வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (28/10/2018)

கடைசி தொடர்பு:18:02 (28/10/2018)

சுவை, ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்

குழந்தைகளுக்கு விதவிதமான நொறுக்குத்தீனி வகைகளைச் செய்துகொடுத்து மகிழ்விக்க இதுதானே தக்க தருணம்? வடை, பஜ்ஜி, போண்டாக்களைத் தாண்டி வேறென்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிப்பிகள்.

மசாலா பணியாரம் 

தேவையானவை:

இட்லி மாவு அல்லது தோசை மாவு - 3 கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் - 2 (துருவவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு  

செய்முறை

 ரெசிப்பி

வாணலியில் சிறிதளவு எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், பீன்ஸ், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். இறுதியாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி, கிளறி இறக்கவும். ஆறியதும் இதை இட்லி/தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவைக் குழிகளில் நிரப்பி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

பனீர் 65 

தேவையானவை:

பனீர் - 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்)
மைதா மாவு - கால் கப்
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - 1/8 கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா 1/8 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

ஸ்நாக்ஸ்

மைதா மாவுடன் கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, தயிர், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக, கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இந்தக் கலவை பனீர் துண்டுகளில் தடவும் அளவுக்குக் கெட்டியாக இருக்க வேண்டும். 

மிகவும் கெட்டியாகவோ, மிகவும் தளர்வாகவோ இருக்கக் கூடாது. அதனுடன் பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைப்  போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.  

குறிப்பு: ஊறவைத்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தேவையானபோது பொரிக்கலாம். தயிருக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

சீஸ் ரைஸ் பால்ஸ் 

தேவையானவை

சாதம் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
குடமிளகாய் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)
கேரட் - ஒன்று (துருவவும்)
சீஸ் துருவல் - கால் கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - 1/8 டீஸ்பூன்
மைதா மாவு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ரெசிப்பி

சாதத்தை `ஃபோர்க் ஸ்பூனால்’ நன்கு மசிக்கவும். அதனுடன் வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல், சீஸ் துருவல், மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

குறிப்பு: மீதமான சாதத்தையும் பயன்படுத்தலாம். சீஸ் துருவலுக்குப் பதிலாக சீஸ் ஃக்யூப்புகளை நடுவே வைத்தும் செய்யலாம். பொரிக்கும்போது ரைஸ் பால்ஸ் பிளந்தால், மாவுடன் மேலும் சிறிதளவு மைதா அல்லது சோள மாவு சேர்த்துச் செய்யலாம். எல்லாப் பொருள்களையும் கலந்தவுடன் உடனடியாகப் பொரித்தெடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் கலவை நீர்த்துவிடும்.


டிரெண்டிங் @ விகடன்