வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (01/11/2018)

கடைசி தொடர்பு:09:05 (01/11/2018)

தீபாவளி ஷாப்பிங்... உங்கள் பர்ஸைப் பதம் பார்க்கும் 5 தவறுகள்!

தீபாவளி ஷாப்பிங் செல்லும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். ஆடைகளில் தொடங்கி, பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் அதிகமான விலைகளில் விற்கப்படலாம்.

`தீபாவளிக்கு, அநாவசியமாக ஒரு ரூபாய்கூட செலவழிக்க மாட்டேன்!' என உங்களுக்கு நீங்களே சபதம் போட்டுக்கொண்டாலும், `பம்பர் ஆஃபர்', `அதிரடிச் சலுகை', இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்', `டிவி வாங்கினால் மொபைல் பரிசு'... என உங்களை எப்படியாவது வலையில் சிக்கவைக்கக்கூடிய அறிவிப்புகளை, பல கடைகளில் நீங்கள் பார்க்க முடியும். 

தீபாவளி

சிலர், `எப்பவுமா செலவழிக்கிறோம்... பண்டிகை நாள்ல மட்டும்தானே!' என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்துகொண்டு, விழாக்காலத் தள்ளுபடியில் வாங்குகிறேன் என்று பணத்தைத் தாராளமாகச் செலவு செய்துவிட்டு, பிறகு புலம்பிக்கொண்டிருப்பார்கள். கடைக்காரர்களின் இதுபோன்ற அறிவிப்புகளில் ஏமாந்து பணத்தை இழக்காமல் இருப்பதற்கான சில உஷார் டிப்ஸ் இங்கே...

1. விலை தள்ளுபடி 

மனைவி நீண்டநாளாகக் கேட்டுக்கொண்டிருக்கும் நான்-ஸ்டிக் தவா ஒன்றை வாங்குவதற்காகச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கடைக்காரரோ, நான்-ஸ்டிக் தவாவில் உள்ள அனைத்து வகைகளும் அடங்கிய ஒரு `செட்'டை 20 சதவிகிதத் தள்ளுபடி விலையில் தருவதாகக் கூறி உங்கள் தலையில் கட்டப் பார்ப்பார். நீங்களும் விலையில் 20 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கிறதே என்று, தேவையான ஒரு தவாவுக்குப் பதிலாக, அனைத்து வகைகளையும் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இங்கே ஏமாந்தது நீங்கள்தாம். உங்களுக்குத் தேவை ஒன்றுதான். ஆனால், கடைக்காரர் சாமர்த்தியமாகப் பேசி உங்களை, அனைத்து வகைகள் அடங்கிய ஒரு தவா `செட்'டையே வாங்கவைத்துவிட்டார். இதனால், ஒன்றுக்கு ஐந்து மடங்கு பணத்தை நீங்கள் செலவிடவேண்டியதாகிவிடும். எனவே, விலை தள்ளுபடி, டிஸ்கவுன்ட் என்று கடைக்காரர் உதார்விட்டால், உஷாராகிவிடுங்கள்.

2. இது வாங்கினால் அது இலவசம்

ஒரு சூட்கேஸோ அல்லது ஒரு மிக்ஸியோ வாங்கச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது கடைக்காரர், சூட்கேஸ் அல்லது மிக்ஸியுடன் ஒரு லன்ச்பாக்ஸ் இலவசம் என்று சொன்னால், அந்த வலையில் விழுந்துவிடாதீர்கள். இதுபோன்ற `இலவசங்கள்' எல்லாம் நம்மைக் கடைக்காரரின் வலையில் சிக்கவைப்பதற்கான தந்திரங்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

நீங்கள் வாங்கச் சென்றதோ சூட்கேஸ் அல்லது மிக்ஸி மட்டும்தான். ஆனால், உங்களுக்குத் தேவையேபடாத லன்ச்பாக்ஸையும் சேர்த்துக் கொடுக்கும்போது நிச்சயம் சூட்கேஸை/மிக்ஸியை மட்டும் வாங்க மாட்டீர்கள். லன்ச்பாக்ஸையும் சேர்த்துதான் வாங்குவீர்கள். இதன்மூலம் கடைக்காரர் லன்ச்பாக்ஸுக்கான விலையையும் சூட்கேஸில் சேர்த்து, ஒரே நேரத்தில் இரண்டு பொருள்களை உங்களிடம் விற்று லாபம் பார்த்துவிடுவார். அதுவும் இலவசமாகக் கிடைக்கும் அந்த லன்ச்பாக்ஸ் தரமற்றதாகவும் இருக்க வாய்ப்புண்டு. மேலும், அந்தப் பொருள் உங்களுக்குத் தற்போது தேவைப்படாத ஒன்று என்பதால், அது வீட்டில் இடத்தை அடைத்துக்கொண்டுதான் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் இதுபோன்று இலவசமாக வாங்கப்படும் பொருள்கள் கடைசியில் பரணுக்குத்தான் செல்லும். 

3. தீபாவளி நெருக்கடியில் ஷாப்பிங்

தீபாவளிக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில், ஷாப்பிங் செல்லும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். ஆடைகளில் தொடங்கி பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் அதிகமான விலைகளில் விற்கப்படலாம். மேலும், அவசரத்தில் தரமற்றப் பொருள்களையும் வாங்க நேரலாம். எனவே, பண்டிகைக்குச் சில நாள்கள் முன்னதாகவே ஷாப்பிங்கை வைத்துக்கொள்வது நல்லது. ஆனால், பணம் கடைசி நேரத்தில்தான் கிடைத்தது அல்லது முன்கூட்டியே செல்ல நேரமில்லை என்ற சூழலில் ஷாப்பிங் சென்றால், அதிகக் கூட்டம் இல்லாத, அதே நேரத்தில் தரமான பொருள்களை விற்கும் கடைக்குச் சென்று வாங்கலாம். 

ஷாப்பிங்

4.  இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்

இரண்டு பேன்ட் வாங்கினால் ஒரு டி-ஷர்ட் இலவசம் அல்லது இரண்டு சேலை வாங்கினால் ஒரு ஜாக்கெட் பிட் இலவசம் என்பதுபோன்ற அறிவிப்புகளை அள்ளிவிடும் கடைகளுக்குச் சென்றால், அவர்கள் இலவசமாகத் தரக்கூடிய பொருள் தரமற்றதாகவும் விலை குறைந்ததாகவும் இருக்கும். ஆனால், அதற்கு நீங்கள் அதிக விலை கொடுக்கவேண்டியதாகிவிடும். எனவே, இதுபோன்ற இலவசப் பொருளை வாங்காமல், அதற்குப் பதிலாக நீங்கள் வாங்க எண்ணிய பொருளின் விலையைக் குறைக்க முடியுமா எனப் பேரம் பேசுங்கள். 

5. பட்டியல் தயாரித்துக்கொள்ளுங்கள்

தீபாவளிக்கு என்னவெல்லாம் வாங்க வேண்டும் என ஒரு லிஸ்ட் தயாரித்துக்கொண்டு ஷாப்பிங் செல்லுங்கள். இதில் மிக முக்கியமானது, லிஸ்ட்டில் உள்ள பொருள்களைத் தவிர வேறு எதையும் வாங்காமல் இருப்பது. பட்ஜெட்டைத் தாண்டி வாங்கிவிட்டு, பிறகு அதை நினைத்து மனம் குமுறிக்கொண்டிருந்தால், தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல்போய்விடும். 

ஷாப்பிங்கில் உஷாராக இருந்தால், தீபாவளியும் கொண்டாட்டமாக அமையும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க