வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/10/2018)

கடைசி தொடர்பு:17:27 (22/10/2018)

`மீண்டும் வருகிறதா RX100...?’ என்ன சொல்கிறார் யமஹா அதிகாரி

மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டை பிடிக்க சுஸூகியும் ஹோண்டாவும் முட்டி மோதிக்கொண்டிருந்த காலத்தில் இடையில் புகுந்து அதகளப்படுத்தி யமஹாவை தூக்கி நிறுத்திய பைக் RX100. கிளாசிக் அடையாளம் பெற்ற பைக்குகளை மீண்டும் கொண்டு வந்து அதை வெற்றியடையச் செய்வது ஒரு வியாபார யுத்தி. யமஹாவும் அப்படி தனது RX100 பைக்கை மீண்டும் கொண்டு வரப்போகிறது என சமூகவளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து யமஹா இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம். 

"RX100 பைக் திரும்ப வரப்போவதா சொல்வது சுத்தப் பொய். டிசம்பர் மாதம் ஜப்பானில் பைக்கை வெளியிடப்போவதாக வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள். அப்படி எந்தச் செய்தியும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை இப்படி யாராவது வதந்திகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். RX பைக்கில் இருந்தது யமஹாவின் 2 ஸ்டிரோக் இன்ஜின். 2 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு தடை போட்டு பல வருஷம் ஆகிறது. அந்த இன்ஜின்களுக்கு இருக்கும் தனித்தன்மை 4 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு கிடையாது. ஆனால், 4 ஸ்டிரோக் இன்ஜின் குறைவான காற்று மாசு ஏற்படுத்தும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், சூப்பரான சத்தத்தோடும் யமஹாகிட்ட இருந்து ஒரு பைக் கண்டிப்பா வரும். அது எப்போதுமே RX100 ஆகாது"  எனக் கூறினார்.

rx100

ஆக, யமஹாவிடமிருந்து புது பைக் வந்தாலும் அது RX100 எனும் பெயரோடு வராது. அப்படி வந்தாலும் அந்த பைக் பழைய பைக்கின் இடத்தைப் பிடிப்பது கஷ்டம்தான். ஏனென்றால் RX100 இளைஞர்களின் கிளாசிக் ஐகான்.