Published:Updated:

`கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னுலாம் கேட்பாங்க!' - பேங்க் மேனேஜர் ஆல்பர்ட்ராஜ்

`கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னுலாம் கேட்பாங்க!' - பேங்க் மேனேஜர் ஆல்பர்ட்ராஜ்
`கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னுலாம் கேட்பாங்க!' - பேங்க் மேனேஜர் ஆல்பர்ட்ராஜ்

`ஓங்காரியே காளியம்மா
உன் திருவடியை வணங்கி வந்தேன்
அம்மா முத்துமாரி எங்க அழகு முத்துமாரி'

- சிவகங்கையிலுள்ள ஒரு கோயில் திருவிழாவில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, பக்தர்கள் கூட்டம் மெய்சிலிர்ப்புடன் நின்றுகொண்டிருந்தது. அம்மன் வேடமிட்ட ஒருவர் திடீரெனக் கூட்டத்திலிருந்து எழுந்து சாமியை நோக்கி முன்னேறிச் செல்ல, `உலுலுலுலு' என்ற குலவைச் சத்தத்துடன் பெண்கள் பலர் கையெடுத்துக் கும்பிட்டும், காலில் விழுந்து சேவித்துமாக அந்த `அரிதார அம்மனை' தங்கள் கண்களிலும் மனதிலுமாக வணங்கினார்கள். 

அம்மனின் உக்கிரமும் சாந்தமும் ஒருசேரப் படிந்த முகம், காந்தக் கண்கள், பூ, பொட்டு அலங்காரம், தான் அம்மனாகவே ஆகிவிட்ட பாவம் என்று `அம்மனாட்டம்' ஆடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை நெருங்கினோம். அவர் பெண் அல்ல, ஆண் என்பது முதல் சர்ப்ரைஸ். ஆல்பர்ட் என்ற அவரது பெயர், இன்னும் சுவாரஸ்யம் சேர்த்தது. நாட்டுப்புறக் கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் பெண் வேடங்களில் கூத்துக் கட்டும் அவர், ஒரு வங்கி மேனேஜர் என்பது வியப்பாக இருந்தது. `ஆல்பர்ட் அம்மனி'டம் பேசுவதற்கான விஷயங்கள் நிறைய இருந்தன.  

``எனக்கு இந்த மைக்கேல் பட்டணம்தான் சொந்த ஊரு. சிவகங்கை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜரா வேலைபாக்குறேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு நாட்டுப்புறக்கலை மேல தீராத காதல். அப்போ நான் வங்கியில பியூனாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். தினமும் காலையில பேங்க்ல வேலைக்குப் போவேன், சாயங்காலம் கூத்துக் கட்டப் போவேன்; அம்மன் வேஷம் போட்டு ஆடுவேன். ஆரம்பத்துல பெண் வேஷம் போட கூச்சமா இருந்தாலும், என் முகத்துக்கு அந்த வேஷம் அம்சமா பொருந்திப்போகுதுனு எல்லோரும் சொல்லச் சொல்ல, என் மனசுக்கும் அது நிறைவா பட்டுச்சு. தொடர்ந்து, பெண் வேஷங்களில் மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஒரு பெண் பாடகி பின்குரல் கொடுப்பாங்க. நலிந்துபோயிருந்த சக நாட்டுப்புறக்கலை கலைஞர்களைப் பார்த்தப்போ, அவங்களுக்கு நாம ஏதாச்சும் செய்யணும்னு, இதில் என் ஆர்வம் பொறுப்பா மாறிச்சு'' என்பவர்  கோயம்புத்தூருக்குச் சில வருடங்கள் பணி மாறுதலில் சென்றிருக்கிறார்.

``கோயம்புத்தூர்ல நாட்டுப்புறக்கலையின் மீது ஆர்வம் கொண்டவங்க நிறைய பேர் இருந்தாங்க. அவங்க உதவியோட, கோவை,  திருப்பூர், பழநி, தாராபுரம் போன்ற ஊர்களிலுள்ள நலிவடைந்த நாட்டுப்புறக்கலை கலைஞர்கள் சுமார் 25 பேரை ஒருங்கிணைச்சேன். `ஏலேலங்கடியோ' என்ற நாட்டுப்புறக்கலை குரூப்பை ஆரம்பிச்சேன். நாங்க நிறைய நிகழ்ச்சிகள் செய்தோம். என் சொந்தக்காரங்க, `கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே?'னு கேட்டாங்க. நண்பர்கள், `பேங்க் மேனேஜரா இருந்துட்டு பெண் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கியே?'னு கேட்பாங்க. இப்படி என்னைச் சுற்றியிருந்தவங்க எல்லோரும் என்னை விநோதமா, கேலியா பேசினாலும், `நீங்க சூப்பர்'னு சொல்லி எனக்கு பலமா இருக்கிறவங்க என் மனைவி. வாழ்க்கையை நான் இப்படி என் போக்குல வாழ அனுமதிக்க, வரமா வந்து அமைஞ்சவங்க. கலைகளை நேசிக்கத் தெரிஞ்சவங்க. என் மாமா பொண்ணு. பள்ளி விழாக்கள், சர்ச் கலை விழாக்களில் எல்லாம் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்களை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் என் மனசுல விழுந்ததே, அவங்களோட டான்ஸைப் பார்த்துதான்'' என்று அவர் தன் மனைவி அல்ஃபோன்ஸ் மேரியைப் பார்க்க, அவர் நாணத்தில் தலை கவிழ, அது ஒரு மினி காதல் எபிஸோடு.  

``கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாட்டுப்புறக் கலையோட பயணிச்சிட்டு இருக்கேன். இதுக்கு இடையில், வங்கியில பியூனாக வேலைக்குச் சேர்ந்த நான், கிளார்க், கேஷியர், அசிஸ்டன்ட் மேனேஜர், இப்போ மேனேஜர்னு உயர்ந்திருக்கேன். வங்கியில் என்னோட இந்தக் கலை வாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. சிவகங்கையில் இப்போ வேலைபார்த்தாலும், கோயம்புத்தூரில் நான் ஆரம்பிச்ச குரூப்பில் இருக்கும் நாட்டுப்புறக்கலை கலைஞர்களை வெச்சுதான் கலை நிகழ்ச்சிகள் நடத்திட்டு வர்றேன். தவில், நாதஸ்வரம், தபேலா, பாடகர், பாடகினு ஒரு இசை ட்ரூப்பும், காவடியாட்டம், மயிலாட்டம், கருப்பசாமி ஆட்டம், அம்மனாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சாட்டைக்குச்சி ஆட்டம் ஆடுற நடனக் கலைஞர்களும் எங்க குரூப்பில் இருக்காங்க. என்னோட நோக்கம் பணம் இல்லை, அந்தக் கலைஞர்களோட வாழ்வாதாரப் பாதுகாப்பு'' என்றவர், 

``அம்மனாட்டம்ல நான் அம்மன் வேஷம் போட்டு நடந்து வரும்போது நிறைய பெண்கள் கால்ல விழுந்து வணங்குவாங்க. எனக்கு அப்படியே மெய்சிலிர்த்துப் போயிடும். அந்தப் பெண்களுக்கு எல்லாம் இது வெறும் வேஷம்தான்னு தெரியாம இல்லை. இருந்தும் அவங்க மனசுக்கு `இது அம்மன்'னு ஒரு நெகிழ்வைத் தரும் இந்தக் கலையோட வெற்றியை நினைக்கும்போது, ஆனந்தத்துல கண்ணீர் வரும். என் மகனும் இப்போ எங்க `ஏலேலங்கடியோ' குரூப்பில் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் பாட ஆரம்பிச்சிருக்கான். எனக்கு அப்புறம், என் மகன் அந்தக் கலைஞர்களைப் பார்த்துக்குவான் என்ற நம்பிக்கை, நிம்மதியைக் கொடுக்குது. 

நிறைய பார்த்திருக்கேன். 20, 30 வயசுல சினிமா, பாட்டு, ஆட்டம், நாடகம், கதை, கவிதைனு ஆர்வமா இருக்கிறவங்க எல்லாம், 40, 50 வயசுல வாழ்க்கை துரத்துல வேகத்துல, அவங்க வாழ்க்கையைத் துரத்த வேண்டிய தேவையில, நேசிச்ச கலைகளில் இருந்தெல்லாம் கண்ணி விட்டுப் போயி இயந்திரத்தனமான நாள்களிடம் சரணடைஞ்சு போயிருப்பாங்க. நான் இப்பவும் சில திருவிழாக்கள்ல ராத்திரி முழுக்க நாடகம் போட்டுட்டு விடியற்காலையில் வீட்டுக்குக்குப் போய், அவசர அவசரமா கிளம்பி பேங்க்குக்கு ஓடிட்டு இருக்கேன். இந்த 58 வயசிலும் ஒரு கலைஞனா வாழ்றதில் பெருமகிழ்ச்சி!"

ஆல்பர்ட் முகத்தில் அரும்பிய புன்னகைக்கு நிறைவு என்று பெயர்!