வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (30/10/2018)

கடைசி தொடர்பு:20:50 (30/10/2018)

உச்ச நீதிமன்றம் வெடிக்கச் சொன்ன பசுமைப்பட்டாசு... எப்படி வெடிக்கும்? #GreenCrackers

தற்போது விற்பனைக்குக் கொண்டுவந்த சில வகைப் பசுமைப் பட்டாசுகள் அமேசான் போன்ற இணையச் சந்தைகளில் மட்டுமே கிடைக்கின்றன. இது மொத்த விற்பனையாளர்களையும், மற்ற பட்டாசுத் தொழிலாளர்களையும் வெகுவாகப் பாதிக்கும்.

உச்ச நீதிமன்றம் வெடிக்கச் சொன்ன பசுமைப்பட்டாசு... எப்படி வெடிக்கும்? #GreenCrackers

வ்வோர் ஆண்டும் குழந்தைகள் ஆசை ஆசையாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. அப்படிக் காத்திருந்தவர்களுக்கு அதற்கு முந்தைய நாளின் இரவைக் கழிப்பது எப்போதுமே பெரும்பாடுதான். வாங்கிய பட்டாசுகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து அதை ஒவ்வொரு நாளும் வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்திய நம் குழந்தைப் பருவ நினைவுகள் பசுமையானவை. அத்தகைய தீபாவளியை நம் சந்ததிகள் கொண்டாட முடியாத வகையில் நாம் சூழலை அழித்துவிட்ட நினைவுகளும் ரணமாகப் பதிந்துகிடப்பது நிதர்சனம். தீபாவளியைச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத விதமாகக் கொண்டாட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் காலங்களில் இரவு 11.55 முதல் 12.30 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்குமே நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான் காரணம். மாசுபாட்டை அதிகப்படுத்தாத வகையிலும் மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் பாதித்து விடாமலிருக்கவும் வேண்டும். அதற்கு வழிசெய்வதே இந்தப் பசுமைப் பட்டாசுகள். பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், கந்தக ஆக்ஸைடு போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேற்றும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் பட்டாசுகளைத் தடைசெய்துள்ளது. வாயு வெளியேற்றுவதில் மிகக் குறைவான திறனுடைய பட்டாசுகளையும் அவற்றோடு பசுமைப் பட்டாசுகளையும் வெடிக்கலாம். அதைத் தவிர மற்றவற்றை வெடிக்கக் கூடாது. அத்தகைய தயாரிப்புகள் மட்டுமே இந்த வருடம் சந்தைகளுக்குச் செல்லவேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு.

அதென்ன பசுமைப் பட்டாசுகள்?

பட்டாசுகள்

தற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காது. இவற்றில் வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் குறைவான வாயு உமிழ்வும் அதன் விளைவாகக் குறைந்த காற்று மாசுபாடுமே ஏற்படும். மாசுபாடே ஏற்படாத வகையில் வெடிக்காது என்றாலும் முடிந்தவரை மாசு அளவைக் குறைக்கலாம். இதைத் தயாரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன.

இந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research - CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள். அவர்களின் திட்டப்படி ஆபத்தான வேதிமப் பொருள்களுக்குப் பதிலாகக் குறைந்தபட்ச பாதிப்புகளைக் கொண்ட மூலப்பொருள்களை மாற்றிவிட்டால் பட்டாசுகளால் ஏற்படும் சூழலியல் கேடுகளும் குறையும். அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது மொத்தம் நான்கு வகைச் சூத்திரங்களைக் கண்டறிந்தனர். இப்போது வெளியாகும் மாசுபாட்டில் அதிகபட்சம் 40 சதவிகிதம் குறைவான நுண்துகள்களை அவை வெளியேற்றின. அதே 40 சதவிகிதம் நுண்துகள் வெளியேற்றத்தைக் குறைத்து இரவுநேரக் கொண்டாட்டத்துக்கான புஸ்வானங்களையும் உருவாக்கினார்கள். பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) என்ற நச்சுப்பொருளைத் தவிர்த்துத் தயாரிக்கப்பட்ட புஸ்வானங்கள் இப்போது சோதனையில் உள்ளன. குழந்தைகளால் வெடிக்கப்படும் ஊசி வெடிகளின் (Bijli) தரமும் தற்போது சோதனையில் உள்ளது. அதில் அவர்கள் குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாம்பல்களை வெளியேற்றும் ஈரமுறிஞ்சி வேதிமங்களைத் (Desicants) தவிர்த்துள்ளார்கள்.

வெடிக்கும்போது ஒலியேற்பட உதவும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட அதேபோன்ற ஒலியேற்படுத்தும் திறனோடு இருப்பவை இந்தப் பசுமைப் பட்டாசுகள். அதனால் வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னைகள் இவற்றால் இருக்காது. அதேசமயம், வெடித்தால் புகை வெளியேறாமல் நீரை வெளியேற்றும் பட்டாசு வகைகளும், குறைவான அலுமினியத் துகள்களை வெளியேற்றும் வெடிகளும் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட உள்ளன. வெடிக்கும்போது அந்தப் பட்டாசுகள் நீராவியை வெளியேற்றுவதால் அதிலிருந்து வெளியாகும் நுண்துகள்களைக் காற்றில் கலக்கவிடாமல் மண்ணோடு அழுத்திவிடும். இந்த வகைப் பட்டாசுகள் தற்போது பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பில் (Petroleum and explosives safety organisation) சோதனையில் உள்ளன. 

தரக்குறைவான மூலப்பொருள்களைப் பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்துவது ஆபத்தானது. அதை நெறிமுறைப்படுத்துவதே இந்த ஆய்வாளர்களின் நோக்கம். அதற்காகத் தற்போது பசுமைப் பட்டாசுகளின் நச்சுப்புகை வெளியேற்றத்தையும், ஒலி மாசுபாட்டையும் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றோடு சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசும் ஏற்படுத்தாத மின் பட்டாசுகளையும் புழக்கத்துக்குக் கொண்டுவரப் போகிறார்கள். அவை ராஜஸ்தான் மாநிலத்தின் பிலானி என்ற நகரத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி

பசுமைப் பட்டாசுகள் இன்னமும் பெரியளவில் சந்தைக்கு வரவில்லை. இவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று இந்தியத் தலைநகர் டெல்லிக்கு மட்டுமே தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த வகைப் பட்டாசுகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவர்களுக்கு வசதியான நேரத்தைப் பொறுத்து பட்டாசு வெடிப்பதற்கான இரண்டு மணிநேர காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்போது பசுமைப் பட்டாசுகளுக்கான சந்தைப் பெருமளவில் இல்லை. தற்போது விற்பனைக்குக் கொண்டுவந்த சில வகைப் பசுமைப் பட்டாசுகள் அமேசான் போன்ற இணையச் சந்தைகளில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த நிலையே தொடரக் கூடாது. அடுத்த வருடத்துக்குள் மொத்த விற்பனையாளர்களுக்கும் இது கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இல்லையேல் மொத்த விற்பனையாளர்களையும், மற்ற பட்டாசுத் தொழிலாளர்களையும் வெகுவாகப் பாதிக்கும் நிலை உருவாகும். பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கவும் அதை விற்பனை செய்யவும் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் உரிமம் வழங்கி, அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அதுவே ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பட்டாசுத் தொழிற்சாலைகளைக் காப்பாற்றும். அதைச் சார்ந்து வாழும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வும் பாதிக்கப்படாதவாறு பசுமைப் பட்டாசுகளை மக்களிடம் கொண்டுசேர்க்க அரசு வழிசெய்ய வேண்டும். அதுவே தீபாவளியை அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியானதாக்கும்.


டிரெண்டிங் @ விகடன்