வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (21/10/2018)

கடைசி தொடர்பு:09:34 (21/10/2018)

விருதுநகர் மட்டன் சுக்கா... மட்டன் இஞ்சி விரவல்... சுவையான மட்டன் ரெசிப்பிகள்!

விடுமுறையைக் கொண்டாடுவதற்காக டேஸ்ட்டியான மட்டன் ரெசிப்பிகளை வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் செஃப் ஆ. பால்வண்ணன். அவர் வழங்கியுள்ள ஸ்பெஷல் ரெசிப்பிகள் இதோ!

1. ஹைதராபாதி கீமா

தேவையானவை:

எலும்பில்லாத மட்டன் (ஆட்டுக்கறி) - 200 கிராம்

இஞ்சி - 30 கிராம்

பூண்டு - 30 கிராம்

மிளகாய்த்தூள் - 15 கிராம்

எண்ணெய் - 30 மில்லி.

மஞ்சள்தூள் - 10 கிராம்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 50 கிராம்

கொத்தமல்லித்தழை - 10 கிராம்

ரெசிப்பி

செய்முறை:

எலும்பில்லாத மட்டனை நன்றாகக் கொத்திக் கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் கலந்து, 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊற வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதில் ஊறவைத்த மட்டனை சேர்த்து, தண்ணீர் எல்லாம் ஆவியாகும் வரை வேகவைக்கவும். வெந்தபின், உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

 

2. மட்டன் முடக்கத்தான் கீரைக் குழம்பு

தேவையானவை:

மட்டன் (ஆட்டுக்கறி) - 200 கிராம்

வெங்காயம் - 60 கிராம்

தக்காளி - 30 கிராம்

இஞ்சி விழுது - 30 கிராம்

பூண்டு விழுது - 30 கிராம்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 25 மில்லி

பச்சை மிளகாய் விழுது - 25 கிராம்

முடக்கத்தான் கீரை - 1 கட்டு (வேகவைத்து மசித்துக் கொள்ளவும்)

பட்டை - 5 கிராம்

ஏலக்காய்  - 3 கிராம்

கிராம்பு - 2 கிராம்

ரெசிப்பி

செய்முறை:

ஆட்டுக்கறியில் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு புரட்டி இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு, வெளியில் எடுத்து மிதமான நிலைக்கு வந்த பிறகு, பிரஷர் குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த மட்டன், வேகவைத்து மசித்த முடக்கத்தான் கீரை மசியலைச் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

3. விருதுநகர் மட்டன் சுக்கா

தேவையானவை:

சின்னவெங்காயம் - 200 கிராம்

எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்

இஞ்சி - 30 கிராம்

பூண்டு - 30 கிராம்

சீரகத்தூள் - 40 கிராம்

மிளகாய்த்தூள் - 20 கிராம்

நல்லெண்ணெய் - 30 மில்லி.

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

வெங்காயத்தையும், மட்டனையும் சின்னச்சின்ன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் ஆட்டுக்கறியையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

4. மட்டன் இஞ்சி விரவல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 50 கிராம்  (பொடியாக நறுக்கிவும்)

மட்டன் - 200 கிராம் (பொடியாக நறுக்கிவும்)

இஞ்சி  - 30 கிராம்

மாங்காய் இஞ்சி - 20 கிராம் (நீளவாக்கில் சிறியதாக கீறவும்)

பூண்டு விழுது - 30 கிராம்

மிளகாய்த்தூள் - 15 கிராம்

எண்ணெய் - 30 மில்லி.

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 30 கிராம்

மஞ்சள்தூள் - 10 கிராம்

சீரகம் - 15 கிராம்

கறிவேப்பிலை - 2 ஈர்க்குகள்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வைக்கவும். தனியே ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சீரகம் போட்டு வதக்கி, பின்னர் மாங்காய் இஞ்சியைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் வேகவைத்த மட்டனைச் சேர்த்து வதக்கி  கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்