வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (30/10/2018)

கடைசி தொடர்பு:13:31 (30/10/2018)

ஃபியட், ஃபோக்ஸ்வாகன் அலர்ட்... பர்ஃபாமென்ஸ் டியாகோ இதோ! #JTPReview

பர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக்குகளை காட்சிக்கு வைப்பதை, இண்டிகா காலத்திலிருந்தே கடைப்பிடிக்கிறது டாடா. ஆனால், எந்த காரும் புரொடக்‌ஷன் வரை வந்ததில்லை. டாடாவின் ஒரு பர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக், முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. சூப் பாய்ஸாக இருந்த டிகார், டியாகோ இரண்டையும் கொஞ்சம் சூடேற்றியுள்ளது கோவையைச் சேர்ந்த ஜெயம் பர்ஃபாமென்ஸ். ஜெயம்-டாடா என்பதைச் சுருக்கி JTP என்று வந்திருக்கும் டியாகோவின் ப்ளஸ்-மைனஸ் இதோ...

டாடா டியாகோ மற்றும் டிகார் JTP

வெளிப்பக்கம்

டியாகோ சமத்துப்பையன் என்றால், டிகார் துருதுரு பையனாக இருக்கிறது. டிசைனிலும் டியாகோ JTP-யின் துருதுரு தன்மை வெளிப்படுகிறது. காரின் ரைடு உயரத்தை 4 மிமீ குறைத்துள்ளார்கள். பெரிய 15 இன்ச் வீல்களும், 185-செக்‌ஷன் டயர்களும் புதுசு. டயரையும் வீலையும் மாற்றியதே காரை செம ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. முன்பக்க பம்பர் புத்தம் புதிது. தேன்கூடு டிசைனில் புது க்ரில், டர்போ சார்ஜருக்கு வசதியாக பெரிய ஏர் டேம், பர்ஃபாமென்ஸ் கார்களுக்கே உரித்தான பானெட்டில் அந்த ஓட்டை எனப் பார்க்கவே ஸ்போர்ட்டியாக இருக்கிறது டியாகோ JTP. பானெட் மற்றும் ஃபெண்டரில் கொடுத்திருக்கும் அந்த வெட்டு, ஸ்டைலுக்காக இல்லை இன்ஜின் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக என்று கூறியுள்ளார்கள். சிவப்பு/கறுப்பு நிறத்தில் இருக்கும் மிரர்களும், மாற்றியமைக்கப்பட்ட ரியர் பம்பரும், இரட்டைக்குழல் எக்ஸாஸ்ட்டும் வேகமான கார் என்று தனித்துக்காட்டுவதற்காக வைத்துள்ளார்கள்.

டியாகோ JTP

உள்பக்கம்

வெளிப்பக்கம் மட்டுமல்ல உள்பக்கமும் கார் செம ஸ்போர்ட்டி. சீட்டுகளில் சிவப்பு நிற வேலைப்பாடுகள், ஏசி வெண்டுகளில் சிவப்பு நிறம் என முழுக் கறுப்பு கேபினில் கொஞ்சம் டச்சப் செய்துள்ளார்கள். ஸ்டியரிங் மற்றும் கியர் நாபில் வரும் லெதர் விலை உயர்ந்த கார்களுக்கு உண்டான தரத்தில் உள்ளது. டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்டியரிங்கில் கன்ட்ரோல்கள், 8 ஸ்பீக்கர் எனப்  பாதுகாப்பிலும் சிறப்பம்சங்களிலும் மாற்றங்கள் இல்லை. கொஞ்சம் சொகுசான முன்பக்கச் சீட்டுகளும், சீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் சப்போர்ட்டும் கொடுத்திருக்கலாம்.

டியாகோ இன்டீரியர்

டிரைவிங்

டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் இன்ஜினுக்கு பதில் நெக்ஸானில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் இன்ஜின் இந்த JTP மாடல்களில் வருகிறது. அதிகபட்சம் 114bhp பவரையும் 150Nm டாரக்கையும் இந்த இன்ஜின் தருகிறது. சாதாரண டியாகோவைவிட 29bhp பவர் அதிகம். ஒரே இன்ஜின்தான் என்றாலும் இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட்டை மாற்றியிருப்பதால் நெக்ஸானைவிட 5bhp அதிக பவரை தருகிறது. சிட்டி, ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகளைக் கொடுத்துள்ளார்கள். இதில் சிட்டியில் டார்க் 115Nm மட்டுமே. ஸ்போர்ட் மோடில் 150Nm டார்க் வெளிப்படுகிறது. கியர்பாக்ஸில் கியர் ரேஷியோவை மாற்றியிருப்பதால் முன்பைவிட ஆக்ஸிலரேஷன் அட்டகாசம்.

ஸ்போர்ட் மோடில் 2500 rpm கடந்தால் திகட்டும் அளவு வேகத்தைக் கொடுக்கிறது டியாகோ JTP. டாடாவின் பெட்ரோல் இன்ஜின்களுக்கு டார்க் கிடைக்க அதிக RPM போகவேண்டும் என்பதில்லை. அதே நேரத்தில் அபார்த் புன்ட்டோ போல மிட் ரேஞ்சில் டார்க்கை அள்ளிக் கொடுக்கவில்லை. அதிகபட்ச இன்ஜின் வேகம் 6000rpm. டார்க் அதிகம் கிடைக்கவேண்டும் என்றால், காரை 5500rpm வரை கொண்டுசெல்ல வேண்டும். 

டியாகோ

JTP மாடல், வளைவுகளில் ஓட்டுவதற்குக் குஷியாக உள்ளது. அதற்குக் காரணம் இதன் ஸ்மூத்தான கியர்பாக்ஸ். அவ்வப்போது கியர் மாற்றத் தேவையில்லை. கியர் மாற்றும் நேரம் வந்தாலும் பிரச்னை இல்லை. கியர்பாக்ஸ் லைட்டாகவே உள்ளது. இன்ஜினிலிருந்து வரும் டர்போ சத்தம், காரை இன்னும் விரட்டத் தூண்டுகிறது. எக்ஸாஸ்ட் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் ஒரு சொகுசு கார் ஃபீல் கிடைத்திருக்கும். சிட்டியில் ஓட்டும்போது பழைய டியாகோவைவிட காரின் ஆக்ஸிலரேஷன் முன்னேறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், மாருதியின் K12 இன்ஜின் அளவு ஸ்போர்ட்டியாக இல்லை. சஸ்பென்ஷனில் ஸ்பிரிங் உயரத்தைக் குறைத்திருப்பது, டாம்ப்பர்களை மாற்றியமைத்திருப்பது, பெரிய 185/60 R15 டயர்களைப் பொருத்தியிருப்பது போன்றவை காரை விரட்டி ஓட்டுவதற்கு நம்பிக்கை கொடுக்கிறது. 

டியாகோவின் ஸ்டியரிங் ரொம்பவே மென்மையாக இருக்கும். JTP மாடலில் ஸ்டியரிங் கொஞ்சம் டைட்டாகவும் ஃபீட்பேக் அருமையாகவும் உள்ளது. ஆனால், நம்பிக்கையாக ஓட்டுவதற்கு இன்னும் கொஞ்சம் ஸ்டியரிங்கை டைட்டாக்கியிருக்கலாம். பெரிய டயர்கள் என்பதால் கிரிப்பும் கூடியிருக்கிறது. பிரேக்குகளில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் எதுவும் தேவைப்படவும் இல்லை. முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக்குகளின் நிற்கும் தூரம் அருமை. ஃபோக்ஸ்வாகன் போலோ அளவுக்கு இல்லையென்றாலும், 8 லட்சம் ரூபாய் விலையில் சிறந்த ஹேண்ட்லிங் கொண்ட கார் இதுதான்.

டாடா மோட்டார்ஸ்

விலை ஓகேவா?

6,43,442 ரூபாய் என்ற சென்னை எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது டியாகோ JTP. சாதாரண டியாகோ பெட்ரோல் மாடலைவிட 1.2 லட்சம் ரூபாய் விலை அதிகம். ஆனால், கொடுக்கும் காசுக்கு இன்டீரியர், எக்ஸ்டீரியர் மட்டுமல்லாமல் இன்ஜின், சஸ்பென்ஷன் என எல்லா இடங்களிலும் சரியான முன்னேற்றங்கள் உள்ளன. பர்ஃபாமன்ஸ் பிரியர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த JTP, 8 லட்சம் ரூபாய்க்குச் சரியான பர்ஃபாமென்ஸ் கார். மைலேஜ் விரும்பிகளும், காரில் அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களும் வேறு கார்களைப் பார்க்கவேண்டியதுதான்.


டிரெண்டிங் @ விகடன்