மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக்! - அதிர்ச்சி ரிப்போர்ட் | plastic now been discovered in humans

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:12 (23/10/2018)

மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக்! - அதிர்ச்சி ரிப்போர்ட்

மனிதன் தனக்கு எதிராக இருக்கும் எனத் தெரிந்தும் ஒன்றை உருவாக்குகிறான், பயன்படுத்துகிறான், தூக்கி வீசுகிறான். எல்லா வினைகளுக்கும் ஓர் எதிர் வினை உண்டு. கடலில் கிடக்கிற பிளாஸ்டிக்கை உணவாக எடுத்துக்கொண்ட  பறவைகள், மீன்கள் என கடல்வாழ் உயிரினங்கள் இறப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பல மீன்களின் வயிற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வரிசையில் இப்போது மனிதனின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மைக்ரோ பிளாஸ்டிக்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வியன்னா  மருத்துவப் பல்கலைக்கழகம் (Medical University of Vienna) கடந்த வாரம் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவைச் சார்ந்த பல நாடுகளில் இருந்தும் மூன்று ஆண்கள்  ஐந்து பெண்கள்  என எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சோதனை செய்துள்ளனர். ஒரு வாரமாக எட்டு பேருடைய உணவுகளும் குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக்  கடல் உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் கவரில் இருக்கிற உணவுகள், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும் எட்டு பேருடைய மனிதக் கழிவுகளும் சேமிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் இறுதியில் மனிதக் கழிவுகளில் மைக்ரோ அளவுக்கான பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இங்கு குறிப்பிடும் `மைக்ரோ பிளாஸ்டிக்’ என்பது மனித முடியின் அடர்த்தியைவிட பத்து மடங்கு சிறியது. எட்டு பேருடைய டைரி குறிப்புகளைக் கொண்டு எந்த எந்த உணவில் அவை  இருந்தது என்பதைக் கண்டறியும் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஆய்வு முடிவுகளை நவம்பர் மாதம் வெளியிடுவதாக வியன்னா பல்கலைக் கழகம்  அறிவித்திருக்கிறது.