Published:Updated:

``கோல்டு மெடலிஸ்ட்... ஆனாலும், வேலை இல்லாம புறக்கணிக்கப்பட்டேன்!" திருநங்கை அனுஸ்ரீ

``கோல்டு மெடலிஸ்ட்... ஆனாலும், வேலை இல்லாம புறக்கணிக்கப்பட்டேன்!" திருநங்கை அனுஸ்ரீ
News
``கோல்டு மெடலிஸ்ட்... ஆனாலும், வேலை இல்லாம புறக்கணிக்கப்பட்டேன்!" திருநங்கை அனுஸ்ரீ

"ப்ளஸ் டூ-வுக்கு அப்புறம் வெளியில் திருநங்கைகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால், கடை ஏறுதல், பாலியல் தொழில் என்பதே அவங்களுக்கான அடையாளமாக இருக்கிறது தெரிஞ்சது. அதேமாதிரி நாம ஆகிடக்கூடாது. எல்லோருக்கும் ரோல் மாடலாக இருக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்."

மூகப் போராளியாக அறிமுகமானவர், திருநங்கை அனுஸ்ரீ. நாடகங்கள் மூலம் திருநங்கைகளின் வலியைப் பகிர்வதில் முக்கியமானவர். பெண்களுக்கான வன்முறைக்கு எதிராக அமைதி எதிர்ப்புப் பயணத்தில் கலந்துகொண்டவர்களில், ஒரே ஒரு திருநங்கை இவர் மட்டுமே. பல்வேறு வலிகளைக் கடந்து, பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். அவரிடம் பேசினோம்.

''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பிறக்கும்போதே, நான் நார்மல் பையனாக இருக்க மாட்டேன் என மருத்துவர்கள் சொல்லிட்டாங்களாம். உடல் ரீதியான பிரச்னைகளோடு பிறந்ததால், அப்பாவும் அம்மாவும் என்னை ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கிட்டாங்க. எனக்கு அண்ணன், அக்கா, இரண்டு தம்பிங்க இருக்காங்க. என்னை வீட்டைவிட்டு எங்கேயும் அனுப்பாமல், அவ்வளவு செல்லமா பார்த்துக்கிட்டாங்க. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு விபத்துல அம்மா, அப்பா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. அப்புறம், என் வாழ்க்கையே தடுமாறி திசைமாறிடுச்சு'' எனச் சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்ந்தார் அனுஸ்ரீ.

''என் அண்ணனும் அக்காவும் அவங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. நானும் ரெண்டு தம்பிகளும் எங்கே போறதுன்னு தெரியாமல் இருந்தோம். எங்க சித்தியும் சித்தப்பாவும் கொஞ்சம் உதவி பண்ணினாங்க. நான் ஸ்கூல் படிச்சுக்கிட்டே வீட்டு வேலைக்குப் போவேன். நிறைய கம்பெனிகளில் பெருக்குற வேலைக்குப் போவேன். அப்படிப் போன ஓர் இடத்துல இலவசமா பியூட்டிஷியன் கோர்ஸ் கத்துக்கொடுத்தாங்க. அதை முடிச்சு வேலை பார்த்து, என் தம்பிகளைப் படிக்கவெச்சேன். ப்ளஸ் டூ-வுக்கு அப்புறம் வெளியில் திருநங்கைகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால், கடை ஏறுதல், பாலியல் தொழில் என்பதே அவங்களுக்கான அடையாளமாக இருக்கிறது தெரிஞ்சது. அதேமாதிரி நாம ஆகிடக்கூடாது. எல்லோருக்கும் ரோல் மாடலாக இருக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங் மூலமாக ஒரு கல்லூரியில் சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். காலேஜ் படிக்கும்போதும் நைட் வேலைக்குப் போவேன். அப்போதுதான் எனக்கான ஃபீஸையும், தம்பிகளுக்கான ஃபீஸையும் கட்டமுடியும். ஒருநாள்கூட சும்மா இருக்காம ஓடிட்டே இருந்தேன். காலேஜில் எந்தப் பையனோடும் பேச மாட்டேன். பொண்ணுங்களோட பேசுவேன். எல்லாப் பொண்ணுகளும் என்னோடு பேசறது என் கிளாஸ் பசங்களுக்குப் பிடிக்கலை. என் மேலே கோபப்பட்டாங்க. ஒருகட்டத்தில் அடிக்கவே வந்துட்டாங்க. வேற வழி தெரியாமல், நான் திருநங்கை என்பதை கல்லூரி முதல்வரிடம் சொன்னேன். கல்லூரியில் எல்லோரும் என்னை ஏத்துக்கிட்டாங்க. ஆபரேஷன் பண்ணதுக்கு அப்புறமாகத்தான் முழுப் பெண்ணாக மாறணும்னு உறுதியா இருந்தேன். அதனால், காலேஜ் முடிக்கிற வரை ஆண் உடையிலே இருப்பேன். 2012-ம் வருஷம், என் குடும்பத்தின் முதல் பொறியியல் பட்டதாரி ஆனேன். அதோடு, கோல்டு மெடலிஸ்ட்'' என்ற அனுஸ்ரீயின் முகத்திலும் குரலிலும் அவ்வளவு மிளிர்வு.

``நான் காலேஜ் முடிக்கும்போது, என் தம்பிகளும் காலேஜ் முடிச்சுட்டாங்க. அவங்க திருமணம் செஞ்சுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டதும் என்னை உதறிட்டாங்க. அதுக்காக அழல. படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெச்.ஆர் பணியில் சேர்ந்தேன். அதில் சம்பாதித்த பணத்தில் 2013-ம் வருஷம் ஆபரேஷன் செஞ்சுக்கிட்டேன். முழுப் பெண்ணாக மாறி அதே நிறுவனத்துக்கு வந்தேன். 'ஸாரி, உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது'னு சொல்லிட்டாங்க. நிறைய நிறுவனங்களில் இதேதான். திறமை இருந்தும் மறுக்கப்பட்டேன்.

வேலைவாய்ப்பு முகாமில் ஆறாவது ஆளாக பதிவுசெஞ்சேன். அந்த 6 பேரில் முதல் புரொபஷனல் டிகிரி நான்தான். அப்படியிருந்தும் இன்னைக்கு வரை எந்த வேலையும் கிடைக்கலை. இனியும் தனியார் நிறுவனத்தை நம்பக்கூடாதுன்னு, அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். அந்த நேரத்தில், ஒரு போராட்டக்களத்தில் கிரேஸ் பானு அறிமுகமானாங்க. அவங்களோடு பயணிக்க ஆரம்பிச்சேன். டி.என்.பி.எஸ்.சி தேர்வை திருநங்கைகள் எழுதலாம்னு போராடி, சட்டத்தை வாங்கினோம். ஆனா, அவங்களை வேலைக்கு எடுக்கணும்னு சட்டம் போடாதது தப்பா போச்சு. நான் திருநங்கையாக மாறினதிலிருந்து டி.என்.பி.எஸ்.சி எழுதறேன். வேலை மட்டும் கிடைக்கவே இல்லை. அந்த நேரத்தில், எப்படி வழக்கு தொடரணும்னு தெரியலை. 2015-ம் வருஷம் டி.என்.பி.எஸ்.சி எழுதினேன். 2016-ல் ரிசல்ட் வந்துச்சு. அப்புறம், கிரேஸ் பானு மூலமா வழக்கு தொடர்ந்தேன். ஒரு பக்கம் அந்த வழக்குப் போயிட்டிருக்கு.

இன்னொரு பக்கம், கிரேஸ் பானுவுடன் சேர்ந்து திருநங்கைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்காகப் பயணிக்க ஆரம்பிச்சேன். அவங்க என் நெருங்கிய தோழி. அவங்களால்தான் எதுவும் என்னால் முடியும் என்கிற நம்பிக்கை வந்துச்சு. சென்னையில் கிரேஸ் பானு ஆரம்பிச்ச Trans Rights Now Collective அமைப்பின், முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருக்கேன். நாடகங்கள் மூலமாகத்தான் நம் வலியை மக்களிடம் கடத்தமுடியும். அதனால், நாடகங்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். பெண்களுக்கான வன்முறைக்கு எதிரான அமைதிப் பேரணியில் ஒரே ஒரு திருநங்கையாக நானும் கலந்துக்கிட்டேன். பல இடங்களில் திருநங்கைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திட்டிருக்கேன். தொடர்ந்து திருநங்கைகளுக்காகப் பயணிப்பேன்'' எனத் தன்னம்பிக்கைத் ததும்ப பேசுகிறார் அனுஸ்ரீ.