வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (27/10/2018)

கடைசி தொடர்பு:14:26 (27/10/2018)

நியூட்டன் விதிகளையே கேள்விக்குள்ளாக்கிய பெண்... யார் இந்த வேரா ரூபின்?

இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் விரிவாக்கம் குறித்து அதுவரைக்கும் இருந்த கருத்துகள் அனைத்தையும் ஒரே கோடைக்காலத்தில் மாற்றியமைத்தார் ஒரு பெண். அவர் வேரா ரூபின்

நியூட்டன் விதிகளையே கேள்விக்குள்ளாக்கிய பெண்... யார் இந்த வேரா ரூபின்?

மார்ச் மாதம் 27-ம் தேதி 1970-ம் ஆண்டு கோடை இரவில் வேரா ரூபின் பூமிக்கு மிக அருகில் உள்ள அண்டமான ஆன்ட்ரோமேடாவை (Andromeda Galaxy) பார்த்துக்கொண்டிருந்தார். வேரா ரூபின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வானியலாளர், சிறு வயதுமுதலே நட்சத்திரங்களின் மீதும் முடிவற்ற பிரபஞ்சத்தின் மீதும் காதல் கொண்டவராக இருந்தார். இன்றைய நவீன விஞ்ஞானம் அனைத்துத் துறைகளிலும் தேடிக்கொண்டிருக்கும் `டார்க் மேட்டர்’ பற்றிய கருத்துகளை வரையறுத்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இவர்.

ஆன்ட்ரோமேடா அண்டத்தில் பல மில்லியன் நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனவா இல்லையா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைகொண்டார் வேரா ரூபின். ஆன்ட்ரோமேடா பூமிக்கு அருகில் இருந்தாலும், அதன் தொலைவு என்னவோ 200 மில்லியன் ஒளி ஆண்டுகள். ஒளியானது ஒரு விநாடியில் 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஓர் ஒளி ஆண்டு என்பது வெற்றிடத்தில் (space) ஒளியை அதன் வேகத்தில் ஓர் ஆண்டுக்குச் செலுத்தும் போது ஒளி கடக்கும் தொலைவு ஆகும். அதுபோல் 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒளியைச் செலுத்தும் போது அது பயணிக்கும் தொலைவைக் கடந்தால் நாம் அருகில் உள்ள அண்டத்தை அடையலாம்.

வேரா ரூபன் ஆன்ட்ரோமேடாவைப் பார்க்க வானியலாளர் கேன்ட் ஃபோர்டு கண்டுபிடித்த, நிரல் வரைவியைப் (spectrograph) பயன்படுத்தத் திட்டமிட்டார். ஃபோர்ட் கண்டுபிடித்த நிரல் வரைவி அதிவேகத்தில் இயங்கக் கூடியது, பெரிய அலைவரிசைகளையும் துல்லியமாக வரையும் திறன் கொண்டது. அதைப் பயன்படுத்தி தனது பொழுதுகள் முழுவதும் பிரபஞ்சம் பற்றியான சோதனையில் செலவழித்துக் கொண்டிருந்தார்.

டார்க் - வேரா ரூபின்

அதிகத் திறன்வாய்ந்த டெலிஸ்கோப்பை ஃபோர்டு கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரோ கிராஃப் உடன் இணைத்ததன் மூலம், அது வெகுதொலைவில் உள்ள நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் பல்வேறு வகையான, சிறு சிறு அதிர்வுகளையும் வரைபடமாக வரைந்தது. வேரா ரூபின் ஸ்பெக்ட்ரம் வரைபடங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அவற்றுக்காக அதி நுண்திறன் கொண்ட நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, ஃபோர்டு ஸ்பெக்ட்ரம் வரைபடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த, சிறியஅளவிலான அதிர்வுகளை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தினார். அந்த அதிர்வுகளை எல்லாம் டாப்ளர் மாற்றம் என நினைத்த போது அவரின் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன. வெகு தொலைவில் உள்ள கோள்களின் நகரும் வேகத்தைக் கண்டுகொள்ளும் முயற்சியில் இறங்கலானார். அதிலும் அவருக்குத் தோல்விகள்தாம் மிஞ்சியன.

டாப்ளர் மாற்றம் என்பது வானியலாளர்கள் கோள்களின் நகர்வைக் கணக்கிடப் பயன்படுத்துவது. அதாவது உயர் அதிர்வெண்ணின் போது ஒரு கோளானது பூமியை நோக்கி நகரும்; குறை அதிர்வெண் ஏற்பட்டால் கோளானது பூமியைவிட்டு விலகிச் செல்லும் என்பதே ஆகும். இதைப் பயன்படுத்தி கோள்களின் வேகத்தைக் கணக்கிட முயன்றார். அந்த ஆய்வுக்காக ஆன்ட்ரோமேடாவின் வெளிப்புறத்தில் உள்ள கோளை எடுத்துக்கொண்டு, அதன் நகர்வை உன்னிப்பாகக்கவனிக்க ஆரம்பித்தார், அந்தக் கோள் வேகமாக அண்டத்தின் மையத்தில் உள்ள கோள்களை நோக்கி நகர்ந்தது, இந்தக் கோள்களின் நகர்வு அவருக்குச் சந்தேகத்தை தந்தது. அதற்கான தீர்வைக் காண 200 கோள்களின் நகர்வுகளின் மீது ஆராய்ச்சி மேற்கொண்டார். எல்லாவற்றின் நகர்வுகளும் ஒரே மாதிரியானதாக அமைந்ததையடுத்து அவருக்கு முன்பாக இரண்டு விதமான முடிவுகளே மிச்சமிருந்தன.

ஒன்று நியூட்டன் இயங்கியலுக்கான விதி தவறு என்பது; அல்லது இந்த விஷயத்தை யாரும் கண்டுபிடித்ததில்லை என்பது. இதில், வேரா ரூபின் நியூட்டனின் கண்டுபிடிப்பு தவறு என்பதை உலகம் ஏற்காது; எனவே இரண்டாவதை அணுகலாம் என முடிவுக்கு வந்து அதற்கு `டார்க் மேட்டர்' எனப் பெயரிட்டார். நியூட்டனின் சமன்பாடுகளைச் சமன்செய்ய எவ்வளவு `டார்க் மேட்டர்’ தேவை எனக் கணக்கிட ஆராய முயல்கையில் உலகம் இயங்க எவ்வளவு `டார்க் மேட்டர்‘ தேவை எனக் கணக்கிடலானார், 90 சதவிகிதம் பிரபஞ்சம் டார்க் மேட்டர்களால் நிறைந்துள்ளன. இதுவரையான மனிதக் கண்டுபிடிப்புகளால் இந்த `டார்க் மேட்டர்’களை பார்க்க முடியவில்லை. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, டார்க் மேட்டர்களை புகைப்படமெடுக்கும் முயற்சியில் இறங்கியது. ஜெர்மன் நாட்டுடைய ROSAT எனும் துணைக்கோள் மூலமாக அதிலுள்ள X-ray நுண்ணோக்கியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தனர்.

பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இந்த டார்க் மேட்டர்கள்தாம் பிரபஞ்ச நட்சத்திரங்களின் சுழற்சியையும், பிரபஞ்சங்கள் விரிவடைவதையும் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இந்தக் கருப்பொருள் எந்த ஒளியையும் மின்காந்த அலைகளையும் வெளியிடுவதில்லை என்பதால் இவற்றைக் காணமுடிவதில்லை என்பதுதான் பல அறிவியலாளர்களின் கருத்துகள். அந்தக் கோடைக் காலத்தில் அதுவரை இருந்து வந்த பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் வடிவம் பற்றியான அனைத்துவித கருத்துகளையும், கணக்கீடுகளையும் மாற்றியமைத்தார் வேரா ரூபின்.   


டிரெண்டிங் @ விகடன்