வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (19/10/2018)

கடைசி தொடர்பு:16:48 (19/10/2018)

நவராத்திரி ஸ்பெஷல் சுவையான நைவேத்தியங்கள்! #Recipes

பிரசாதங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால், வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அம்பிகையின் அருளும் கிட்டும்.

கல உயிரிலும் ஆதி சக்தியே நிறைந்திருக்கிறாள் என்பதை விளக்கும் விதமாக, நவராத்திரி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. 9 நாள்களும் கொலுவைத்து வழிபடுவது, எல்லா வீடுகளிலும் சாத்தியப்படாத ஒன்று. இருந்தாலும், நவராத்திரியின் கடைசி நாளில் நம்மைச் சுற்றியிருக்கும் சுமங்கலிப் பெண்களுக்கு முடிந்த அளவு குங்குமம், வளையல்கள், திருமாங்கல்யக் கயிறு, ரவிக்கைத் துண்டு போன்றவற்றைக் கொடுப்பதன் மூலம், 9 நாளும் கொலுவைத்து வழிபட்ட புண்ணியத்தை அடையலாம். இதனால், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். குடும்பத்தில் செல்வம் பெருகும். மேலும், உணவுப் பொருள்களை அம்பிகைக்கு நைவேத்தியமாகப் படைத்து, பிரசாதமாக மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால், வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அம்பிகையின் அருளும் கிட்டும். அம்பிகைக்குப் படைக்கக்கூடிய எளிமையான நைவேத்தியங்கள் ரெசிப்பியை வழங்குகிறார், வித்யா பாரதி.

சம்பா ரவை கேசரி:

தேவையானவை:

உடைத்த சம்பா ரவை - அரை கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

நைவேத்தியங்கள்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும், சம்பா ரவையைச் சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்தெடுத்து தனியாக ஆறவிடவும். அதே வாணலியில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் சர்க்கரைச் சேர்த்து கட்டிப்பாடாமல் கிளறவும். சர்க்கரை உருகியதும், இத்துடன் ஏலக்காய்த் தூள், கேசரிப் பவுடரை ஒன்றாகச் சேர்த்து கிளறி ரவையை வேகவிடவும். இந்தச் சமயத்தில் அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரியைச் சேர்த்து, சிவக்க வறுத்தெடுத்துக்கொள்ளவும். சர்க்கரை உருகி ரவையுடன் சேர்ந்து சுருண்டு வரும்போது முந்திரி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

வெண் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - முக்கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - மூன்று கப்
முந்திரி - 10
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

வெண் பொங்கல்

செய்முறை:

பச்சரிசி, பாசிப்பருப்பைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இத்துடன் மூன்று கப் தண்ணீர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரி சேர்த்து சிவக்க வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து தாளித்துப் பொங்கலில் விட்டுக் கிளறி இறக்கவும்.

டிப்ஸ்:

காவியினால் ஆன கோலமிட்டு அம்பிகை வழிபடுவதன் மூலம், வீட்டின் துன்பங்கள் அகலும்.

சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என முப்பெருந்தேவிகளை நவராத்திரி தினத்தில் வழிபடுவதன் மூலம், சகல செல்வங்களும் பெருகும். 


டிரெண்டிங் @ விகடன்