வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:45 (01/11/2018)

மீ டூ-வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? - பாரதி பாஸ்கர் அறிவுரை!

மீ டூ' விஷயத்தில், தினமும் ஒரு திரைப் பிரபலமாவது தங்கள் கருத்தையும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பதிவிட்டுவருகிறார்கள். இந்நிலையில், 'மீ டூ' பற்றி பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரிடம் பேசினோம்.

மீ டூ

"மீ டூ என்பது பெண்களுக்கான பிரச்னையாக மட்டுமே பார்க்கக் கூடாது. அது ஒரு சமூகப் பிரச்னை. எல்லாத் துறை பெண்களும் மீ டூ கதைகளைச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணாக இது என்னை மிகவும் வேதனைப்பட வைக்கிறது. அதேநேரம், ஒரு பெண்ணிடம் பேசினாலே தன்னைப் பற்றி பாலியல் புகார் கொடுத்துவிடுவாளோ என்று ஓர் ஆணும், தனக்கு ஏதும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று ஒரு பெண்ணும் நினைப்பது ஆரோக்கியமான சமூகம் கிடையாது. மீ டூ பிரச்னைக்கான தீர்வு, ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களின் கையிலும் இருக்கிறது.

உங்கள் பிள்ளைக்கு சாப்பிட, நடக்க, ஓட, விளையாட கற்றுக்கொடுப்பதுபோன்று, பெண்களிடம் கண்ணியமாக நடக்கவும் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுங்கள். ஒரு பெண், உதவியையோ, அறிவுரையோ ஓர் ஆணிடம் எதிர்பார்த்தால், அதைத் தனக்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பாலியல் பிரச்னை கொடுப்பது நிச்சயம். ஆண்களின் கண்ணியக் குறைவையே அது காண்பிக்கும். உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் திறமைக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் செய்யும் எந்த உதவிக்கும் சலுகை எதிர்பார்க்காதீர்கள். இது, மீ டூ-வுக்கு முற்றுப்புள்ளிக்காக இருக்கும்'' என்கிறார் பாரதி பாஸ்கர்.

மீ டூ-வை ஒழிப்போம்; வலிமையான சமூகத்தைக் கட்டமைப்போம்!