வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (19/10/2018)

கடைசி தொடர்பு:14:05 (19/10/2018)

நடிகரின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் பள்ளிச் சிறுவர்கள்! - குவியும் கண்டனங்கள்

பள்ளிச் சிறுவர்கள் நடிகர் விஜய்யின் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து, மலர் தூவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்கள் ஏற்கெனவே ரசிகச் சண்டைகளால் நிரம்பி வழிகையில், இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது சினிமா. கலை என்பதைத் தாண்டி, நம் சினிமாக்களில் கதை நாயகர்களை மையப்படுத்திய சினிமாக்கள் ஆரம்பகாலம் தொட்டே வந்துகொண்டிருக்கின்றன. இதன் நீட்சியாக தமிழகத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் தொடங்கி, புதிதாக நடிக்க வரும் நடிகர்கள் வரை அனைவருக்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்படுகின்றன.

சிறுவர்கள்

தமிழ் சினிமா இதுநாள் வரையிலும் தமிழக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பது இதற்கு மிக முக்கியமான காரணம். முதல் நாள் திரைப்படம் வெளியாகும் போது கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது இன்றுவரையிலும் சம்பிரதாயமாகவே  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பாலாபிஷேகங்கள் வேண்டாமென சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூறினாலும் அதை யாரும் ஏற்பதாகத் தெரிவதில்லை. மாறாகத் திரைப்படம் வெளியாகும்போது நடந்த பாலாபிஷேகங்கள், தற்போது டீசர் வெளியிடுவது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதிலேயே ஆரம்பமாகிறது. பள்ளி செல்லும் சிறுவர்களின் கைகளில் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு விஜய் ரசிகர்கள் பலருமே தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார்கள். சிறுவர்களை இதுபோல செய்யக் கூடாது எனச் சொல்வதைத் தவிர்த்து, அவர்களையும் பழைமைவாத நாயகத் துதிபாடலுக்கு இழுப்பவர்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.