வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/10/2018)

கடைசி தொடர்பு:14:20 (26/10/2018)

``மீதம் இருப்பது 6 புலி இனங்கள்தானா?” - அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

வாழிடச் சிக்கல்கள், வேட்டை. புலிகள் மற்றும் அவற்றின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இரண்டு முக்கியப் பிரச்னைகள் இவை. காப்பிடங்களிலும் காட்டிலும் அவற்றைக் காப்பாற்றுவது எப்படி?

அதுகுறித்து சர்வதேச அளவில் ஆய்வுகளும் ஆலோசனைக் கூட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக இப்போது எத்தனை வகைப் புலி இனங்கள் வாழ்கின்றன என்ற கேள்வி எழுந்தது.

இரண்டு... நான்கு... ஐந்து...

புலிகள்

ஒவ்வொருவரும் ஒவ்வோர் அடிப்படைகளை வைத்துத் தங்கள் முடிவுகளைச் சமர்ப்பித்தார்கள். எத்தனை வகைப் புலிகள் தற்போது வாழ்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் அழியும் நிலையிலிருந்து புலிகளைக் காப்பாற்றுவதற்கு உதவும். அதற்காக பெய்ஜிங் பெகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பல கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். சுமார் 30 லட்சம் வருடங்கள் வரலாறுடைய புலிகள் நம் காலத்தில் அழிந்துவிடக் கூடாது. 

ஒவ்வொரு வகைப் புலிக்கும் தனித்தனி பரிணாம வளர்ச்சி வரலாறு உள்ளது. ஏற்கெனவே கேஸ்பியன் புலி, ஜாவன் புலி, பாலி புலி போன்ற துணை இனங்கள் அழிந்துவிட்டன. அதுபோல் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் புலி வகைகளும் அழிந்துவிடக் கூடாதென்றால் அவை எத்தனை வகை என்பது தெரியவேண்டும். அதற்காக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் மொத்தம் 6 வகைப் புலிகள் மட்டுமே தற்போது வாழ்ந்துவருவதாகத் தெரியவந்துள்ளது. அவை, வங்காளப் புலி, அமூர் புலி, தென் சீனப் புலி, சுமத்ரன் புலி, இந்தோ-சீனப் புலி, மலாயன் புலி. இந்த 6 புலி வகைகள் மட்டுமே இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றன.