வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (26/10/2018)

கடைசி தொடர்பு:16:34 (26/10/2018)

வங்கிகள் இணைப்பு... வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

வங்கிகள் இணைப்புக்குப் பின்னர், ஐஎஃப்எஸ்சி (IFSC code) உள்ளிட்டவை மாறலாம் என்பதால், அவற்றைக் கண்காணித்து அப்டேட் செய்ய மறந்து விடாதீர்கள்.

வங்கிகள் இணைப்பு... வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!

ங்கிகள் இணைப்பு குறித்த செய்திகளும் விவாதங்களும் இன்று அதிகரித்துவருகின்றன. இந்திய பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை, ரிசர்வ் வங்கியின் `பிஏசி' (Prompt Corrective Action-PAC) என்னும் அமைப்பின்கீழ் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவருகின்றன. இந்த வங்கிகள், மேற்கொண்டு எந்தப் புதிய பெரிய கடன்களையும் அனுமதிக்க இயலாத அளவுக்குப் பிரச்னையில் தத்தளித்துவருகின்றன. 

அந்த வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே, கடந்த 2017, ஏப்ரல் மாதத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இந்தியாவின் வங்கி இணைப்பு வரலாற்றில் இது மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதியன்று, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. 

இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால், அது எதிர்காலத்தில் மேலும் பல பொதுத்துறை வங்கிகளை இணைக்க வழிவகுக்கும் என்றும், இதனால் இந்திய வங்கித் துறை வலுவடையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில், தற்போதும் எதிர்காலத்திலும் இதுபோன்று இணைக்கப்படும் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், கடன் வாங்கியவர்கள், ஃபிக்ஸெட் டெபாசிட்டுகள் வைத்துள்ளவர்கள் உள்ளிட்டோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சொல்லும் சில ஆலோசனைகள் இங்கே... 

வங்கிகள் இணைப்பு

1. பீதியடைய வேண்டாம்

பொதுத் துறை வங்கிகளில் போட்டுவைத்துள்ள உங்கள் பணம், உங்கள் வங்கி இன்னொரு வங்கியுடன் இணைக்கப்பட்டாலும் சரி, இணைக்கப்படாவிட்டாலும் சரி முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். எஸ்.பி.ஐ வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டபோது, கணக்கில் உள்ள பணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

சம்பந்தப்பட்ட வங்கியின் பங்குகளை வைத்துள்ளவர்கள், வங்கிகள் இணைப்பின் நோக்கம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்கள் கருதியே இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், அந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பீதியடைய தேவையில்லை. வங்கிகள் இணைக்கப்படும்போது, அதன் தாக்கம் அல்லது சிரமங்கள் வாடிக்கையாளர்களுக்கு லேசான அளவிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். 

2. (இணைக்கப்பட்ட) புதிய வங்கியின் சேவைகள் மற்றும் கட்டணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள் 

உங்கள் வங்கிக்கணக்கு புதிய வங்கியுடன் இணைக்கப்பட்டால், அந்த வங்கியின் இலவசச் சேவைகள் என்னென்ன, கட்டணச் சேவைகள் என்னென்ன, டெபாசிட்டுகள் மற்றும் கடன்களுக்கான வட்டிவிகிதங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், வங்கியின் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக எவ்வளவு பராமரிக்க வேண்டும், அது காலாண்டுக்கானதா என்பது போன்ற விவரங்களையும்  கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். 

3. வதந்திகளை நம்பாதீர்கள்!

வங்கிகள் இணைப்பு மற்றும் அப்படி இணைந்தால் உங்கள் வங்கிக் கணக்கு, லாக்கர் வசதிகள், ஃபிக்ஸெட் டெபாசிட்டுகள், வங்கிக் கடன்கள் போன்றவை தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிடமிருந்து உங்களுக்கு அதிகாரபூர்வமான கடிதம் அல்லது இ-மெயில் வரும் வரை காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள். போலி இ-மெயில்களுக்கு வாய்ப்புள்ளது என்பதால், அவசரப்பட்டு உங்கள் வங்கிக் கணக்கு, ஐடி மற்றும் பின் நம்பர்களை தெரியாத நபர்களுக்கு அனுப்பிவிடாதீர்கள். பதில் அனுப்பும் முன்னர், நீங்கள் கணக்குவைத்துள்ள வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, தகவல் உண்மைதானா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

4. வட்டிவிகிதங்களில் மாற்றம்

நீங்கள் வங்கிக்கடன் வாங்கியிருந்தாலோ அல்லது ஃபிக்ஸெட் டெபாசிட்டுகளில் பணம் போட்டு வைத்திருந்தாலோ, உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும்போது அவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். எனவே, அப்படி மாற்றங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட புதிய வங்கியே அதுகுறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தும். ஒருவேளை கடனுக்கான வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏதும் அதிகரித்திருந்தால், புதிய வங்கி அதிகாரியை நேரில் சந்தித்து பழைய வட்டிவிகிதத்தையே தொடருமாறு நீங்கள் கோரிக்கைவிடுக்கலாம். சில நேரத்தில் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பு உள்ளது. 

5. ஐ.எஃப்.எஸ்.சி கோடை (IFSC Code) அப்டேட் செய்யுங்கள்

வங்கியின் இணையதளச் சேவையைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும்பட்சத்தில் உங்கள் வங்கிக் கணக்கு, ஐஎஃப்எஸ்சி (IFSC code) உள்ளிட்டவை மாறலாம் என்பதால், அவற்றைக் கண்காணித்து அப்டேட் செய்ய மறந்துவிடாதீர்கள். இதற்குச் சம்பந்தப்பட்ட வங்கி, போதுமான அவகாசம் அளிக்கும் என்றாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் அதைச் செய்ய தவறாதீர்கள். புதிய வங்கியின் இணையதளத்துக்குள் உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டைக்கொண்டு லாக் இன் செய்யும் முன்னர், அந்த இணையதளம் உண்மையிலேயே புதிய வங்கியின் இணையதளம்தானா அல்லது அதேபோன்று வடிவமைக்கப்பட்ட போலியான இணையதளமா என்பதை உறுதிசெய்யுங்கள். 

வங்கி ஏடிஎம்

6. வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள்

சில நேரங்களில் வங்கி இணைப்புக்குப் பிறகு, உங்கள்  வங்கிக் கிளை மற்றும் ஏடிஎம் மையங்கள் போன்றவை மூடப்பட்டு, உங்கள் இருப்பிடத்திலிருந்து சற்று தூரத்தில் அமைய வாய்ப்பு உள்ளன. அப்படி நேர்ந்தால், பணம் எடுக்க அல்லது டெபாசிட் செய்ய மற்றும் லாக்கர் வசதிகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இது தொடர்பாக வங்கியிடமிருந்து உங்களுக்கு என்ன தகவல் வருகிறது என்பதை, கவனமுடன் கண்காணித்துவாருங்கள். 

7. வங்கிக் கணக்கை க்ளோஸ் செய்துவிடாதீர்கள்

வங்கி இணைப்பு குறித்து, பீதியைக் கிளப்பும் வகையில் உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஏதாவது (வாராக்கடன் அதிகரிப்பு போன்ற தகவல்) சொன்னால், அதை நம்பி அவசரப்பட்டு உங்கள் வங்கிக்கணக்கையோ அல்லது ஃபிக்ஸெட் டெபாசிட்டையோ க்ளோஸ் செய்துவிடாதீர்கள். 

இணைப்புக்குப் பிறகு புதிய வங்கியின் செயல்பாடுகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தும், அந்த வங்கியின் உட்கட்டமைப்புகள் வலுவாக உள்ளனவா என்பதைப் பொறுத்தும் முடிவெடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க