Published:Updated:

“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”
“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”

ம.குணவதி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”

செருப்புகள் அணிந்திருந்தாலும் கால்களின் பக்கவாட்டில் அனலைக் கடத்திக்கொண்டிருந்தது வெயில். ஒரு வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மாமல்லபுரம் மீனவர் காலனியை அடைந்தபோது, பொதுவான ஸ்கேட்டர் உடைகள், ஹெல்மெட், ஷூ என எதுவுமின்றி, எளிய ஃப்ராக்கில் ஸ்கேட்போர்டிங் செய்துகொண்டிருந்தார் கமலி.  கண்களில் அத்தனை கவனம், அத்தனை ஆர்வம்!

 ``யூவ்வ்வ்... வந்துட்டீங்களா?” ஸ்கேட்போர்டு ரேம்ப்பிலிருந்து அப்படியே சறுக்கிவந்து என்னைக் கட்டிக்கொண்டார், அந்த எட்டு வயது ஏகலைவி. கமலி வீட்டின் மாடி அறையில் தங்கியிருக்கிறார் எய்ன் எட்வார்ட்ஸ். அயர்லாந்தைச் சேர்ந்த இவர்தான், கமலியின் தோழி; வழிகாட்டி. ``ஸ்கேட்போர்டிங் செய்யும்போது கமலியைப் பார்க்கும் எவருக்கும், `இதற்காகவே இவள் பிறந்திருக்கிறாள்’ என நினைக்கத் தோன்றும். வேறு ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி, கமலியின் வீட்டில் நான் வாடகைக்குத் தங்கியிருக்கிறேன். உலகப் புகழ்பெற்ற ஸ்கேட்டிங் வீரர் ஜேமீ தாமஸ், ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பர நிகழ்வுக்காக வந்திருந்தபோது மகாபலிபுரம் வந்தார். கடற்கரையில் அமர்ந்திருந்த அவருக்கு கமலியின் சாகசம் அப்படியோர் உற்சாகத்தைக் கொடுத்தது. போட்டுவைத்திருந்த அத்தனைத் திட்டங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஸ்கேட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார் கமலிக்கு. அந்த நிமிடம் மேஜிக்தான்” என்றார் எய்ன் எட்வார்ட்ஸ்.

“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”

கமலி, ஸ்கேட்போர்டிங் பயிற்சிக்குச் சென்றதில்லை. கமலியின் மாமா சந்தோஷ் மூர்த்தி, தொழில்முறை சர்ஃபர். கடலில் சர்ஃபிங் செய்வதற்காக சர்ஃபிங் போர்டையும், ஸ்கேட்போர்டையும் அவர்தான் முதலில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சந்தோஷின் துணையோடு சர்ஃபிங் செய்தாலும், தினமும் தன்னிச்சையான ஆர்வத்தோடு ஸ்கேட்போர்டு பயிற்சி செய்கிறார் கமலி. கிரிக்கெட், கில்லி, கோலி என்றே விளையாடிப் பழகிய மீனவக் காலனிக் குழந்தைகளுக்கு ஸ்கேட்போர்டிங் கற்றுத்தருகிறார் கமலி.

ஸ்கேட்போர்டிங் ரேம்ப்பில் வழுக்கும்போது தவறி விழுந்தால், விழுந்த வேகத்தில் எழுந்து காற்றை பேலன்ஸ் செய்கின்றன கமலியின் கைச்சிறகுகள். விழும்போதெல்லாம் ஓட்டைப் பல்லைக் காட்டிச் சிரிக்கிறார்.

“அவளே டீச்சர், அவளே ஸ்டூடன்ட்!”

கமலியின் அம்மா சுகந்தி, அதிகாலை தொடங்கி இருட்டும் வரை, கடற்கரைக் கோயில் அருகே உள்ள கடையில் ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்கிறார். ``அவ கீழே விழும்போது எல்லாரும் பயப்படுவாங்க. எனக்கு அப்படித் தோணல. பயத்தைக் காட்ட ஆரம்பிச்சா, அவளுக்குக் கவனம் போயிடும். அவளுக்குப் பயமேயில்லை. இன்னும் கொஞ்சநாளில் கமலியை முறையா ஸ்கேட்போர்டு கத்துக்கவைக்கணும். அதுக்கான வழி தெரியலை. தேடிக்கிட்டே இருக்கோம். என் மவனும் கமலியப் பார்த்து, ஆர்வம் காட்டுறான். பணக்கார வீட்டுக் குழந்தைங்க மட்டும்தான் இதெல்லாம் பண்ணணுமா? கமலிக்கு அதுவே டீச்சர், அதுவே ஸ்டூடன்ட். 12 வயசுலதான் கத்துக்கணும்னு ரூல்ஸ் இருக்காமே. மங்களூர்ல நடக்கப்போற ஸ்கேட்போர்டிங்கைப் பார்க்கிறதுக்காக, அடுத்த வாரம் எய்னும் பாப்பாவும் போறாங்க” என்கிறார் சுகந்தி.

``ஸ்கேட்டிங்கா, சர்ஃபிங்கா?’’ எனக் கேட்டால், ``இரண்டும்தான் வேணும்’’ என்று மின்னுகின்றன கமலியின் கண்கள். சுகந்தியிடம் கேட்டால், ``எம் பொண்ணுக்குப் பயமே இருக்கக் கூடாது. எப்படியாவது அவளை சந்தோஷமா ஜெயிக்கவைக்கணும்” என்கிறார்.

ஸ்கேட்போர்டைவிட சில சென்டிமீட்டர் மட்டுமே உயரமாக இருக்கும் கமலி, வரலாற்றின் பெரிய அலை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு