வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (31/10/2018)

கடைசி தொடர்பு:09:56 (31/10/2018)

படிப்பு, அனுபவம் மட்டுமில்லை... வெற்றிக்கு 'அந்த' ஒரு விஷயமும் முக்கியம்! #MotivationStory

வேலையில் சேருவதற்கு தகுதியும் திறமையும் மட்டும் போதாது... உடல்மொழியும் முக்கியம் பாஸ்! 

படிப்பு, அனுபவம் மட்டுமில்லை... வெற்றிக்கு 'அந்த' ஒரு விஷயமும் முக்கியம்! #MotivationStory

து ஒரு பரபரப்பான நகரம். அங்கு நிறைய மென்பொருள் நிறுவனங்கள் இருந்தன. உலக அளவில்  முன்னணியாக விளங்கும் பல தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் அவை மென்பொருள்களை உற்பத்தி செய்து அனுப்பிக்கொண்டிருந்தன. அப்படியான ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர கார்மேகம் முயன்று கொண்டிருந்தார். ஆனால், அவர்களது முயற்சிகள் பலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நேர்காணலுக்குச் செல்வதும் வாய்ப்புக் கிடைக்காமல் திரும்புவதுமாக இருந்தார். ஆனால், எதனால் தனக்கு வாய்ப்பு அமையவில்லை என்கிற காரணத்தை மட்டும் அவரால் கண்டறிய முடியவில்லை. 

வேலையில் சேர திறமை வேண்டும்

இத்தனைக்கும் அவர் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்கில் கோல்டுமெடலிஸ்ட்.  ஏற்கெனவே, சில நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் இருந்தது. ஆனால், அவரை வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்கள் தயங்கின. ஒவ்வொருமுறை வேலைக்கு விண்ணப்பிக்கும்போதும் தன்னுடைய `பயோ-டேட்டா’வை மிகவும் சிறப்பாக வடிவமைத்து, வேலைக்கு எடுப்பவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தயார் செய்திருப்பார். எழுத்துத் தேர்விலும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சரியான பதிலையே அளித்திருப்பார். குரூப் டிஸ்கஷனிலும்கூட அவர் சரியான வாதத்தையே முன் வைப்பார். இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை!

ஒருநாள் மிகவும் மனம் வெதும்பி, ஒரு டீக்கடையில் நின்றபடி 'தான் ஏன் தவிர்க்கப்படுகிறோம்' என்று யோசித்துக்கொண்டிருந்தார்.  அப்போது, அவருடைய நண்பர் சமுத்திரம் அங்கே வந்தார். அவரிடம், தன் தோல்விக் கதைகளைச் சொல்லிக்கொண்டே போனார் கார்மேகம். அவர் கதையை முழுவதுமாகக் கேட்ட நண்பர், `முயற்சியைக் கைவிடாதே.. சீக்கிரமே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று நம்பிக்கையளித்துவிட்டுப் போனார். அடுத்து இரண்டு, மூன்று நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக இன்டர்வியூ போய்விட்டு, வெறுங்கையோடு திரும்பினார் கார்மேகம்.

`திறமையும், அனுபவமும் இருந்தும் தனக்கு ஒரு வாய்ப்பு அமையவில்லையே’ எனத் தன்னையே நொந்துகொண்டார். பிறகு, தன்னுடைய கையில் வைத்திருந்த சிறு குறிப்பை எடுத்துப் பார்த்தார். அதில் எந்தெந்த நிறுவனங்களுக்கு அடுத்து இன்டர்வியூ செல்ல வேண்டும் என்பது இருந்தது. அதில், கடைசியாகச் சமுத்திரத்தின் அலுவலகப் பெயரும் இடம்பெற்றிருந்தது. கடைசியாக, அந்த நிறுவனத்துக்கும் நேர்காணலுக்குப் போனார். எல்லா கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். குழு விவாதமும் கூட நன்றாகத்தான் போனது. 

வெற்றிவாய்ப்பு

இன்டர்வியூ முடித்துவிட்டு, அந்த அலுவலகத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் ஒரு டீ சொல்லிவிட்டு, சமுத்திரத்துக்குப் போன் செய்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த சமுத்திரம், நேர்காணல் குறித்து விசாரித்ததோடு, வாழ்த்துச் சொல்லி உற்சாகப்படுத்தினார். அப்போது, கார்மேகத்திடம் நேர்காணல் செய்த அதிகாரி அதே டீக்கடைக்கு டீ குடிக்க வந்தார். அவரைப் பார்த்ததும் இருவரும் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

மாலை நேரம். அலுவலகம் முடிவதற்கு சில நிமிடங்களுக்குப் முன்பாக, சமுத்திரத்தை, அதிகாரி தன்னுடைய கேபினுக்கு அழைத்தார். பயந்துகொண்டே அதிகாரியின் அறைக்குள் அவர் நுழைந்தார். கார்மேகம் குறித்து அதிகாரி அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவரும் உரிய பதில்களைச் சொன்னார். இறுதியாக, ``உங்களுடைய நண்பர் ரொம்பத் திமிரு பிடித்தவரோ.. அதிகாரி முன்னால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட தெரியவில்லையே?’’ என்று கடிந்துகொண்டார். அப்போதுதான் நண்பருக்குக் கார்மேகத்தின் உடல்மொழி மனதில் நிழலாடியது.

 சமுத்திரத்துக்கு உண்மை புரிந்துவிட்டது. பிறகு, கார்மேகத்தின் நேர்மையையும் விடாமுயற்சியையும் அதிகாரியிடம் எடுத்துக்கூறி, ``அவரது உடல்வாகே அப்படித்தான் சார்.. பார்ப்பவர் கண்களுக்கு அப்படித் தோற்றமளித்திருக்கலாம். வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை உங்களை வந்து பார்க்கச் சொல்லட்டுமா சார்..'' என்று பணிவோடு கேட்டார். அதிகாரி ``சரி..’’ என்று தலையசைத்தார். அன்று இரவே, கார்மேகத்துக்குச் சமுத்திரம் போன் செய்து, அவரது நடத்தையைப் பற்றி விளக்கினார். நாளை அதிகாரி நேரில் வரச் சொல்லியிருப்பதையும் சந்திக்கும்போது `உடல்மொழியில் கவனம் தேவை' என்பதைச் சொல்லி, எச்சரிக்கை செய்தார். 

உடல்மொழி

அதிகாலையே கார்மேகம் எழுந்துவிட்டார். குளித்துவிட்டு, சரியான ஆடைகளை அணிந்துகொண்டு நிலைக்கண்ணாடியில் முதன்முறையாக தன் முகத்தைத் தவிர்த்துவிட்டு தான் நிற்கும் நிலையைக் கவனித்தார். நெடுங்காலமாக, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டும், இடுப்பில் கை வைத்துக்கொண்டு, வயிற்றுக்கு முட்டுக்கொடுப்பது போல நின்றுகொண்டிருந்தது அவருக்கு பளிச்சென தெரிந்தது. கார்மேகம், தன்  தவற்றை உணர்ந்தார். பிறகு, இரண்டொருமுறை உடல்மொழியை மாற்றினார். பிறருக்கு மரியாதை தரும் வகையில் நின்றும், நடந்தும் பார்த்தார். அப்போது, உடலில் சில பாகங்களில் வலிப்பது புரிந்தது. ஆனாலும், முயற்சியைக் கைவிடவில்லை. அப்படி நடக்கும்போது முன்பைவிட தன்னிடம் ஒரு மாற்றம் நடப்பதை உணர்ந்தார். அவரது உள்ளத்தில் உற்சாகம் பீரிட்டது. 

சமுத்திரம் சொன்ன நேரத்துக்கு, அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் கார்மேகம். அதிகாரி அவரைச் சிறிது நேரம் காத்திருக்கக் கூறியதாக, அலுவலக ரிசப்ஷனிஸ்ட் கூறியதைக் கேட்டு, அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் கார்மேகம். இரண்டாவது மாடியில், தனது கேபினில் அமர்ந்தவாறே, முன்னால் இருந்த சிசிடிவி கேமராவில் கார்மேகத்தின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்தார் அதிகாரி!

திறமை, அனுபவம் உள்ளவருக்கே வெற்றி

சில நிமிடங்களுக்குப் பிறகு வரவேற்பறை பெண்ணுக்கு போன் செய்தார். அந்தப் பெண், கார்மேகத்தை அழைத்து, ``உங்களை அதிகாரி கிளம்பச் சொல்லிவிட்டார்... இன்று அவர் கொஞ்சம் பிஸியாக உள்ளார்’’ என்று கூறினாள். கார்மேகம் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் வெளியேறும்போது, அவரது மின்னஞ்சல் முகவரிக்கு வேலையில் சேரச் சொல்லி, அந்த அதிகாரி ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டார்.

நீதி : வேலையில் சேருவதற்கு தகுதியும் திறமையும் மட்டும் போதாது... உடல்மொழியும் முக்கியம் பாஸ்!