வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (27/10/2018)

கடைசி தொடர்பு:13:16 (27/10/2018)

சட்டுப்புட்டுன்னு ஷாப்பிங் முடிக்க 10 யோசனைகள்!

எந்தப் பொருளை வாங்குவதானாலும் என்ன விலைக்கு வாங்குவது, என்ன அளவு என்பது குறித்து தீர்மானத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் விற்பனைத்தளத்தில் தேவையில்லாமல் தேடி அலையாமல், நமக்கேற்ற விலைக்குரிய பொருள்களை மட்டும் பார்த்து எடுப்பது எளிது.

சட்டுப்புட்டுன்னு ஷாப்பிங் முடிக்க 10 யோசனைகள்!

ண்டிகைக்காலம்  வந்துவிட்டது. ஷாப்பிங் மால்கள் நிரம்பி வழிகின்றன. பல அடுக்கு மால்களில் நுழைந்து ஷாப்பிங் முடித்து வெளியேறுவது என்பது, கடினமான வேலையாக உள்ளது. எனவே, இத்தகைய மால்களில் ஷாப்பிங் செய்யும்போது அதிக அலைச்சல் இல்லாமல், நேர விரயம் இல்லாமல் ஷாப்பிங் செய்ய சில எளிய யோசனைகள்.

நான்கைந்து கடைகள் ஏறி இறங்கும் நினைப்பே வேண்டாம்!

சிலருக்கு ஒரு சேலை எடுப்பதாக இருந்தாலும் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி இருபதுக்கும் குறைவான சேலைகளைக் கழித்துவிட்டு 21-வது சேலையை எடுத்துவந்தால்தான் திருப்தியே. அதேபோல, சேலை ஒரு கடையிலும், சுடிதார் ஒரு கடையிலும், பேன்ட், ஷர்ட் இன்னொரு கடையிலுமாக எடுத்தால்தான் நல்ல செலக்‌ஷன் என்ற நிம்மதியைப் பெறுவர். இந்த எண்ணமெல்லாம் வெறும் உளவியல் சிக்கல்தான். விலையிலும் தரத்திலும் கடைக்குக் கடை பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. நமக்கேற்ற விலையில் ஏதேனும் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து, அதிலேயே அனைத்துப் பொருள்களையும் வாங்கி முடிப்பது அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

வாங்கவேண்டிய லிஸ்டோடு நுழையுங்கள்

மாலுக்குள் நுழையும்போதே என்னென்ன பொருள்கள் வாங்கவேண்டும் என்ற லிஸ்ட்டை எழுதிவைத்துக்கொண்டு நுழையுங்கள். அப்போதுதான் தேவையான பொருள்களை மட்டும் வாங்கலாம். வீண் செலவைத் தவிர்க்கலாம். சில நேரம், தேவையற்ற பொருள்களால் பட்ஜெட்டில் ஒதுக்கிய பணத்தைச் செலவழித்துவிட்டு, தேவைப்படும் பொருளை வாங்க முடியாத நிலை ஏற்படலாம். எனவே, லிஸ்ட் மிகமிக அவசியம்.

ஷாப்பிங்

என்ன விலை, என்ன அளவு என்ற தீர்மானத்தோடு செல்லுங்கள்

எந்தப் பொருளை வாங்குவதானாலும் என்ன விலைக்கு வாங்குவது, என்ன அளவு என்பது குறித்து தீர்மானத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் விற்பனைத்தளத்தில் தேவையில்லாமல் தேடி அலையாமல், நமக்கேற்ற விலைக்குரிய பொருள்களை மட்டும் பார்த்து எடுப்பது எளிது.

மேட்சிங் தேர்வில் கவனம்

சட்டை - பேன்ட், சுடிதார் - லெக்கின்ஸ் போன்ற மேட்சிங் உடைகள் வாங்கும்போது, எது முதலில் வாங்கவேண்டுமோ அதை முதலில் தேர்வுசெய்யுங்கள். பிறகு, நீண்ட நேரம் தேடித் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கான மேட்சிங் கிடைக்காமல் நேரம்தான் வீணாகும். அதேபோல எந்த நிறத்துக்கு அதிக மேட்சிங் ஆப்ஷன் உண்டோ, அதுபோன்ற நிறத்தைத் தேர்வுசெய்வது மேட்சிங் தேர்வை சுலபமாக்கும்.

காலையிலேயே ஷாப்பிங்

பண்டிகைக்கால ஷாப்பிங்குக்காக விடுமுறை நாளில் செல்வதென்றால், மாலை வேளையில் கூட்டம் குவிந்துவிடும். நம்மால் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடியாது. எனவே, காலையில் 10 மணிபோல கடைக்குள் நுழைந்துவிட்டால், ஓரளவு கூட்டம் இல்லாமல் பொறுமையாக ஷாப்பிங் செய்யலாம். தேவைப்பட்டால் மதிய உணவையும் அங்கு உள்ள கேன்டீனிலோ, ஹோட்டலிலோ முடித்துக்கொண்டால் சமையல் வேலையிலிருந்தும் விடுதலை.

மேல் தளத்திலிருந்து கீழ் தளத்துக்கு வாருங்கள்

பல தளங்கள் இருக்கும் ஷாப்பிங் மால்களில் ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, நாம் வாங்கவேண்டிய பொருள்களை தளம்வாரியாகப் பிரித்து, முதலிலேயே மேல் தளத்துக்குச் சென்று, ஒவ்வொரு தளமாகக் கீழிறங்கி வருவது நல்லது. அப்போதுதான் ஷாப்பிங் செய்வது மலைப்பான விஷயமாக இராது.

ஷாப்பிங்

அடுக்கிய பொருள்களை கலைத்துவிட வேண்டாம்

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகள், சேலை துணிமணிகளை நாமாக எடுத்துப் பார்த்துத் தேர்வுசெய்யும்போது, அவசரப்பட்டுச் சரித்துவிடுவோம். அதேபோல, எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைத்தால், அடுத்தவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும். அடுக்கிவைக்க பணியாளர்கள் இருப்பார்கள் என்றாலும், ஷாப்பிங் செய்வதிலும் இதுபோன்ற நாகரிகத்தைப் பின்பற்றுவது அழகு. அங்கு உள்ள பணியாளர்களிடம் நம் மீது நன்மதிப்பை உருவாக்கும். 

கும்பலாக ஷாப்பிங் செய்வதைத் தவிர்க்கலாம்

நாம் குடும்பத்தோடு ஷாப்பிங் சென்றிருந்தாலும்கூட, ஒவ்வொரு பொருளுக்கும் மொத்தக் குடும்பமும் விற்பனைத்தளத்தினுள் நுழைவது தேவையில்லாதது. அப்படிச் செல்வதால் தேவையில்லாமல் இட நெருக்கடியை ஏற்படுத்துகிறோம். மேலும், ஒரு பொருளைத் தேர்வுசெய்வதற்கு நான்கைந்து யோசனைகள், விருப்பங்கள் என வருவதால் முடிவெடுப்பதும் தாமதமாகும். ஷாப்பிங் நேரம் இழுத்துக்கொண்டே செல்லும். எனவே தேவைக்குரிய ஓரிருவர் மட்டும் தளத்தினுள் செல்ல, மற்றவர்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் அலுப்பில்லாமல் ஷாப்பிங் செய்ததுபோலிருக்கும்.

பில்களை தனியே எடுத்துச் சேகரிக்கவும்.

சில ஷாப்பிங் மால்களில் பில் தொகைக்கு ஏற்ப பரிசுகள், கட்டைப்பைகள் போன்றவை தருவார்கள். அப்படியிருக்கும்போது ஒவ்வொரு தளத்தில் பில் போடும்போதும் அந்தந்த பில்களை தனியே ஒரு பர்ஸில்/பையில் எடுத்துவைத்து வாருங்கள். அப்போதுதான் தாமதமின்றி மொத்தமாகக் கொடுத்துப் பரிசுப்பொருளை வாங்க இயலும். தொலையாமலும் பாதுகாப்பாக இருக்கும். மொத்தமாக செலவுக் கணக்குப் பார்ப்பதும் எளிது.

ஷாப்பிங் நேரத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வேண்டாம்

பலரும் பொதுவாகச் செய்யும் தவறு, ஷாப்பிங் மாலில் நுழைந்த பிறகும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அப்டேட் செய்துகொண்டிருப்பது. அப்படிச் செய்வதால் நமது ஷாப்பிங் கவனம் சிதறுவதோடு ஷாப்பிங் செய்த பொருளைத் தொலைப்பதற்கும், திருடுபோவதற்கும் வாய்ப்புள்ளது. நேரமும் விரயமாகும். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்