் சாதம்போல் தளரக் கலந்து, அத்துடன் துவரம்பருப்பையும் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டால் முத்துபோல் நிற்க வேண்டும். இந்தப் பதத்துக்கு வந்ததும் உதிர்த்த புட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர்உதிராக இருக்கும்.

2. ராஜ்மா சுண்டல்

தேவையானவை:

சிவப்பு ராஜ்மா - ஒரு கப்

பெருங்காயத்தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

ரெசிப்பி

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 2

செய்முறை:

ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும். தயாரித்து வைத்துள்ள வறுத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

3. சிவப்புக் காராமணி சுண்டல்

தேவையானவை:

சிவப்புக் காராமணி - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 5

உப்பு - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - கால் கப்

கசகசா - ஒரு டீஸ்பூன்

ரெசிப்பி

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

காராமணியை குக்கரில் வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கசகசா மூன்றையும் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதில் வெந்த காராமணியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி, அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:

இதே முறையில் வெள்ளைக் காராமணியிலும் சுண்டல் செய்யலாம்.

4. கடலைப்பருப்புப் பாயசம்

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப்

வெல்லம் - ஒரு கப்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

முந்திரி, திராட்சை - தேவையான அளவு

தண்ணீர் - 2 கப்

பால் - கால் கப்

ரெசிப்பி

செய்முறை:

குக்கரில் நெய் சேர்த்துச் சூடானதும் கடலைப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு வேகவைக்கவும். பிறகு கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக கரண்டியால் மசித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதில் வெந்த கடலைப்பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பால், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

5. ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை:

அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப்

பச்சை மிளகாய் - ஒன்று(பொடியாக நறுக்கியது)

எலுமிச்சைச் சாறு - அரைப்பழம்

எண்ணெய் - தாளிக்க

கடுகு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

ரெசிப்பி

செய்முறை:

ஸ்வீட் கார்னை ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு உதிர்த்த கார்ன், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

இந்தச் சுண்டல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 

6. டபுள் பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:

காய்ந்த டபுள் பீன்ஸ் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2

தாளிக்க - எண்ணெய்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

டபுள் பீன்ஸை 10 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த பீன்ஸ், அரைத்த தேங்காய் - பச்சை மிளகாய்க் கலவை சேர்த்து, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பச்சை டபுள் பீன்ஸ் என்றால், ஊறவைக்கத் தேவையில்லை. 

7.கட்டா மீட்டா பாஸ்தா சுண்டல்

தேவையானவை:

ஏதாவது வடிவமுள்ள பாஸ்தா - ஒரு கப்

இட்லி மிளகாய்ப்பொடி அல்லது பருப்புப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிது

ட்யூட்டி ஃப்ரூட்டி - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

கறிவேப்பிலை - சிறிது

ரெசிப்பி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு அதில் பாஸ்தா, சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பாஸ்தா நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும்  கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பாஸ்தாவைச் சேர்க்கவும். அதனுடன் இட்லி மிளகாய்ப்பொடி, ரெண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, நன்றாகக் கிளறி இறக்கி, ட்யூட்டி ஃப்ரூட்டி, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரிக்கவும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க