Published:Updated:

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பூரண ஆசி இருந்ததால் எதிர்ப்புகளை துச்சமாக மதித்து கோடிகளை கொட்டு பிரமாண்ட தொழிற்சாலையை வேகமாக உருவாக்கியது.
 
ஒரு ஆலையை அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் எதையும் நிறைவேற்றாமல் துணிச்சலாக களம் இறங்கினார்கள். ’தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து 25 கி.மீ தூரத்துக்குள் மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகளை நிறுவக்கூடாது’ என்கிற விதியை ஸ்டெர்லைட் நிறுவனம் அப்பட்டமாக மீறியது. சுற்றுச்சூழல் வாரியத்தின் அனுமதியை பெறாமலே ஆலையை அமைத்தார்கள். பின்னர் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும், தமிழக மற்றும் தேசிய சுற்றுச் சூழல் வாரிய அதிகாரிகள் அவசரமாக ஆலை பகுதியை ஆய்வு செய்தது போல ஆவணங்களை கொடுத்தார்கள். அந்த அளவுக்கு விதிமுறைகளை வளைக்கும் துணிச்சலும் திறமையும் இந்த நிறுவனத்துக்கு இருந்தது.

அரசியல் கட்சிகளின் அந்தர் பல்டி

ஒட்டு மொத்த மக்களின் பலமான எதிர்ப்பை பார்த்ததும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு எதிரில் இருப்பது ஓட்டுக்களாக தெரிந்து இருக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சியினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் போட்டி போட்டுக் கொண்டு வேகம் காட்டி மக்களிடம் நல்ல மதிப்பை பெற முயற்சி செய்தார்கள். ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சி ஆலைக்கு ஆதரவாக நின்றது. இதை தவிர்த்து, அந்த சமயத்தில் அரசியல் கட்சிகளால் உருவாக்கபப்ட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனதா தளம், பா.ம.க., புதிய தமிழகம் (அப்போது தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் இடம்பெற்று இருந்தார்கள்.

ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருமனதுடன் நின்ற அரசியல் கட்சிகளின் மாவட்ட

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

நிர்வாகிகள், வேறு வழி இல்லாமலேயே அரைகுறை மனதுடன் இந்த போராட்டக் குழுவில் இருந்தனர். ’உழுகிற நேரத்தில் ஊர்வழி போனவன் அறுக்கிற நேரத்தில் அரிவாளோடு வந்தானாம்’ எனபது போல வந்து சேர்ந்த இந்த அரசியல்வாதிகளின் எதிர்ப்பை வேதாந்தா நிறுவங்களின் தலைவரான அனில் அகர்வால் எளிதாக சமாளித்து விட்டார்.

அரசியல்வாதிகளை பொறுத்தமட்டிலும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எந்த அளவுக்கு அக்கறையும் வேகம் காட்டினார்களோ அதே வேகத்தில் பின்வாங்கி சென்று விட்டனர். ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கைவிட்டு அரசியல் மேடைகளில் அடுத்தவரை திட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த சம்யத்தில் ம.தி.மு.க மட்டுமே மக்களுடன் நின்றது. 1995-ல் சுற்றுச்சூழல் வல்லுனரான ரஷ்மி மயூரியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் போராட்டத்தையும் நடத்திய தொண்டு நிறுவங்கள் கூட, தங்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு உணர்வை ஏனோ அடக்கி வாசிக்க ஆரம்பித்தது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்தது.

கடந்து வந்த போராட்ட பாதை...

##~~##

அரசியல் கட்சிகள் அடங்கிப் போனாலும் மக்கள் போராட்டம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. சில சமயங்களில் மக்களின் கோபம் வெடித்து கிளம்பியது. 1996-ல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆலையின் முன்பாகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்ந்தார்கள், பொது மக்கள். இந்த போராட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துறைமுகத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் வளர்ச்சி அடைந்து கடையடைப்பு, சாலை மறியல் என சூட்டை கிளப்பியது.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர்கள், மானவர்கள் என பத்தாயிரத்துக்கு அதிகமானோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் 5கி.மீ தூரத்துக்கு நின்றனர். 1996-ல் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எம்.வி.ரீஸா என்கிற கப்பலில் தாதுப்பொருள் வந்தது. தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி உள்ளூர் மக்களை கொதிப்படைய வைத்தது.

கப்பலில் இருந்து தாதுப்பொருட்களை இறக்க அனுமதிக்க கூடாது என போராடும் மக்கள் வலியுறுத்தினர். ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரம் அடைய தொடங்கின. மீனவ மக்கள் கடலுக்குள் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். 74 விசைப்படகுகள், நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகை இட்டனர். 15 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகை போராட்டத்தின் போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எந்த கப்பலும் வெளியே செல்ல முடியவில்லை.  அதேபோல கப்பல்கள் எதுவும் உள்லே செல்லவும் அனுமதிக்கவில்லை.

இதனால் எம்.வி.ரிஸா கப்பலும் துறைமுகத்துக்குள் நுழைய முடியாமல் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. போராட்டம் வலுப்பதை அறிந்ததும் திகைத்துப் போன தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் அந்த கப்பலை கொச்சின் துறைமுகத்துக்கு திருப்பி விட்டனர். ஆனால், ஆறு மாத காலத்துக்கு பின்னர் சாதிச் சண்டையால் மக்களிடம் பிரிவினை ஏற்பட்டு இருந்த நிலையில், கொச்சின் துறைமுகத்தில் இருந்து அந்த சரக்குகள் லாரிகள் மூலமாக ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக இறக்கப்பட்டது என்பது தான் சோகம்.

மற்றொரு கப்பலில் வந்த தாதுப்பொருட்கள்

சில மாதங்களுக்கு பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கான பொருட்களுடன் எம்.எஸ்.பரஸ்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் உள்லேயே கொண்டு வரப்பட்டு சரக்குகளை இறக்கும் பணியை தீவிரப்படுத்தியது. உள்ளூர் தலைவர்கள் பலரும் ஆலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்த அளவுக்கு தைரியமாக நிர்வாகத்தினர் செயல்படுவதாக பொதுமக்கள் வேதனைப்பட்டார்கள்.

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2

ஆனாலும், தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து எம்.எஸ்.பரஸ்கவி கப்பலில் இருந்து சரக்குகளை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராடினார்கள். இதனால் துணிச்சலும் உற்சாகமும் அடைந்த மீனவ மக்கள் தங்கள் பங்கிற்கு 172 விசைப்படகுகள் 50 நாட்டுப் படகுகளில் துறைமுகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சென்று அந்த கப்பலை முற்றுகை இட்டனர். இதனால் பரஸ்கவி கப்பல் அவரசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேய அரசை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய தியாகியான வ.உ.சி பெயரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி துறைமுகத்தில் மற்றொரு சுதந்திர போராட்ட எழுச்சி போலவே இந்த போராட்டம் இருந்ததாக அந்த சமயத்தில் மீனவ மக்கள் பெருமை பொங்க தெரிவித்தனர். மக்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நடந்த இத்தகைய போராட்டங்கள் அரசியல் கட்சியினர் அச்சம் அடைய வைத்தது. ஸ்டெர்லைட் நிர்வாகமும் மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு கலங்கியது.

தொடர்ந்து நடந்த போராட்டங்கள் என்ன..? அவற்றை எப்படி எல்லாம் ஒடுக்கவும் நசுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நாளை பார்க்கலாம்...

தொடரின் மற்ற பாகங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...!

படங்கள்: ஏ.சிதம்பரம்