வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (31/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (31/10/2018)

சீனாவின் செயற்கை நிலவினால் என்ன பாதிப்பு? - ஆராய்ச்சியாளர் புதிய எச்சரிக்கை!

சீனாவின் செங்க்டு எனும் நகரத்தில், தெருவிளக்கு உபயோகத்தைத் தவிர்க்க, நம் நிலவை விட எட்டு மடங்கு அதிகப் பிரகாசத்தை வழங்கும் செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டம் ஒளி மாசை 47 மடங்கு அதிகரித்துவிடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்று செயற்கை நிலவுகள் 2022-ம் ஆண்டுக்குள் ஏவப்படும் என சமீபத்தில் 'சைனா டெய்லி' எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

நிலவு

“இந்த செயற்கை நிலவு, ஏற்கெனவே ஒளி மாசு அடைந்திருக்கும் ஒரு நகரத்தின் இரவு நேர வெளிச்சத்தைப் பெருமளவு அதிகரிக்கப் போகிறது. செங்க்டு நகரவாசிகள் தேவையில்லாத வெளிச்சத்தைத் தவிர்க்க முடியாமல் அவதியுறுவார்கள். நகரத்தில் வாழும் விலங்குகள் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள முடியாத நிலையில் துயரப்படும்” என்று இன்டர்நேஷனல் டார்க் ஸ்கை அசோசியேஷன் தலைவர் ஜான் பாரன்டைன், ‘போர்ப்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். சீனாவின் 'பீப்பிள்ஸ் டெய்லி' இதழ், இந்த செயற்கை நிலவு நம் நிலவைவிட எட்டு மடங்கு பிரகாசமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இயல்புநிலையில் நிலவொளியின் பிரகாசம் 0.3 லக்ஸ் என்ற அளவில் இருக்கும். பொதுவாக, நிலவின் ஒளி 0.15 - 0.2 என்ற அளவிலேயே இருக்கும். “இதிலிருந்து செயற்கை நிலவு 1.6 லக்ஸ் அளவுக்குப் பிரகாசத்தை வழங்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், செயற்கை நிலவில் பயன்படுத்தப்பட உள்ள பிரதிபலிக்கும் பரப்புகளை எல்லாம் கணக்கில் கொண்டால், பிரகாசத்தின் அளவு 255 mCd/m² அளவுக்கு அதிகரிக்கும். உலகின் பெரிய நகரங்களில் இருப்பதைப் போல செங்க்டு நகர்ப்பகுதிகளிலும் பிரகாசம் பரவிவிடும்” என்று எச்சரித்துள்ளார் பாரன்டைன்.

“2015ல் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, நகரத்தின் மையப்பகுதியில் ஒளியின் பிரகாசம் 5.43 mCd/m² என்ற அளவில் இருக்கிறது. செயற்கை நிலவு ஏவப்பட்ட பிறகு, இந்தப் பிரகாசத்தின் அளவு பாரன்டைன் கணக்கீட்டின்படி 255 mCd/m² ஆக அதிகரிக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், சீனாவின் செயற்கை நிலவுகள் வானில் பிரகாசத்தை 47 மடங்கு வரை அதிகரிக்கும். இது, புதிய சுற்றுச்சூழல் பிரச்னைகளை உருவாக்குவதுபோல ஆகிவிடும்” என்றும் எச்சரித்துள்ளார் பாரன்டைன்.