வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (01/11/2018)

கடைசி தொடர்பு:12:34 (01/11/2018)

வாவ் ஜாவா ஸ்பை படங்கள்... என்ஃபீல்டுக்கு செம போட்டி!

புதிய 300cc ஜாவா அடுத்த மாதம் வெளிவரக் காத்திருக்கும் நிலையில், முதல்முறையாக அதன் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. மஹிந்திரா மற்றும் க்ளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனங்கள் மீண்டும் ஜாவா பைக்குகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறார்கள். வரும் நவம்பர் 15-ம் தேதி மும்பையில் இந்த பைக் முதல்முறையாக காட்சிப்படுத்த உள்ள நிலையில், தற்போது இதன் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. 

ஜாவா

பைக்கின் பாடி முழுவதும் மறைத்துவைக்கப்பட்டிருந்தாலும் இதன் ரெட்ரோ ஸ்டைல் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதில் பழைய ஜாவா 350 பைக்கின் பாதிப்பு அதிகமாகத் தெரிகிறது. வட்டவடிவ ஹெட்லைட், ரோடு கிங் போல பாக்ஸ் வடிவத்தில் இல்லாமல் க்ளாசிக் 350 போல வளைவுகள் கொண்ட பெட்ரோல் டேங், பிரவுன் நிற சிங்கில் பீஸ் சீட், வட்டவடிவ மிரர்கள் மற்றும் இண்டிகேட்டர்கள், ரெட்ரோ ஸ்டைலில் முன்பக்க டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர் என மொத்தமும் ரெட்ரோதான்.

புதிய ஜாவாவின் side view

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மறைத்துவைக்கப்பட்டிருந்தாலும் அதன் வடிவத்தைப் பார்க்கும்போது டிஜிட்டலாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஸ்போக் வீல் மற்றும் MRF டயர்கள் உள்ளன. முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் பிரேக்கும் இருக்கின்றன. முன்பக்கம் ஏ.பி.எஸ் ஒயர் இருக்கிறது. அடுத்த ஆண்டு வரப்போகும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப சிங்கில் சேனல் ஏ.பி.எஸ் வைத்துள்ளார்கள். 

மஹராஸ்டிராவில் டெஸ்ட் செய்யப்படும் ஜாவா

மஹிந்திரா மோஜோ-வில் இருக்கும் ட்வின் டியூப் ஃபிரேம் போல் இல்லாமல் பைக்கின் ஃபிரேம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங் ஆர்ம் இதில் கொடுத்துள்ளார்கள். பைக்கைப் பார்க்கும்போது பழைய ஜாவாவின் ஸ்டைல் இருப்பது மட்டுமல்லாமல் முடிந்த அளவு எளிய பொருள்களைக்கொண்டு வடிவமைத்துள்ளார்கள் என்று புரிகிறது. ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மாடல்களுடன் போட்டிபோடவுள்ள இந்த பைக்கை 1.50 லட்சம் ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கலாம். பைக்கின் இன்ஜின் பற்றிய தகவல்களை இந்த நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி பைக் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்படும் நிலையில், அன்று விலை மற்றும் விற்பனைத் தேதிகள் அறிவிக்கப்படும்.