வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (19/10/2018)

கடைசி தொடர்பு:08:08 (19/10/2018)

இந்திய சந்தைக்கான கிக்ஸ் மாடல் கார் எப்படி இருக்கும்? - சஸ்பென்ஸை உடைத்த நிஸான்!

பெட்ரோல் டேங்க் மூடி, வலதுபக்கத்துக்கு வந்திருக்கிறது. ரெனோ கேப்ச்சரின் அப்டேட்டட் MO ப்ளாட்ஃபார்மில்தான், இந்திய கிக்ஸ் தயாரிக்கப்படும்.

ஒரு மாதத்துக்கு முன்பு, தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டது நிஸான். இந்த நிலையில், தற்போது கார் பார்வைக்கும் எப்படி இருக்கும் என்பதை, ஆட்டொமொபைல் பத்திரிகையாளர்களிடம் பிரத்யேகமாகக் காட்டியிருக்கிறது அந்த நிறுவனம்; அசப்பில் பார்க்க சர்வதேச கிக்ஸ் காரையே இது நினைவுபடுத்துகிறது என்றாலும், கேபின் குறித்த படங்கள் மற்றும் தகவல்களை நிஸான் இன்னும் சொல்லவில்லை. டெரானோவுக்கு மாற்றாக இது பொசிஷன் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

டிசைனில் என்னென்ன மாறியிருக்கிறது?

 

கிக்ஸ்

 

சர்வதேச மாடலுடன் ஒப்பிடும்போது, இந்திய கிக்ஸின் பம்பர்கள் வித்தியாசப்படுகிறது. என்னதான் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், பூமராங் வடிவ LED DRL, V-Motion கிரில், அகலமான வீல் ஆர்ச், கறுப்பு நிற பில்லர்கள், Floating ரூஃப், ரூஃப் ரெயில்,17 இன்ச் அலாய் வீல், ஆரஞ்ச் நிற ரூஃப், ஷார்ப்பான பக்கவாட்டு பாடிலைன் என இரண்டுக்கும் டிசைனில் ஒற்றுமைகள் இருந்தாலும், முன்பக்கத்தில் Faux ஏர் இன்லெட்க்கு கீழே இருக்கும் பனிவிளக்குகள், அலுமினிய Skid பிளேட், கிரில்லின் Mesh டிசைன், பின்பக்க க்ரோம் பட்டை என வித்தியாசங்களும் இருக்கின்றன. பெட்ரோல் டேங்க் மூடி, வலதுபக்கத்துக்கு வந்திருக்கிறது. ரெனோ கேப்ச்சரின் அப்டேட்டட் MO ப்ளாட்ஃபார்மில்தான், இந்திய கிக்ஸ் தயாரிக்கப்படும்; சர்வதேச மாடலோ புதிய மைக்ராவின் லேட்டஸ்ட் வெர்ஷன் V-ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. 

 

நான் வளர்கிறேன் மம்மி!

 

கிக்ஸ்

 

சர்வதேச மாடலைவிட, இந்திய கிக்ஸ் அளவில் பெரிதாக இருக்கிறது. 4,384மிமீ / 1,813மிமீ / 1,656மிமீ (நீளம்/அகலம்/உயரம்) இதை உணர்த்துகின்றன. ஆனால், இதன் 2,673 மிமீ வீல்பேஸ், கேப்ச்சருக்கு சமமாகவே உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 210 மிமீ என்பது பெரிய ப்ளஸ்; இப்படி கார் கொஞ்சம் பெரிய சைஸில் இருப்பதால், சர்வதேச மாடலின் 432 லிட்டர் பூட் ஸ்பேஸைவிட இங்கே இடவசதி அதிகமாக இருப்பதற்கு சாத்தியங்கள் உண்டு. ஸ்டைலிஷ் கலர் காம்போ மற்றும் டிசைன், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி. Shark Fin Antenna, 360 டிகிரி கேமரா என கேபின், தற்போதைய நிஸான் கார்களைவிட அசத்தலாக இருக்கும் என நம்பலாம்.

 

 இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் என்ன?

 

கிக்ஸ்

 

டெரானோ மற்றும் கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே, இங்கும் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோலுக்கு 5 ஸ்பீடு மேனுவல்/CVT என்றால், டீசலுக்கு 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வரலாம். டெரானோவுக்கு அதன் விலையே பெரிய வில்லனாக அமைந்ததால், கிக்ஸின் விலை விஷயத்தில் நிஸான் கவனமாகவே இருக்கும் எனலாம். எனவே க்ரெட்டாவுக்குப் போட்டியாக வரப்போகும் இது, 9 - 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், அடுத்த ஆண்டின் துவக்கத்தில், புத்தாண்டு பரிசாக வெளிவரலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க