வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (28/10/2018)

கடைசி தொடர்பு:13:09 (28/10/2018)

செட்டிநாடு சிக்கன் பிரியாணி, வந்தவாசி கோழி வறுத்த மசாலா.. வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பி!

'பிரியாணி' எல்லோருடைய ஆல் டைம் ஃபேவரைட் டிஷ். அனைவருக்கும் பிடித்தமான பிரியாணியையும், அதற்கேற்ற துணை உணவுகளையும் எளிமையாக வீட்டிலேயே சமைக்க ரெசிப்பிகளை வழங்குகிறார், மதுரை BBQ Bistro ரெஸ்டாரென்ட்டின் பொது மேலாளரும் எக்ஸிக்யூட்டிவ் செஃப்புமான அஸ்வின் நாச்சியப்பன்.   

செட்டிநாடு சிக்கன் பிரியாணி 

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ

சீரக சம்பா அரிசி –  ஒரு கிலோ

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

ஏலக்காய் – 4

கிராம்பு – 5

முந்திரி – 25 கிராம்

கசகசா – ஒரு டீஸ்பூன்

தேங்காய்ப்பால் – 3 கப்

வெங்காயம், தக்காளி –  தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்)

நெய் – 100 கிராம்

எண்ணெய் – 100 மில்லி

சோம்பு – அரை டீஸ்பூன்

புதினா - ஒரு கட்டு (ஆயவும்)

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு   

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு 

செட்டிநாடு சிக்கன் பிரியாணி



செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடிப் போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்துச் சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.  

 

வந்தவாசி கோழி வறுத்த மசாலா 

தேவையானவை: 

சிக்கன் – அரை கிலோ

வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

குடமிளகாய் (பச்சை) – ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்)

தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கவும்)

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்

சோள மாவு (கார்ன் ஃப்ளார்), மைதா மாவு – தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)

சோம்புத்தூள், சீரகத்தூள், பொடித்த மிளகு – தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பூண்டு – 6 பல் (தட்டவும்)

எண்ணெய், உப்பு – தேவையான அளவு 

அலங்கரிக்க: 

வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு 

வந்தவாசி வறுத்த கோழி மசாலா



செய்முறை:

சிக்கனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பாதியளவு மிளகாய்த்தூள், சோள மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சிக்கன் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தக்காளி, காய்ந்த மிளகாய், குடமிளகாய், உப்பு, தனியாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வறுத்த சிக்கன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சீரகத்தூள், பொடித்த மிளகு, சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்