ராஜலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்..! கலை வடிவ போராட்டத்தில் பெண்கள் | Get justice for Rajalakshmi..Artistic Struggle!

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (30/10/2018)

ராஜலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்..! கலை வடிவ போராட்டத்தில் பெண்கள்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தளவாய்ப்பட்டி சுந்தரபுரத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான ராஜலட்சுமியை, இவரின் பக்கத்து வீட்டில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், பாலியல் துன்புறுத்தித் தலையைத் துண்டித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் மௌனம் காத்து வருவதாகப் பலர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டிவருகின்றனர். 

இந்தச் சம்பவத்தை எதிர்த்தும், ராஜலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும்,  மேலும் இந்தச் சம்பவம் குறித்து பொது மக்களின் கவனம் ஈர்க்கவும் நாளை அக்டோபர் 31-ம் தேதி மாலை 4.30 மணியளவில், பட்டியலினப் பெண்கள் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகில், 'நம் மௌனத்தின் வன்மம்' என்ற பெயரில் கலை வடிவப் போராட்டம் நடை பெறும். இந்தப் போராட்டத்தில், பல்வேறு கலைக் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், புத்தர் கலைக்குழு, அறம் கலைக்குழு, மையம் கலைக்குழு மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் டி.எம்.கிருஷ்ணா கலந்துகொள்ள உள்ளார்.

ராஜலட்சுமி 

பட்டியலினப் பெண்கள் முன்னெடுக்கும் இந்தக் கலை வடிவப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பங்காற்றுகின்றனர்.

செம்மலர்இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களில் ஒருவரான பேராசிரியர் செம்மலர்,  போராட்டத்தைப் பற்றிக் கூறுகையில், "பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக பொது சமூகத்தில் இருந்து எதிர்ப்புக் குரல் வருவதில்லை. அதிலும் குறிப்பாக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் வெளியில் வருவதேயில்லை. மீறி வந்தாலும் அதைப் பெரிதாக இந்தச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணி செய்யும் அமைப்புகள், இந்தச் சம்பவத்தில் மௌனம் காப்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.

தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வெளியே சொன்னதால் தலை துண்டாக்கப்பட்டு, நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட 13 வயது பட்டியலினச் சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கும், போராடித்தான் நீதி பெறவேண்டிய சூழல் எழுந்துள்ளது. இதை அனைவரும் உணர்ந்து, பட்டியலினப் பெண்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் தகவல்களுக்கு: Violence Of Silence(Speak up with the marginalised)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க